பிறப்பொக்கும் சிறுகதை, பதாகை - ஒரு கடிதம்

                                             


பதாகை இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாரின் சிறுகதை 'பிறப்பொக்கும்' வெளியாகியுள்ளது. அதன் மூலப் பிரதியை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம்.

கடிதம் எழுதப்பட்ட நாள்: டிசம்பர் 31, 2021

அன்புள்ள ஜெகதீஷ்,

கதையில் செந்தில் என்ற ஒரு சிறுவனை மையமாக வைத்து அவனைச் சுற்றி விரியும் சூழலைக் காட்டியிருக்கிறீர்கள். இந்தக் கதைக்குத் தேவையான துருத்தாத ஒழுக்கான எளிய நடையை அமைத்திருக்கிறீர்கள். கதையின் சூழல் 90 களின் தொடக்கத்தில் கோவையில் ஒரு சிறு நகர் சார்ந்த ஒன்று என்பது என் ஊகம் (இல்லை 80 பதுகளின் கடைசியா?). லாட்டரி டிக்கெட் விற்பனை, நகைக்கடையில் நதியாவின் படம், டொரினோ, டேப்ரெகார்டர், இளையராஜா பாடல்கள் என அந்தச் சூழல் கதை முழுக்க அழகாக விரிந்துகிடக்கிறது. 

சோமு உடல் ஊனமுற்ற, சுயமாக உழைக்கும், தனக்கான துணை அமையாத விரக்தியில் வாழும் – அதற்கான முனைப்புகளில் இருக்கும், வாழ்வு தன்மேல் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைப் பொறுத்துக்கொண்டு ஒரு முணுமுணுப்போடு அதை எதிர்கொள்ளும், வேளாங்கண்ணி மாதாவை வணங்கும் ஒரு கதாப்பாத்திரம். 

பாலு சராசரி மனிதர்களிலிருந்து சற்று விலகிய, வாழ்வைத் தன்போக்கில் எதிர்கொள்ளும், அதற்காகத் திருடவும் தயங்காத, சுயநலம் கொண்ட, தொழில்திறன் வாய்ந்த, மனிதர்களைப் பற்றிய நம் வரையறைகளுக்குள் அடங்காத, பெருமாளை வணங்கும் ஒரு கதாப்பாத்திரம். 

அந்தப் பாட்டி இரு மகன்களுக்குமிடையில் ஊசலாடும் ஒருவள். அவள் இந்த இருவரில் பாலுவையே எண்ணிக்கொண்டிருக்கிறாள், பாலு அம்மா என்றுதான் அழைக்கவும்படுகிறாள். அவள் ஏன் சோமுவை விட பாலுவை நெருக்கமாக உணர்கிறாள் எனும் கேள்விக்கான பதில்கள் ஒரு வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். 

எழுதும் முன் இந்தப் பாத்திரங்களுக்கான எல்லைகளை, அடிப்படைகளை நீங்கள் முடிவுசெய்துவிட்டுதான் தொடங்கியிருப்பீர்கள். இது உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் சந்தித்த மனிதர்களின் பிரதியாக இருக்கவும் வாய்ப்புகளுண்டு. அதிலிருந்து தொடங்கி கதையின் ஓட்டம் அதற்கான இயல்புகளையும் பெற்றுக்கொண்டிருக்கலாம். 

முதல் வாசிப்பில் கதை சட்டென முடிந்துவிட்டதாகத் தோற்றமளித்தது. இரண்டாம் வாசிப்பில் இதில் நீங்கள் கதைக்குள் கையாண்டிருந்த மெல்லிய முடிச்சுகள் துலங்கின. 

கதையில் செந்தில் யார், அவனுக்கு இவர்கள் சித்தப்பா என்றால், அவனுடைய பிண்ணனி என்ன, இப்படியான கேள்விகளும் எழாமல் இல்லை. இதற்கான பின்புலங்களைக் கதையில் வைக்கலாமா என்று நீங்கள் சித்தித்திருக்கவும் வாய்ப்புகளுண்டு. அது தேவையா என்பது விவாதத்துக்குரியது. 

நான் கதையின் முடிவில் அடையும் சித்திரம் மனித மனதின் எல்லைகளுக்கு அடங்காத விசித்திரப் போக்குகளை, வாழ்வு எல்லோருக்கும் விரும்பத்தக்கதாக அமையாமல் இருப்பதன் தவிர்க்கமுடியாமை என்பதைத்தான். அசோகமித்திரனின் கதை சொல்லும் முறையையும் நினைவுபடுத்தியது. இன்னொரு கதையும் உங்களிடமிருந்து வந்துவிட்டது, எண்ணிக்கை மேலும் பெருகட்டும். இது உங்களுடைய சிறந்த கதையா என்பதில் எனக்கு ஐயமிருக்கிறது. 

தலைப்பு என்ன என்பதில் எனக்கும் துலக்கமில்லை, மற்றதை நேரில் பேசிக்கொள்ளலாம். 

இன்று நேரமிருப்பின் அழைக்கவும்.

அன்புடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை