கர்மா சிறுகதை, சொல்வனம் - ஒரு கடிதம்
சொல்வனம் இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாரின் 'கர்மா' சிறுகதை பிரசுரமகியுள்ளது. கதையை அதன் மூலத்திலேயே வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய கடிதம்.
கடிதம் எழுதப்பட்ட நாள்: அக்டோபர் 29, 2021
அன்புள்ள
ஜெகதீஷ்,
'Karma' கதையை இரு முறை வாசித்தேன். உங்களுக்கே உரித்தான சரளமான கதை சொல்லல், கதாப்பாத்திரங்களின் கதையாடல் என ஒருங்கமைவான முறையில் அமைந்த கதை.
கதை
நான்கு குடும்பங்களின் வாழ்வை சொல்லி, அதன் விளைவான ஒரு முரண்பாடு எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என அலசுகிறது. கதை அடிப்படையில் மனித மனங்களின் கீழ்மையைச் சொல்கிறது. கடைசி நான்கு வரிகள் கதையைத் தாங்கி நிற்கிறது, உங்கள் கதைசொல்லும் திறமைக்கு சான்று. குடுக்கல் வாங்கல்களால் அமைந்துவிட்ட வாழ்வு இது, நீங்கள் யாரையும் புனிதப்படுத்தாமல் இருந்ததை ரசித்தேன். அதற்கான சாத்தியங்கள் நிறைந்த கதைதான் இது.
இந்திய
அமெரிக்க மக்களின் வாழ்வு ஊடாடும்போது ஏற்படும் நிகழ்வுகள் சுவாரஸ்யம் நிறைந்தது. தவிர்க்கவே முடியாத இந்த இணைவை இரு மக்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதன் ஒரு வடிவமாகவும் இந்த கதையை வாசித்தேன். இது போன்ற சூழல்களில் மனிதர்களின் மனம் மிகையுணர்வுகளின் கூட்டாக வெளிப்படுவதை பல தருணங்களில் கண்டிருக்கிறேன். இரு சாரரின் மனங்களும் முன்முடிவுகளால் ஆன அபிப்ராயங்களும், அவை தவிர்க்கப்படும்போது ஏற்படும் திடுக்கிடல்களாலும் ஆனது.
Mr.
Robertson 'Mrs. Selvanayagam' என
ஏன் அழைக்கிறார்? இதன் பிண்ணனியில் இறுக்கமான மிகவும் சம்பிரதாயமான மன அமைப்பை வெளிப்படுத்துகிறார். 'sara' என்ற பெயரை அவரால் அங்கு ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. இனவெறி நூதனமான முறைகளில் வெளிப்படுவதன் சான்று இது. இதன் மூலம் மறைமுகமாக அந்த கதாப்பத்திரத்தின் தன்மையை நீங்கள் உணர்த்த முனைவதாக எண்ணுகிறேன், என் ஊகம் தவறாகவும் இருக்கலாம்.
பல
இந்திய மற்றும் ஆசிய இன மக்கள் தங்கள் பெயரை நடைமுறையில் எளிதாக இருப்பதற்காக, மாற்றுப் பெயருடன் இணைத்துக்கொள்வதைக் கண்டிருக்கிறேன். இதன் பிண்ணனியில் இருக்கும் மன அமைப்புகளை விரிவாக பேசலாம். இந்தியர்கள் இங்கு பிறந்துவிட்ட குழந்தைகளின் பெயர்களை எப்படி அமைக்க முனைகிறார்கள் என்பதைப் பார்த்தால் போதுமானது. சம்பிரதாயமான ஒரு தெலுங்கன் தன் பெண்ணுக்கு 'cherishia' என பெயரிட்டதாக சொன்னபோது நான் திகைத்துவிட்டேன். எனக்குத் தெரிந்த இன்னொரு ஈரோடு ஜெகதீஷ், தன் பெயரை 'jegs' என் மாற்றிக்கொண்டதையும் எண்ணுகிறேன்.
எனக்கு
இந்த கதை ஒரு 'fable' என்றுதான் தோற்றமளிக்கிறது, இப்படி குறிப்பிடுவது கதையின் தரம் குறைந்தது என்று சொல்ல அல்ல, தல்ஸ்தோய் இது போன்ற கதைகள் பல சொல்லியிருக்கிறார் என எண்ணுகிறேன். நீங்கள் இதை உத்தேசித்தேகூட எழுதியிருக்கலாம்.
அமெரிக்க
வாழ் இந்தியர்களின் கதைகள் இங்கு எராளம், இதுபோன்ற கதைகளின் வாயிலாக இவை வெளிப்படுவது அவசியமானது. அந்த வகையிலும் இது ஒரு நல்ல ஒரு முயற்சி, வாழ்த்துகள் ஜெகதீஷ்.
எண்ணங்கள்
அனைத்தையும்
சொல்லிவிட்டதாக
தோன்றவில்லை, கதையைப் பற்றி நாம் விவாதிக்கலாம்.
பாலாஜி ராஜூ
Comments
Post a Comment