ஊனுடல் சிறுகதை, சொல்வனம் - ஒரு கடிதம்

                                             

சொல்வனம் இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாருடைய 'ஊனுடல்' சிறுகதை வெளியாகியுள்ளது. கதையை பிரதியாகவே வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம் இது.

கடிதம் எழுதப்பட்ட நாள் ஜனவரி 19, 2022

அன்புள்ள ஜெகதீஷ்,

உங்கள் கதைகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன், முதல் வாசிப்பிலேயே இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. கதையின் சூழலுக்கேற்ற கவித்துவமான நடை மனதில் ஆழமான உணர்வுகளை என்னில் ஏற்படுத்தியிருந்தது. மாலைநேரம், தீவு, தீப்பந்தங்கள், கடற்கரை மணல், மதுபானம், உணவு, கடற்காற்று, காதலும் காமமும் ஊடாடும் மனநிலை என கதைக்கான பின்புலம் ஆழமாக நிறுவப்பட்டிருந்தது. 

கதையின் முடிவில் என் கண்களில் கண்ணீர் சுரந்துவிட்டது. பிரிவாற்றாமை, காதலின் வலிமை, விரிந்த கடல், கடல் தாங்கும் நிலவு, தொலைவில் சிறு படகு என கலவையான உணர்வுகள் என்னில் கிளர்ந்திருந்தன. ஒரு தரமான சிறுகதை வாசகனின் மனதில் இந்தத் தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

உங்களுக்கேயான ஒழுக்கான நடை இந்தக் கதையிலும் வெளிப்பட்டிருந்தது. மிகத் தெளிவான காட்சி வர்ணனை, குழப்பமில்லாத கதாப்பாத்திரங்களின் அக வெளிப்பாடு, ஜனி, சங்கமித்திரன் இருவருக்குமான பிண்ணனி கதையினூடாக உறுத்தாமல் வெளிப்பட்ட விதம் என கதையின் பலமாக அமைந்த சிலவற்றைச் சொல்லலாம்.

உங்களிடமிருந்து இன்னொரு தரமான கதை வந்திருக்கிறது, இதில் எழுத்தாளனாக நீங்கள் நன்றாக வெளிப்பட்டிருக்கிறீர்கள். பிரசுரிக்கத் தகுதியான கதை என்பதில் ஐயமிலை, மனமார்ந்த வாழ்த்துகள் ஜெகதீஷ். 

கதையின் முடிவில் ஜனியும், சங்குவும் கடல் நோக்கி மயங்கியிருக்க சிறு படகு வெளிச்சம் தாங்கி தொலைவில் வந்துகொண்டிருப்பதாக ஒரு கோணத்தில் நான் வாசித்துமுடித்தேன். இந்தக் கோணத்தில் சங்கு ஜனியை க்ளோரியாவுடன் செல்லுமாறு சொல்வது இல்லை, இது ஆசிரியர் குரலாக எனக்குப் படுகிறது. இப்படி தீர்க்கமான ஒரு முடிவு கவித்துவமான இந்தக் கதைக்குத் தேவையா? இங்கு சங்கு என்பவன் தன் தாயின் வேதனைகளை அறிந்தவன், அதே சமயம் காமத்தால் கிளர்ந்திருப்பவன், அவன் ஜனியைப் போகவும் சொல்லலாம், அல்லது அவளுடன் அந்த அற்புத இரவைக் கழிக்கவும் விரும்பலாம். இதை ஏன் வாசகனின் கற்பனைக்கே விடக்கூடாது? நான் கதைகளின் முடிவில் 'ambiguity' யை விரும்புபவன், இது என் தனிப்பட்ட ரசனை சார்ந்ததும் கூட. 

ஆனால் இதை ஒரு விவாதப் புள்ளிக்காக மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன், கதையை சிருஷ்டித்தவர் நீங்கள், உங்களுக்கு இதற்கான காரணங்கள் ஆழமாக இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. இந்த முடிவுக்கான சில முடிச்சுகளை க்ளோரியாவுடனான சங்குவின் உரையாடலில் நீங்கள் வைத்திருந்தீர்கள் என எண்ணுகிறேன். அது மட்டுமல்ல, கதைக்கான புள்ளி தோன்றும் போதே கூட சங்குவின் அறச்சார்பு உங்கள் மனதில் நிறைந்திருக்கலாம். கதை குறித்து உங்களிடம் பேச ஆவலுடன் இருக்கிறேன்.

அன்புடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை