வியனுலகு வதியும் பெருமலர் - இரண்டு கவிதைகள்
கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் கவிதைத் தொகுப்பான 'வியனுலகு வதியும் பெருமலர்' தொகுப்பிலிருந்து நான்கு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு சிறு வாசிப்புக் குறிப்பை எழுதி kavithaigal.in குழுவினருக்கு அனுப்பினேன், அவற்றில் இரண்டு மட்டுமே வெளிவந்தது. மற்ற இரண்டு கவிதைகளும், குறிப்புகளும் இங்கே -
குறிப்பு எழுதப்பட்ட நாள்: மார்ச் 12, 2022
1.
ஒரு நாளின் புலரிக்கும், அந்திக்கும், இரவுக்கும் உள்ள முக்கியத்துவத்தை
நாம் மதியங்களுக்கு அளிக்கிறோமா? இந்த மதியங்கள் காலத்தில் என்றோ
உறைந்துவிட்ட ஒரே நாளின் நிரல்களைத் திரும்பத் திரும்ப நிகழ்த்துகின்றன என்றே எண்ணுகிறேன்.
இந்தச் சலிப்பு தாளாமல் கவிஞன் அதை வார்த்தைகளில் பதிவு செய்கிறான்,
ஒரு கவிஞனின் வார்த்தைகள் என்பதாலேயே இந்தக் கவிதைக்கான நியாயங்களும்
குவிகின்றன. இன்னொரு கோணத்தில் அன்றாடம் நிகழும் மதியம் என்பதை
நம் மனதில் உள்ள அழுக்குகள், செயலூக்கமற்ற மனநிலைகள்,
பழமை ஊறிய நம்பிக்கைகள் இவற்றுக்கான படிமமாகவும் வாசிக்கலாம். நம்மிடம் இவற்றைத் தூக்கி எறியவும் இந்தக் கவிதை அறைகூவுகிறது. இவையெல்லாம் அகன்ற ஒரு ஆதர்ச பூமியைக் கற்பனை செய்கிறது. முதல் வாசிப்பில் எதிர்மறைத்தன்மையைப் பேசும் ஒரு கவிதையாகத் தோற்றமளித்து,
தொடர் வாசிப்பில் முற்றிலும் வேறொன்றாக மனதில் விரிகிறது.
பழசு –
இந்த மதியத்தின் மேல்
ஒரு நூலாம்படை போல்
படர்ந்திருக்கிறது அன்றாடத்தின் புராதனத் துரு
பல்லூழி காலமாய்
அமர்ந்திருப்பதைப் போன்ற பாவனையில்
ஒரே திக்கை வெறிக்கிறது நாய் ஒன்று
பழைய பொருட்களை வாங்குபவன்
சைக்கிளில் என் வீதிக்கு வர
நான் இந்த பூமியை தூக்கித் தருகிறேன்
பட்டாணி கூட பெறாது இந்த மசுரு
எனக் கையில் திணித்து விட்டு நகர்கிறான்
கிரீச் கிரீச் என வண்டி சப்தமிட.
இந்தக் கவிதை சுட்டும் மனம் கவிஞனுடையது, கவிதையை வாசித்துக்கொண்டிருக்கும்போதே அது நம்முடைய மனமாக மாறிவிடும்
மாயம் இதில் ஒளிந்திருக்கிறது. இரவு நம் மனதின் மென்சோகங்களையும்,
பரிதவிப்பையும் கிளர்த்தி ஊதிப் பெருக்கிவிடுகிறது. பெருங்கடலின் அலை கொண்டு வந்து சேர்க்கும் மணலை வெளித்தள்ளும் சிறு பூச்சியாய்
இறைத்துச் சலிக்கும் மனம் எனும் வரிகளுக்காக, மொத்தக் கவிதையையும்
தாங்கும் இந்த வரிகளின் கவித்துவத்துக்காக மட்டுமே பலமுறை வாசிக்கத் தூண்டுகிறது இந்தக்
கவிதை.
இரவின் சொற்கள் –
புதிய வெட்டுக் காயத்தில்
உதிரம் பெருகுவது போல்
இவ்விரவில் சொற்கள்
ஏன் பெருகுகின்றன
மனதின் எந்த உலை
ததும்பிப் பொங்குகிறது
காரணமற்ற துக்கத்தில்
இருண்ட பின்னும்
கத்திக்கொண்டிருக்கும்
காகத்தின் துயரமா
மழை தீர்ந்த இரவின்
தவளையின் கூச்சலா
நிலவற்ற வானின்
ஒற்றை விண்மீனா
எது கொண்டு வந்தது
இந்த பாரத்தை
அலை வந்து சேர்க்கும்
கரை மணலை
சிறு காலால் பறித்துப் பறித்து
வெளித்தள்ளும்
சிறு பூச்சியாய்
இறைத்துச் சலிக்கிறது மனம்.
Comments
Post a Comment