என் கவிதைகள் - மறுமொழி

                                            


ஜூன் 27, 2022

எதிரிட்ட மனிதனை நோக்கி

சினேகமாகக் கையசைத்தேன்

ஒரு நெடுஞ்சாலைப் பயணி

தவறவிடும் வெளிக்காட்சியாய்

கையசைப்பை அவன் கடந்து போனான்

பதில் வராத கையசைப்பை

கால்சராய்ப் பையில் பத்திரப்படுத்தினேன்,

மின்தூக்கிப் பயணம் பகிரும் அவளிடம் 

எதிர்பார்த்து நான் விடுத்த புன்னகை

விசையிழந்த அம்புபோல

அவளைத் துளைக்காமல் சரிந்தது

மறு சமிஞ்சை கிடைக்கப்பெறாத புன்னகையை

தோள்பையில் அடைத்துக்கொண்டேன்,

வகுபடாத ஒற்றைப்படை எண்களாக

கையசைப்புகளும் புன்னகைகளும்

என் மூடிய அலமாராவை நிறைத்தன,

இரவுகளில் என் அலமாராவிலிருந்து

நிறைவடையாத புன்னகைகள்

வெறிச் சிரிப்புகளாகவும்

பதில் கிடைக்கப்பெறாத கையசைப்புகள்

கதவைத் தட்டும் ஆவேசச் சப்தங்களாகவும்

ஒலிக்கத்தொடங்கின,

பழகிவிட்டன

அச்சப்தங்கள் எனக்கு பழகிவிட்டன,

மரங்களின் இலைச்சலசலப்பைப் போல

சக உயிரியின் குறட்டையொலியைப் போல

அவ்வொலிகளோடு இணக்கமான உறவு எனக்கு

உறங்கக் கற்றுக்கொண்டேன்

அவ்வொலிகளோடு

நன்றாக உறங்கக் கற்றுக்கோண்டேன்.


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை