Posts

Showing posts from June, 2022

என் கவிதைகள் - மறுமொழி

Image
                                                       ஜூன் 27, 2022 எதிரிட்ட மனிதனை நோக்கி சினேகமாகக் கையசைத்தேன் ஒரு நெடுஞ்சாலைப் பயணி தவறவிடும் வெளிக்காட்சியாய் கையசைப்பை அவன்  கடந்து போனான் பதில் வராத கையசைப்பை கால்சராய்ப் பையில் பத்திரப்படுத்தினேன், மின்தூக்கிப் பயணம் பகிரும்  அவளிடம்  எதிர்பார்த்து  நான் விடுத்த புன்னகை விசையிழந்த அம்புபோல அவளைத் துளைக்காமல் சரிந்தது மறு சமிஞ்சை கிடைக்கப்பெறாத புன்னகையை தோள்பையில் அடைத்துக்கொண்டேன், வகுபடாத ஒற்றைப்படை எண்களாக கையசைப்புகளும் புன்னகைகளும் என் மூடிய அலமாராவை நிறைத்தன, இரவுகளில் என் அலமாராவிலிருந்து நிறைவடையாத புன்னகைகள் வெறிச் சிரிப்புகளாகவும் பதில் கிடைக்கப்பெறாத கையசைப்புகள் கதவைத் தட்டும் ஆவேசச் சப்தங்களாகவும் ஒலிக்கத்தொடங்கின, பழகிவிட்டன அச்சப்தங்கள் எனக்கு பழகிவிட்டன, மரங்களின் இலைச்சலசலப்பைப் போல சக உயிரியின் குறட்டையொலியைப் போல அவ்வொலிகளோடு இணக்கமான உறவு எனக்கு உறங்கக் கற்றுக்கொண்டேன் அவ்வொலிகளோடு நன்றாக உறங்கக் கற்றுக்கோண்டேன்.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - திரை

Image
                                                         ஜூன் 27, 2022 அவனுக்கு 'போர்' அடித்தது பொம்மைளுடன் பேசிச் சலித்து அறை முழுக்க இரைத்தான் மேசைகளும் நாற்காலிகளும் அவன் பாதங்களுக்கு முதுகு கொடுத்ததில் சலித்தான் மூடப்பட்ட வீட்டின் இடைவெளிகள் பரிச்சயமாகிவிட்டன சிலேட்டில் கோடுகளைக் கீறி சுண்ணக்கட்டியை வீசி எறிந்தான் கடைசியாக எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் வெளியைத் திரையிடும்  சாளரக் கண்ணாடியில் கைகள் பதித்து நின்றான், அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - பயணி

Image
                                                              ஜூன் 26, 2022 மின்னும் காலணிகளை அணிந்து நடை பயின்றுகொண்டிருந்தான் 'ஏன் காலணிகள்?' என்றான் ஒவ்வொரு காலணியிலும் சில பயணங்கள் எழுதப்பட்டுள்ளன என்றேன் 'ஏன் காலணிகளில் சரிகை' என்றான் உன் பயணங்கள் உன்னைவிட்டு விலகாமலிருக்க என்றேன் 'ஏன் காலணிகள் மின்னுகின்றன?' என்றான் காலணிகளுக்குள் மின்மினிப்பூச்சிகள் உன் இருண்ட பயணங்களில் வழிகாட்டிகள் என்றேன் சிறிது தூரம் சென்றவன் தூக்கச் சொல்லி கைகள் நீட்டினான், இப்போது என் இடையில் குறுகுறுத்தன மின்மினிப்பூச்சிகளும் சில பயணங்களும்.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - எல்லைக்கோடு

Image
                                                  ஜூன் 26, 2022 வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டான் பதறித் தேடி கிடைக்கப்பெற்றான் கதவைத் திறந்து நுழைகையில் வாசலிலேயே உதறினான், ஒரு திருடனையும் சில கருவிகளையும் ஒரு வீடிலியையும் கொஞ்சம் விடுதலையையும், வீடு சலனமற்று ஏற்றுக்கொண்டது அவனை.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - ஒப்பனை

Image
                                                       அக்டோபர் 3, 2021 மாலையின் தந்திரமான பிடியில்  கலைந்துவிட்டிருந்த   அவன் அள்ளிப்   பொருத்திக்கொண்டு   அவசரமாகத்   தயாரானான் எதிர்பாராத கணத்தில்  பெற்றுக்கொண்ட அழைப்பிதழின்  மாலை விருந்துக்கு வெளிச்சத்தை விரட்டி வெளிச்சம் தந்துகொண்டிருந்த கர்வமான தெருவிளக்குகளினூடாகப் பயணித்தான் கடலை உதாசித்துக்கொண்ட ஆறுகள் பாதை தவறி சாலைகளில்   ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டான் துடுப்புகளைத் துளாவியெடுத்து படகோட்டியாக மாறினான் தண்ணீர் தத்தளிக்கும் கரையில் படகை நங்கூரமிட்டு வரண்ட கால்களுடன் அழைப்புக்கான இடத்தை அடைந்தான் ' ஏன் வியர்த்திருக்கிறாய் ?' என்ற கேள்வியுடன் அவன்   கைகளில் வந்தமர்ந்தது அன்றைய மாலைக்கான   அவன் பெயர் பொறித்த முதல் மதுக்கோப்பை மதுக்கோப்பைகளின் ஒற்றைக் கால்களை இறுகப் பற்றிக்கொண்டவனின் கண்களில் மின்னிக்கொண்டிருந்தன கருத்து நீண்ட   சாலைகள் தெருவிளக்குகளின் வெளிச்சத்தில் .     -  பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - பார்வையாளன்

Image
                                                       மே 22, 2022 உணவகம் ஒன்றினுள் நுழைந்தேன் நாடக அரங்கம் ஒன்றினுள் உற்சாக முகம் கொண்டு ஆவேசக் கைவீசிச் சிரிக்கும் மென் குரலில் பேசி பரிதவிப்புக் கண்கள் ஒளிரும் மதுக்கோப்பைகள் உரசி கொண்டாடக் காரணம் தேடும் மேசைகளுக்கிடையிலான சாலையில் லாவகமாய் நகரும் என தேர்ந்த கதாப்பாத்திரங்களின் ஒப்பற்ற நாடகம் எனக்கான உணவு கையளிக்கப்பட்டு நாடக அரங்கக் கதவு திறந்து என்னுடைய உலகில் நுழைந்ததும் ஒளிர்ந்தன பசியின் ஞாபக மின்னல்கள் .     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - பெட்டகம்

Image
                                                       மே 22, 2022 எனக்கு ஒரு மிட்டாய்பெட்டி பரிசளிக்கப்பட்டது ஓவியங்கள் அடர்ந்த பெட்டியினுள் வண்ண உடை   தரித்த மிட்டாய்கள் மிருதுவாக கடினமாக இனிப்பு கசப்பு என பல வடிவங்க ள் ஒவ்வொரு மிட்டாயையும் ஒரு குறிப்பிட்ட நாளில் உண்ண விரும்பினேன் கசப்பு நாளுக்கு இனிப்பு மிட்டாய் மகிழ்ச்சிக்கு கசப்பு மிட்டாய் எ ன்று ஒரு கணக்கு ஒரு நாள் திறக்கையில் மிட்டாய் பெட்டி சரிந்து மிட்டாய்கள் சிதறின சிதறிவிட்ட மிட்டாய்களில் எதைச் சுவைப்பது என் று குழ ம்பி மீண்டும் அடைத்துவிட்டேன் நாட்களை, மிட்டாய் பெட்டியில் .     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - புரிதல்

Image
                                                         ஜூன் 16, 2022 விழாவுக்கான உடையை ஒத்திகைக்காய் அணிந்து வேறொருவளாய் என்முன் நின்றவள் கேட்டாள் 'எப்படி இருக்கிறது' உறைந்த சில நொடிகளின் குளிரால் தீண்டப்பட்டு 'நன்றாக இருக்கிறது' என்றேன் 'என்ன யோசிக்கிறாய்' என்றாள் 'ஒன்றுமில்லை' என்றேன்.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - கணக்கு

Image
                                             ஜூன் 25, 2022 அதிகப் பரிச்சயமில்லாத ஒரு நண்பன் அன்று விபத்தில் இறந்துபோன தன் அண்ணனின் கதையைக் கூறினான் இன்னும் வருத்தப்பட்டிருக்கலாமோ என்று அவனும் இன்னும் பரிதாபம் காட்டியிருக்கலாமோ என்று நானும் எண்ணிப் பிரிந்தோம் வாட்ஸ்சப்பில் 'அண்ணா உன்னைப் பிரிந்து வாடுகிறேன்' என்று செய்தியிட்டு வரிசையாய் அடுக்கியிருந்தான் அழுகுரல் உணர்த்தும் முகங்களை, நானும் பதிலிட்டேன் 'R.I.P.'.     - பாலாஜி ராஜு

கவிதைகள் தளம், பிப்ரவரி மாத இதழ் - ஒரு கடிதம்

Image
                                                            கடிதம் எழுதப்பட்ட நாள்: பிப்ரவரி 19,2022 http://www.kavithaigal.in/2022/02/ அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு, பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த கவிதைகளை வாசித்தேன். நான் இதுவரை அவ்வளவாக தெரிந்துவைத்துக்கொள்ளாத பெயர்கள், அவர்களுடைய கவிதைகள், முற்றிலும் புதிய வாசிப்பனுவம் தந்த கவிதைகள். உங்கள் தளம் அதற்கான பணியை செவ்வனே செய்துகொண்டிருப்பதற்கு இது ஒர் சான்று. தொடர்ந்து புதிய கவிஞர்களை வாசிக்கும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். எனக்குப் பிடித்த சில கவிதைகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். வெ.நி. சூர்யாவின் இரண்டு கவிதைகளுமே எனக்குப் பிடித்திருந்தது. 'கண்களும் வெற்றிடமும்' கவிதையில், அர்த்தம் மிகுந்த நம் அன்றாட உலகுக்கும், அர்த்தமற்ற ஒரு சுதந்திரவெளிக்கும் இடையிலான பயணம் பேசப்படுகிறது. இங்கு கண்ணாடி என்பதை சூழல் நம்மீது திணிக்கும் எல்லாவற்றுக்குமான குறியீடாகப் பார்க்கிறேன். 'உன் பாதை' கவிதை இயற்கையின் உலகில் சஞ்சாரித்து நம் அக உலக இருளைப் போக்கிக்கொள்ளும் சாத்தியங்களைச் சொல்கிறது. ச. துரையின் கவிதைகள் முற்றிலும் புதிய வகைய

சொல்வனம் இதழ், VP கவிதைகள் - ஒரு கடிதம்

Image
                                                            குறிப்பு எழுதப்பட்ட நாள்: ஜூன் 13, 2022 சொல்வனம் இதழில் நண்பர் வெங்கட பிரசாத் எழுதிய நான்கு கவிதைகள் வெளிவந்திருந்தன. அந்தக் கவிதைகளை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய குறிப்பு, அன்புள்ள VP, திங்கட்கிழமை காலையில் கவிதைகளை வாசிப்பது புரட்சிகரமான ஒரு செயல் என்று நம்புபவன் நான், 'வேலை கிடக்கிறது, கவிதைகளைப் படி' என்பதுதான் புரட்சியின் கோஷம், இன்று புரட்சி நிகழ்ந்தது, உபயம் VP கவிதைகள். கவிதைகளை வாசித்தேன், சிறப்பாக வந்திருந்தன. நேற்று சம்பிரதாயமான ஒரு செய்தியை குழுவில் பகிர்ந்துவிட்டு நகர்ந்தேன், நாமும் ஏதாவது சொல்லிவிட வேண்டுமே என்கிற பதற்றம் வேறொன்றுமில்லை, மனதில் குற்ற உணர்வு, இன்னும் கொஞ்சம் விரித்து எழுதலாம் என்றுதான் இந்தச் செய்தி.  பிள்ளை மொழி –  ஒரு குழந்தையின் மழலை களைவதைப் பேசுவதாக வாசிக்கிறேன். சொற்களில் பொருள் ஏறுகையில் மழலையின் மரணம் நிகழ்கிறது, சூழலின் ஒட்டு மொத்த எடையும் ஒரு குழந்தையின் மேல் விழுகிறது. நாம் இதைக் கொண்டாடத்தான் பழகிக்கொண்டிருக்கிறோம், ஆனால் இழப்பு எத்தனை பெரியது. நோக்கியபடி –  பூடகமான கவிதை. எங

என் கவிதைகள் - நீ

Image
                                                       ஜூன் 12, 2022 வெளியில் நின்று நிலைவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்   சாலையில் தோன்றிய ஒருவன் 'நீதானே அது' என்றான்   இல்லை என்ற சொல்லை விழுங்கி வழிகாட்டியாய் கைகள் நீட்டினேன் நான்கு திசைகள் புசித்து பசியடங்காமல் அ திசைகள் நோக்கி நீண்டன என் கைகள்   என் கைகள் காட்டிய  ஒரு திசையில் சென்று  மறைந்தான் அவன்   நிலவு சலித்து உள் நுழைய எத்தனித்தேன் கதவுகள் திறக்கப்படவில்லை   சாலையில் இறங்கி வெளியில் நின்று நிலைவைப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம் கேட்டேன் 'நீதானே அது'.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - தொலைதல்

Image
                                                                 ஜூன் 11, 2022 ஒரு வீடிருந்தது ஒரு குழந்தையும் சில பொம்மைகளும், பொம்மைகள் தொலைந்துகொண்டிருந்தன. ஒரு வீடிருந்தது வளர்ந்த ஒரு குழந்தையும் சில பெருமிதங்களும், பொம்மைகள் கிடைத்துக்கொண்டிருந்தன. கட்டிலுக்கடியில் சில சமையலறை இடுக்குகளில் சில எதிர்பாராத இடங்களில்  என பொம்மைகள் விடுவிக்கப்பட்டன, ஒரு வீடிருந்தது கிடைத்துவிட்ட சில பொம்மைகளும் தொலைந்துவிட்ட ஒரு குழந்தையும்…       - பாலாஜி ராஜூ

கல்குதிரை இதழ், மதார் கவிதைகள் - ஒரு கடிதம்

Image
                                                       கல்குதிரை இதழில் வெளிவந்த கவிஞர் மதாரின் ஆறு கவிதைகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம், https://www.jeyamohan.in/166951/ அன்புள்ள ஆசிரியருக்கு , பூன் காவிய முகாமில் கவிதைகளுக்கான அமர்வில் உங்களுடைய உரைக்குப் பிறகு அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவில் கவிதைகள் குறித்த விவாதங்கள் பரவலாக நடைபெறுகின்றன . பல நண்பர்களுக்கு கவிதைகளின் மேல் ஒரு ரகசிய ஈர்ப்பு இருப்பது தெரிகிறது. உங்கள் வருகைக்குப் பின் எண்ணங்களை வெளிப்படையாக முன் வைக்கிறார்கள். கவிதைகளை எப்படி அணுகுவது , புரிந்துகொள்வது என்பதே விவாதங்களின் சாரம் . 'க விதைகளைப் புரிந்துகொள்தல் என்பதை புறவயமாக வரையறுத்துக்கொள்ள முடியுமா ' என்பதற்கு என்னிடமும் ஒரு தெளிவு இல்லை . கவிதைகளை வாசித்தல் , புரிந்துகொள்தல் என்பதையெல்லாம் ஒரு வாசகனின் உள்ளுணர்வு சார்ந்தவை என்றே எண்ணுகிறேன் . இந்த உள்ளுணர்வு தொடர்ச்சியாக கவிதைகளையும் , கவிதைகளைக் குறித்தும் வாசிப்பதனால் மனதில் ஏற்படும் அகவயமான ஒரு தெளிவு அல்லது முதிர்ச்சி என்பதே இப்போதைக்கு என்னுடைய நிலைப்பாடு.   '