என் கவிதைகள் - பேரன்பின் நாள்
ஆகஸ்ட் 26, 2022
இன்றைய நாள்
அரிய பரிசொன்றாய்
நமக்கு அளிக்கப்படுகிறது.
மஞ்சள் பூக்கள் படர்ந்து
புல்வெளிகள் மின்னுகின்றன
மனிதர்கள் மகிழ்வாய்
அங்குமிங்கும் அலைகிறார்கள்
பரிதி கருணையாய்
ஒளிக்கரங்களை நம்மேல் நீவுகிறது
மழைத்தூரல் சாய்வாய்ப் பொழிகிறது
இன்று
நாம் தயக்கமாய் ஒளித்துவைத்திருக்கும்
அன்பை வெளிக்கொணரலாம்
எதிர்படும் மனிதனை நோக்கி
புன்னகை ஒன்றை உதிர்க்கலாம்
மென்பாடல் ஒன்றை முனகலாம்
என்றோ வாசித்த கவிதை வரியொன்றை
நினைவுகூரலாம்
நம் நிர்வாண உடல் மீது
அன்பின் சாட்டையை வீசும்
பரிச்சயர்களை
சிரித்துக்கொண்டே
கொலைகூடச் செய்யலாம்.
Comments
Post a Comment