சில நாளிதழ் கவிதைகள்
மார்ச் 24, 2022
கீழ்வரும் கவிதைகளை ஒரு பத்து நிமிட இடைவெளியில் அலைபேசியில் எழுதிப் பார்த்தேன். இவற்றின் இலக்கிய மதிப்பு பல்லிளித்தாலும், எழுதி முடித்ததும் சற்று ஆசுவாசம் அடைந்ததை மறுக்க முடியவில்லை. ஒரு வகை கவிதை முயற்சிகளாக இவை எனக்கு பயனளிக்கின்றன, இவற்றை இங்கு பதிவதன் பிண்ணனியிலுள்ள அசட்டுத்தனமும் எனக்குப் புரியாமலில்லை.
1.
அம்மணக் குழந்தை
கேட்டுக்கொண்டிருந்தது
ஓடிப்போன
தகப்பன் கதையை
குஞ்சாமணியை
தீண்டிக்கொண்டே.
2.
திக்குவாய் கிழவன்
சொல்லிக்கொண்டிருந்தான்
தன் வாழ்நாள்
கதையை
எதிரில்
பொக்கைவாய் குழந்தை
உற்சாகமாய்.
3.
பச்சய தொட்டா
நான் போன்ல வருவேன்
என்று சொல்லிவிட்டு
பட்டணம் போனான்
ஒரே பிள்ளை
பிழைப்பு தேடி
தொட்டுப் பார்த்துக்கொண்டே
நாட்களை நகர்த்துகிறாள்
போனில்
அரிதாக ஒளிரும்
பச்சையை எண்ணி
ஒரே பிள்ளையை
பட்டணத்துக்கு
பலி கொடுத்த
ஊர்க் கிழவி.
4.
குத்துப் பாட்டு
கேட்டு
குதித்துக்கொண்டிருந்த
குழந்தையை
தூங்க
வைக்கிறாள்
தமிழச்சி
தாலாட்டுப் பாடி.
Comments
Post a Comment