என் கவிதைகள் - தொலைதல்
ஜூன் 11, 2022
ஒரு வீடிருந்தது
ஒரு குழந்தையும் சில பொம்மைகளும்,
பொம்மைகள் தொலைந்துகொண்டிருந்தன.
ஒரு வீடிருந்தது
வளர்ந்த ஒரு குழந்தையும் சில பெருமிதங்களும்,
பொம்மைகள் கிடைத்துக்கொண்டிருந்தன.
கட்டிலுக்கடியில் சில
சமையலறை இடுக்குகளில் சில
எதிர்பாராத இடங்களில்
என
பொம்மைகள் விடுவிக்கப்பட்டன,
ஒரு வீடிருந்தது
கிடைத்துவிட்ட சில பொம்மைகளும்
தொலைந்துவிட்ட ஒரு குழந்தையும்…
Comments
Post a Comment