'இங்கே, இங்கேயே' - அறிவியல் புனைக்கதை - ஒரு வாசிப்பு
எழுத்தாளர் ஜெயமோகனின் 'விசும்பு' தொகுப்பில் இடம்பெற்ற 'இங்கே, இங்கேயே' சிறுகதை குறித்த ஒரு பார்வை.
அறிவியல் புனைக்கதைகளில் வேற்றுலக வாசிகள் பூமிக்கு வருகைபுரிதல் எனும் தளம் நிறைய எழுதப்பட்ட ஒன்று. இந்தப் பிரபஞ்சத்தில் 'நாம் மட்டுமே தனியர்கள்' எனும் எண்ணத்தின் திகைப்பும், இதன் மறு எல்லையான பிற கிரகத்து மனிதர்களின் இருப்பும் மனிதர்களின் சிந்தனைகளை என்றுமே ஆக்ரமிக்கும் ஒன்று. ஜெயமோகன் இந்தியத் தொன்மங்களின் பின்னணியில் ஒரு விண்வெளித் தட்டின் பூமி வருகையைக் கதையாக்கியிருக்கிறார்.
டாக்டர் பத்மநாபன் விண்வெளித் துறையில் புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானி. மலையில் இயற்கை விவசாயம் செய்யும் அவருடைய நண்பர் நாராயணனின் கடிதம் கண்டு அங்கு ஓய்வெடுக்கச் செல்கிறார். அந்தக் கடிதம் மலையுச்சியில் அமைந்துள்ள பிரம்மாண்ட தடயம் ஒன்றினைப் பற்றியது. 'அது வேற்றுலக வாசிகளின் பறக்கும்தட்டா' என்பது நாராயணனின் கேள்வி. அறிவியல் ஆராய்ச்சிகளின் வரலாற்றையும், தர்க்கபூர்வமான காரணங்களையும் சொல்லி அந்தக் கருத்தை சலிப்போடு நிராகரிக்கிறார் பத்மநாபன்.
மலையின் உச்சிக்கு அவர்களை அழைத்துச் செல்ல தொரப்பன் எனும் பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒருவன் வருகிறான். பழங்குடி இன மக்கள் மலையின் உச்சியில் உள்ள கல்லன்சாமியை வழிபடுகிறார்கள். அவர்கள் மலையின் உச்சியில் காண்பது விண்வெளித் தட்டின் தடமா என்பதற்கான விடை கதையின் முடிவில் உள்ளது.
மனிதனின் அறிவுக்குத் தென்படாத ஒரு பிரம்மாண்டம் இந்தப் பிரபஞ்சமும், வான் வெளியும். புலப்படாத ஒன்றைக் குறித்து கற்பனைகளை வளர்த்துக்கொள்வது மனிதனின் இயல்பு. இந்த கற்பனைகளை தர்க்கங்களுக்கு உட்படுத்தி அதன் சாத்தியங்களை அராய்வதால் அந்தப் பிரம்மாண்டத்தின் சில புள்ளிகளைத் தெரிந்துகொள்ளகிறான் அவன். காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மனிதர்கள் இயல்பாகவே தர்க்கத்தை விலக்கி உள்ளுணர்வுகளால் வழிநடத்தப்படுகிறார்கள். ஒரு விஞ்ஞானியும், நாகரிக மனிதனும் அறிந்துகொள்ள முடியாத, அவர்களை அலைக்கழிக்கும் ஒன்றை பழங்குடி மனிதன் இயல்பாகக் கடந்து செல்கிறான்.
இந்தக் கதையில் ஒரு அறிவியல் புனைக்கதைக்குத் தேவையான கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன, முடிவில் வாசகனின் கற்பனையைத் தூண்டும் ஒரு அம்சமும் உள்ளது. கதையை வாசித்துவிட்டு அடிப்படைகளைத் தேடி மீண்டும் தெளிவுபடுத்திக்கொண்டேன். பிரபஞ்சம், பால் வீதி, வால் நட்சத்திரம், கோள்கள் என மலைக்கவைக்கும் ஒரு உலகில் சில மணிநேரங்கள் திளைத்திருந்தேன். உறங்கச் செல்லும் முன் வானில் நட்சத்திரங்களை தரிசிக்க பால்கனியில் நின்றேன். வழக்கத்துக்கு மாறாக அடர்த்தியாக நட்சத்திரங்கள் காட்சியளித்தன, ஒரு நட்சத்திரம் மட்டும் அணையா ஒளிப்புள்ளியாக சீராக நகர்ந்துகொண்டிருந்தது, அது செயற்கைக்கோளாக இருக்கலாம். சில நிமிடங்கள் அதை ஒரு பறக்கும் தட்டாகக் கற்பனை செய்துகொண்டேன்…
Comments
Post a Comment