வீழ்ச்சி சிறுகதை, திருச்செந்தாழை - ஒரு வாசிப்பு
தமிழினி இதழில் வெளிவந்திருந்த திருச்செந்தாழையின் 'வீழ்ச்சி' சிறுகதை குறித்த என் எண்ணங்கள்.
இந்தக் கதையின் களமும் திருச்செந்தாழையின் கதைகளில் பரவலாக அவர் காட்சிப்படுத்தும் ஒரு வியாபாரச் சூழலாகவே இருக்கிறது. தொழிலில் தோற்று முந்தைய நாட்களின் ஒரு எச்சமாக சகுந்தலாவின் தந்தை. அதன் இன்னொரு முனையாக வெற்றிகரமான ஒரு வியாபாரக் குடும்பத்தின் திறனற்ற பிம்பமாக தினகரன். வியாபாரத்தின் தந்திரங்களையும், அதனால் ஏற்படும் வீழ்ச்சிகளையும் கூர்மையாக அவதானித்து அதன் மூலம் மெருகேறிய குரூரமான வெருகுப் பூனையின் கண்கள் கொண்டவளாக சகுந்தலா மாறுகிறாள். கணவன் தினகரன் வியாபாரத்தில் அனைத்தையும் இழந்து ஊரை விட்டு வெளியேறும் சூழலில், சிறுகதை சகுந்தலா தன் மகன் சிவபாலன் குறித்து காணும் கனவுடன் தொடங்குகிறது.
கதையை வாசித்துக்கொண்டிருக்கையில் ஏற்கனவே திருச்செந்தாழையின் சிறுகதைகளில் தொடர்ந்து நிகழும் வியாபாரச் சூழல் சற்று சலிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது ஒரு கணநேரச் சலிப்பு மட்டுமே. கதையின் தெளிந்த நடை நம்மை இயல்பாக இந்தத் தடங்கலைக் கடக்க உதவுகிறது. திருச்செந்தாழையின் கதைகளில் காணப்படும் அதீதமான கவித்துவமும், உவமைகளும் அற்ற (குறைந்த என்பதே சரி) மிக நேரடியாக கூர்ந்த நடை கொண்ட சிறுகதை இது. உச்சத்தில் தொடங்கி உச்சத்தில் முடியும் ஒரு மிகச் சிறந்த வாசிப்பனுபவம் அளிக்கும் ஒன்றாக அமைகிறது.
சிறுகதையின் தொடக்கத்தில் ஆசிரியர் காட்சிப்படுத்தும் கனவு மிகச் சிறந்த படிமமாக கதையில் அமைகிறது. சிறுகதையின் முடிவில் இறுகிய உடலுடன் பத்து வயது சிவபாலன் மூட்டைகளுக்கிடையில் வந்துகொண்டிருக்கையில் சகுந்தலா எல்லாக் குரூரங்களையும் இழந்து ஒரு தாயாக நம் முன்னால் நிற்கிறாள். கதையின் உச்ச தருணமாக அமையும் இந்தக் காட்சி, உணர்வுரீதியாக அசைத்துப் பார்க்கிறது, கண்களில் ஒரு துளிக் கண்ணீரோடு கதையை வாசித்து முடித்தேன். நிறைவான சிறுகதை ஒன்றில் நம் உணர்வுகள் உச்ச நிலைக்குச் செல்லும் அனுபவம் வாய்ப்பது வாசகனாக கிடைக்கும் அரிய பரிசுகளில் ஒன்று. பொருள் ஈட்டல், போட்டி, கயமை என வியாபாரத்தின் அலகுகளைப் பொருத்திக்கொண்டு அலையும் மனிதர்களில், குழந்தைமை இழந்த பாலகனும், குழந்தைமை மட்டுமே வாய்க்கப்பட்ட தினகரனும் இரு முரண்களாகக் கதையில் காட்சியளிக்கிறார்கள்.
பத்து வயது பாலகனின் வயதை மீறிய இறுகிய உடலும், அவன் தட்டிவிடும் பஞ்சாரத்தின் அடியில் அடைகாக்கும் கோழியின் சீறலும் மிகச் சிறந்த குறியீடுகளாக கதையில் இடம்பெறுகின்றன. சகுந்தலா தன் வாழ்வில் சந்தித்த எல்லாத் தோல்விகளும் சிவபாலன் அவளை நோக்கி வரும் கணத்தில் கரைந்து அழிவதை ஆசிரியர் மிகக் கூர்மையாக சித்தரித்திருக்கிறார். சிவபாலன் காசியண்ணனை சிரிப்பில்லாமல் நோக்குகையில் சகுந்தலா எழுச்சியடைகிறாள். வியாபார உலகில் அது ஒரு எழுச்சியாகத் தோற்றமளித்தாலும், ஒரு பத்து வயது பாலகன் தன்னுள்ளிருந்து நிரந்தரமாகத் தொலைத்துவிட்ட ஒரு சிறுவனின் வீழ்ச்சி அங்கு தொடங்குகிறது. மனிதக் குரூரங்களின் கணக்குகளில் தொலையும் குழந்தைமையின், இயல்பான வெகுளித்தனங்களின் வீழ்ச்சியாகவே இந்தக் கதையை வாசிக்கிறேன்.
திருச்செந்தாழையின் அங்கியில் இன்னொரு அலங்காரச் சிறகாக இந்தச் சிறுகதை.
Comments
Post a Comment