'அசைவும் பெருக்கும்' சிறுகதை – கங்கை நதி எனும் பிரம்மாண்டம்

                                                    


வல்லினம் இணைய இதழில் வெளிவந்த 'அசைவும் பெருக்கும்' சிறுகதை குறித்து ஜெகதீஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தின் திருத்தப்பட்ட வடிவம்.

கடிதம் எழுதப்பட்ட நாள் ஜூலை 17, 2021.

அன்புள்ள ஜெகதீஷ்,

அசைவும் பெருக்கும்சிறுகதை குறித்த என் எண்ணங்களைப் பகிர்கிறேன்.

கதைகளின் தலைப்பு கதைக்கு மேலும் அர்த்தங்கள் சேர்ப்பதாகவே இருக்க வேண்டும் எனும் விதியை எழுத்தின் பேராளுமைகள் பலர் குறிப்பிட்டுள்ளனர். ஜெ, எஸ்.ரா. என நமக்குப் பரிச்சயமான ஆளுமைகளின் கதைகளில் இந்த பண்பைக் காணலாம். 'அசைவும் பெருக்கும்' கதைத் தலைப்பு கவித்துவத்தின் உச்சம், தலைப்பு கதையை இன்னும் ஆழமான அனுபவமாக்கி, கதைக்கான பின்புலத்தை அழகாக நிறுவுகிறது.

கதையில் கங்கை நதியை உயிர்ப்போடு ஓடவிட்டிருக்கிறீர்கள். கதையின் நுண்தகவல்கள் அர்த்தத்தோடு விரவிக் கிடக்கின்றன. கங்கையும், ராம் ஜூலா தொங்கு பாலமும், தெருக்களும், ஓசைகளும், கடைகளும், சுவரொட்டிகளும், உணவுகளும், வாசனைகளும், பசுமாடுகளும் கதைச்சூழலை ஆழமாக என் மனதில் நிலைநிறுத்தியது.

வாசகனாக ஒரு கதையில் சில வரிகளில் நிகழ்ந்துவிடும் சிறு கவிதைகள் எனக்கு மிகுந்த அக எழுச்சி அளிப்பவை. 'நதி தழுவிய காற்று', 'கற்பாறையிலிருந்து சில்லுகளை நீக்கினால் தோன்றும் சிற்பம்', 'கண்ணெதிரே கொந்தளித்து விரையும் பிரம்மாண்டம்', 'இருண்ட வானத்தின் கருநீலப் போர்வையில் பதித்த வெண்கற்களென நட்சத்திரங்கள்', 'கேள்விகளற்ற வெறுமை' என கதை முழுக்க கவித்துவமான வரிகள் நிறைந்திருந்தன. ஆழமான கற்பனைத் திறன் உங்களுக்கு வாய்த்திருக்கிறது, உங்களுக்குள் இருக்கும் கவிஞனை நன்றாக வேலை வாங்கியிருக்கிறீர்கள்.

கதையில் ஆழமான தத்துவம் சார்ந்த தகவல்கள் பரந்து கிடந்தன. அப்யாசம், வைராக்யம், சொரூபம் போன்ற சொற்கள் என்னை நிறைய தேடிப் படிக்கத் தூண்டியது. வேதாந்தம், கீதை என அழகாகக் கதைக்கு வலுசேர்த்திருக்கிறீர்கள்.

கௌதம் கணினித்துறையில் வியத்தகு ஆற்றல் கொண்டவன். வாழ்வின் பொருள் தேடி நிறைய அகக்கொந்ளிப்புகளுடன் புனித நதியை ஒட்டிய ஆசிரமத்துக்குப் பயணிக்கிறான். அவனுடைய குருவை இயல்பாக அடைகிறான். அவருடனான உரையாடல்களில் தன் அகத்தை தயக்கத்தோடு திறக்கிறான். குரு அவனுள் சிந்தனைகளை விதைக்கிறார், அறைக்குத் திரும்பி தொழில்நுட்பச் சாதனை ஒன்றை நிகழ்த்துகிறான், அவனுள் பல வாசல்கள் திறக்கின்றன, ராம் ஜீலா பாலத்தின்அசைவில் கங்கை நதியின் முன் நின்றுகொண்டிருப்பதுடன் கதை நிறைகிறது.

முதலில் நகருக்கு வரும் கௌதமை தொந்தரவு செய்யும் குரங்குகள், அவன் குருவுடன் உரையாடிவிட்டுத் திரும்பும்போது விலகிவிடுவது அழகான குறியீடு. இதை மனக்குரங்கு கட்டுப்பட்டதாகவே நான் வாசித்தேன்.

தியானப் பயிற்சியின் அடிப்படைகள், வேதாந்தத்தின் முறைகள், கீதையின் முன்மொழிபுகள், செவ்விலக்கிய மேற்கோள்கள் என வாசகனாக அறிந்துகொள்ள கதை முழுக்க செறிவான தகவல்கள் உள்ளன. குருவுடன் கௌதம் நிகழ்த்தும் உரையாடல்களை என் மனதுக்கு மிக நெருக்கமான உணர்ந்தேன், எழுத்தாளனாக உங்கள் பலமாக உரையாடல் அமைப்பைக் கருதுகிறேன்.

கௌதம் இரவில் எர்லாங் ப்ரொகிராமில் நிகழ்த்தும் தொழில்நுட்பச் சாதனைகளை தத்ரூபமாக அமைத்திருந்தீர்கள், நிறையத் தேடி வாசித்ததை உணர்ந்தேன். ஹாப் இன், சிட்டாடல் பல்கலைக்கழகம், குறியீடுகள் என கௌதமின் ஆற்றலைப் பறைசாற்ற நம்பத்தகுந்த தகவல்கள் இருந்தன, கதைக்காக நிறைய மெனக்கெட்டுள்ளீர்கள்.

கதையை வாசிக்கும்போது எனக்கு ஜெகதீஷின் பிம்பம் மனதில் நிறைந்தது, ஆனாலும் வெகு சில இடங்களில் ஜெயமோகன் வந்துவிட்டார், சில வார்த்தை அமைப்புகளில் அவருடைய தாக்கம் தெரிந்தது. எழுத்தாளனாக உங்கள் ஆற்றலை நன்றாக வெளிப்படுத்திக்கொண்ட சிறுகதையாகவே இதை உணர்கிறேன். அடுத்த கதைகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன், மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை