'JOJI' திரைப்படம் – ஒரு Classical Thriller

                                             

அமேசான் ப்ரைமில் மலையாளப் படமான 'Joji' பார்த்தேன், பகத் பாசில் மையக் கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகமான 'மெக்பெத்' இந்தப் படத்துக்கான உந்துதல் என்ற அறிவிப்புடன் துவங்குகிறது. ஒரு நல்ல திரைப்படத்தின் தாக்கம் அகல சில நாட்கள் எடுத்துக்கொள்ளும், 'Joji' அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். தந்தையை மீறுதல் எனும் கருத்து இலக்கியத்தில் பரவலாகப் பேசப்பட்ட(படும்) ஒன்று, இதன் கூறுகள் 'Joji' திரைப்படத்தில் இருந்தன என்று தோன்றியது. ஒரு Classical Thriller என்று இந்தப் படத்தை வகைப்படுத்தலாம்.

கையறு நிலையில் இருக்கும் ஒரு மனதில் தீமை குடிகொண்டுவிட்டால் என்ன நிகழும் என்பதை 'Joji' திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதையாகக் கொள்ளலாம். கதைக்கான களம் 'கோட்டயம்', பசுமையான ஒரு எஸ்டேட், அடர்ந்த கானகம் போன்ற அதன் பின்புலத்தில் ஒரு பங்களா. முழுக்கத் தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊரின் ஒரு பெரிய குடும்பம், அவருடைய மூன்று மகன்கள் இவர்களுக்குள் உள்ள உறவு, முரண்பாடுகள், ஊசலாட்டம் இவைதான் 'Joji' திரைப்படத்துக்கான அடிப்படை. கூர்மையான ஒரு திரைக்கதை, தேர்ந்த நடிப்பு, இயக்கம், இசை இவற்றின் கலவை 'Joji' யை குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படமாக்குகிறது.

அதிகாரத்தைக் கைகளில் வைத்திருக்கும் தந்தை உடல்மொழி, தோற்றம் எனக் கச்சிதமான தேர்வு. இளைய மகனான 'Joji' வேலை ஏதும் இல்லாமல், தந்தையால் தொடர்ச்சியாக இகழப்படும் ஒரு கதாப்பாத்திரம். இளைத்த உடல், தந்திரமான உடல்மொழி, குரூரமான கண்கள் என பகத் பாசில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தந்தையிடம் அவமானப்பட்டு அவரிடம் கோபத்தை வெளிப்படுத்த இயலாமல் அறையைச் சாத்திக்கொண்டு கைகளைக் காற்றில் வீசி ஆவேசப்படுகிறார், தந்தையைக் கொல்லவும் தயங்காமல் இருக்கிறார்.

'Joji' யின் மனதில் தந்தையின் மீதான வன்மம் மெல்லக் கூடுவது திரைக்கதையில் நன்றாக வெளிப்பட்டிருந்தது. ஒரு Thriller கதையில் அடுத்து என்ன நிகழும் என்பதற்கான எதிர்பார்ப்பைக் கூட்டுவது தவிர்க்கமுடியாத ஒன்று, அது 'Joji' யில் நன்றாக அமைந்திருந்தது. படத்தின் பிண்ணனி இசை காட்சிகளுடன் இயைந்து துருத்தாமல் ஒலிக்கிறது, ஒரு வகை ஐரோப்பிய பாணி இசை என்று தோன்றியது.

நம் குடும்ப அமைப்புகளில் உள்ளுறைந்திருக்கும் அடக்குமுறை, பல வடிவங்களில் வெளிப்படும் வன்முறை ஆகியவற்றையும் படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. மதமும், அதன் ஆசாரங்களைப் பரிபூரணமாக நம்பும் குடும்பங்களில் அது செலுத்தும் ஆதிக்கமும் கதையில் உள்ளது. 'Joji' மனப் பிறழ்வு கொண்ட மனிதனா? இல்லை என்றே எண்ணுகிறேன், சராசரியான ஒரு மனிதன் சூழலை வெல்ல தவறான சில செயல்களைச் செய்கிறான், அதன் விளைவுகளை கொஞசம் சினிமாவுக்கே உரிய நாடகீயத்துடன் இந்தப் படம் பேசுகிறது.

சில நாட்கள் முன்னர் எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய தளத்தில் தந்தை மகன் உறவு குறித்து இரண்டு கட்டுரைகளை 'தந்தை மகன் உறவும் இரு படைப்பாளிகளும்' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். அந்தக் கட்டுரைகள் படம் பார்க்கும்போது நினைவில் எழுந்தன. 

தளர்வான ஒரு வார இறுதியில் இரண்டு மணி நேரங்களைத் தயங்காமல் இந்தப் படத்துக்காகச் செலவிடலாம்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை