செவ்வாய் கிரகத்தில் தமிழ் இலக்கியம், விசும்பு தொகுப்பு - ஒரு வாசிப்பு

                                                 

செவ்வாய் கிரகத்தில் நிகழும் கருத்தரங்கு ஒன்றில் ஜெயமோகன் எனும் பெயரை 'உத்தேசித்துக்கொள்ளும்' எழுத்தாளன் தமிழ் இலக்கியத்தின் எதிர்கால வடிவம் குறித்து ஒரு உரையாற்றுகிறான். கருத்தரங்குக்கான காலம் நேரடியாக வரையறுக்கப்படவில்லை. பூமி முற்றிலும் அழிவுக்குள்ளானதால் பூமி வருடம், வெளி வருடம் எனும் பதங்களால் காலம் சுட்டப்படுகிறது. பூமி வருடம் 2868க்குப் பிறகான ஒரு வருடத்தில் நிகழும் கருத்தரங்கம் என்று புரிந்துகொள்கிறேன். கருத்தரங்கம் தமிழ் இலக்கியத்தின் 'வடிவம்' எனும் அம்சத்தை மையப்படுத்துகிறது.

உரை தமிழ் இலக்கியம் எப்படி நாட்டார் வாய்மொழிப் பாடல்களிலிருந்து உருவாகி காப்பியங்களகவும், புரணங்களாகவும், நவீன காலகட்டத்தில் நாவல் என்று பரிணமித்ததையும் பேசுகிறது. பிறகு பின்நவீனத்துவப் படைப்புகள் தோன்றி (எடுத்துக்காட்டாக 'விஷ்ணுபுரம்' நாவல்), அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 'மின்நவீனத்துவம்' எனும் கருத்து வலுப்பெறுகிறது. அச்சு ஊடகம் முற்றிலுமாக அழிவுக்குள்ளாகிறது, மின் ஊடகம் செலவு குறைந்த வடிவமாகி பாமரர்களையும் அடைகிறது. 2055ம் ஆண்டுவாக்கில் அச்சு ஊடக நூல்கள் கலைப்பொருள் சேகரிப்புகளுக்காக மட்டுமே சில நூல்களை அச்சிடுகின்றன. தமிழினி போன்ற பதிப்பகங்கள் ஜெயமோகனின் வெகுசில படைப்புகளை கலைப்பொருள் சேகரிப்புக்காக பெருஞ்செலவில் அச்சிடுகின்றன. 

மின்நவீனத்துவத்தின் முதல் சோதனை நாவலில் நிகழ்கிறது. உள்சுட்டிகள் மூலம் பக்கவாட்டில் பல திசைகளில் திறந்துகொள்ளும் 'அதிநாவல்' என்ற வடிவம் பிறக்கிறது. 2065ல் விஷ்ணுபுரம் நாவல் ஆர். ஜீவரத்தினம் என்பவரால் செறிவூட்டப்பட்டு அதிநாவல் வடிவுக்கு மாற்றமடைகிறது. அதன் பின் 'மின் கதை' எனும் வடிவம் உருவாகிறது. ஒரு பிரதியின் வடிவத்தை அதன் சுட்டிகள் மூலம் வாசகனே தீர்மானிக்கும் தன்மை வளர்கிறது. ஒரு கதையின் ஒவ்வொரு சொல்லும் ஒரு சுட்டியாக அமைந்து விரியும் உச்ச சோதனை நிகழ்கிறது. 

பின்னர் கதைகளை உருவாக்கும் மென்பொருட்கள் பலநூறு என்ற கணக்கில் வளர்கின்றன. அவை கதைகளை எழுத்தாளனில் நடக்கும் வடிவப் பிரக்ஞையை இல்லாமலாக்கி, அவன் கற்பனைகளின் வால்பிடித்துச் சென்றால் போதுமானது எனும் நிலை எழுகிறது. கலைச் சொற்கள் அரிதாக அறிஞர்கள் மட்டுமே உருவாக்கும் சூழல் வளர்கிறது. 2093ம் ஆண்டுவாக்கில் நிஜக்காட்சித்தன்மை கொண்ட ஒளி ஊடகங்களின் வளர்ச்சியால் இலக்கியம் எழுத்து, காட்சியூடகம் இரண்டும் ஊடுருவிய ஒரு வடிவமாகி வளர்கிறது. மெய்நிகர் அனுபவம் அதன் உச்ச சாத்தியங்களை அடைகிறது, பனி என்றால் வாசகன் குளிரை உணர்கிறான்.

மனித மூளையில் செயற்கையாக தகவல்களைச் சேர்க்கும் தொழிநுட்பம், நொடியில் அறிவைச் சேகரித்து நியூரான்கள் இணைப்புகள் வளர வகைசெய்கிறது. இந்த மாற்றத்தால் மின் கதைகள் வழக்கொழிகின்றன. பிறகு மூளையே உருவாக்கிக்கொள்ளும் 'நுண் கதை' எனும் வடிவம் பரவுகிறது. ஆக்கங்களுக்கு ஆக்கியோன் தேவையில்லை எனும் கருத்து நிலவுகிறது. ஒரு கதை என்பது கணநேரத்தில் மூளையில் உருவாகி கனவுபோல் அதன் தன்மையை அடைந்துகொள்கிறது. 

பூமி முற்றிலும் அழிவுக்குள்ளாகி வேற்று கிரகங்களில் குடியேறும் தனிமனித பிரக்ஞையில் கடந்தகாலம் தம் இருப்பை மெல்ல எழுப்பிக்கொள்கிறது. மனித மனங்கள் நுண்கதிர்களால் முழுமையாக இணைக்கப்பட்டிருப்பதால், பல நூற்றாண்டுகளாக எழுத்து வாசிப்பு இரண்டுமே நிகழாமல் போகின்றன. அதை மீறி இலக்கிய ஆக்கத்தில் எழுத்தாளன், வாசகன் எனும் கருதுகோள்கள் மீண்டும் மெல்ல வளர்கின்றன. பழைய எழுத்து வடிவங்கள் பற்றிய எண்ணங்கள் மேலும் வலுப்பெறுகின்றன. புரதான தகவல்தொகையிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு அரிய பொருட்களாக கொண்டாடப்படுகின்றன. 

இந்த அலையின் பகுதியாக வீடுகளில் புத்தகச் சேகரிப்பு, நூலகம் எனும் வடிவங்கள் மீண்டும் ஏற்பட்டு, எழுத்தாளர்களின் பிம்பங்கள் மீட்டுருவாக்கப்பட்டு இலக்கியக் கூட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அதன் ஒரு நீட்சிதான் இந்தக் கதை பேசும் கருத்தரங்கும். தமிழக மதங்கள் மேலும் வளர்ச்சியடைகின்றன, குறிப்பாக சைவ மதம். பல கோள்களில் பிரிந்து தமிழினம் வாழத் தலைப்பட்டாலும், நுண்ணலைத் தொடர்பு மூலம் ஒரே மூளையாக சிந்தித்தாலும், தமிழ் மனம் ஒன்று உருவகிக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, தொண்டை மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. 

இலக்கியத்தின் வடிவங்களான நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை போன்ற வேறுபாடுகள் அழிந்து எல்லாம் கூடிய, அல்லது எல்லாம் அழிந்த ஒரு வடிவம் மட்டுமே எஞ்சும் சூழல் இருக்கிறது. 'மென் கதை' எனும் வடிவம் உருவாக்கப்படுகிறது. 

வெளி வருடம் 480ல் வரை மென் கதை ஆசிரியர் அற்ற வடிவத்திலிருந்து மீண்டும் ஆசிரியர் உருவாக்கம் எனும் வடிவத்தை நோக்கி நகர்கிறது. ஒரு மூளை இறந்த பிறகு அப்படியே அடுத்த மூளைக்குள் சேகரிக்கப்பட்டு மரணம் என்பது இல்லாமலிருப்பதால், இடம், காலம் போன்ற சொற்களுக்குப் பொருளில்லாமல் ஆகிறது. வாசிப்பு என்பது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்காலத்துடன் இணைக்கக்கூடிய ஒரு அக நிகழ்வு என்று ஒரு விவரிப்பு கதையில் வருகிறது. மனித வரலாற்றில் கடந்தகாலம் என்பது குறியீடுகளாக, படிமங்களாக நம் ஆழ்மனதில் எஞ்சுகிறது. மனிதகுலம் உள்ளவரை இலக்கியம் எனும் வடிவம் நீடிக்கும் எனும் ஒரு அறிதலுடனும், நம்பிக்கையுடனும் கருத்தரங்கம் முடிவுக்கு வருகிறது.

இரண்டாம் முறை வாசிக்கையில் இந்தக் கதையின் தொலைநோக்குப் பார்வை, மலைக்கவைக்கிறது. ஜெயமோகன் எனும் எழுத்தாளனின் மேதமையைச் சுட்டும் இன்னொரு சான்று இது. 

'தமிழ் விக்கி' எனும் கலைக்களஞ்சியத்தின் கூறுகளை இந்தக் கதையுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறேன். ஒரு பதிவு, பலநூறு பக்கங்களாக விரிந்து முழுமையடையும் மாயம் தொழில்நுட்பத்தின் இயல்புகளால் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழ் விக்கி குறித்த எண்ணங்கள் பல ஆண்டுகளாக அவருடைய மனதில் ஊறிக்கொண்டிருந்ததைக் குறிக்கிறது இந்தக் கதை.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை