'புதுப் பெண்சாதி' சிறுகதை – அ. முத்துலிங்கம் என்றொரு கதைசொல்லி
பத்மலோசினி புதிதாகத் திருமணமாகி கணவனுடைய சொந்த ஊரான கொக்குவில் என்ற சிற்றூருக்கு வருகிறாள். கணவன் ஊரின் ஒரே பலசரக்குக் கடையை நடத்தி வருகிறான். அழகிலும், கல்வியறிவிலும் கணவன் அவளுக்கு நேரெதிர். ஊர் மக்கள் அவளைப் 'புதுப் பெண்சாதி' என்றே அழைக்கிறார்கள், நாளடைவில் தன் பெயரையே மறந்துவிடுகிறாள். கடையில் பொருட்களுக்கான விலைப் பட்டியலை சங்கேத வார்த்தைகளால் எழுதி, ஒவ்வொரு சங்கேத வார்த்தைக்கும் ஒரு எண்ணையும் இணைத்துப் பட்டியல் தாயாரிக்கிறாள். நட்டத்தில் ஓடும் கணவனுடைய பலசரக்குக் கடையை சீர்படுத்தி லாபமீட்ட உதவுகிறாள்.
பதிமூன்று வருடங்கள் கழித்து அவர்களுக்கு அற்புதம் என்ற பெண் குழந்தை பிறக்கிறது. ராமனாதன் குழந்தையின் மூன்றாவது வயதில் மாரடைப்பால் இறந்துபோகிறான். அற்புதம் பதினேழாவது வயதில் தற்கொலை செய்து கொள்கிறாள். விடுதலைப் புலிகள்
இயக்கத்தில் இருந்த ஒருவனைக் காதலித்த அமிர்தம், அவன் போரில்
கொல்லப்பட்டதைத் தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொள்கிறாள்.
ஜுலை 1987ல் இந்திய இராணுவம் தன் படைகளுடன் இலங்கையில் வந்து இறங்குகிறது. அவளை
இந்திய இராணுவம் தவறான புரிதலில் விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது, அதன் பின் அவள்
ஊருக்குத் திரும்பவில்லை. அவளுடைய கடையையும்,
வீட்டின் பொருட்களையும் ஊர் மக்கள் ஒவ்வொன்றாக எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்.
போரில் வீட்டை இழந்த ஒரு இளம் தம்பதியினர் அவள்
வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்கிறார்கள், அந்தப்
பெண் கடையைச் சுத்தம் செய்கையில், பத்து மரப் பலகைகள் அடங்கிய
கதவுகளைத் துடைக்கிறாள். அதில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் 'எ ண் ணெ ழு த் து இ க ழே ல்'.
என் பார்வை –
கதையைப் பலமுறை வாசித்துவிட்டேன், ஒவ்வொரு முறையும் மனதில் இன்னும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
பல வருடங்களாகத் தன் பெயரையே யாரும் அழைத்திராத நிலையில் கணவன் முதல்
முறையாக அவளை 'பத்மி' என்று பிரேமையுடன்
அழைக்கும் தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமானது.
இந்தக் கதை வாசித்துமுடித்ததும் ஆழமான ஒரு
சோகத்தை ஏற்படுத்துகிறது. கதையில் மகிழ்வான ஒரு குடும்பத்தின்
முழு வாழ்வும் சொல்லப்படுகிறது, அது எதிர்பாராத தருணங்களில் முடிவுக்கு
வருகிறது. போர்ச் சூழலில் மனிதர்களின் வாழ்வு எத்தனை குரூரமான
முறையில் கையாளப்படுகிறது என்பதையும், மனிதனின் கையறு நிலையையும் கதை காத்திரமாகப் பதிவு செய்கிறது. இந்திய இராணுவம் அவளை அழைத்துச்
செல்கையிலும் ஊர் மக்களிடம் தன் ஆடுகளையும், கோழிகளையும் பார்த்துக்கொள்ளுங்கள் என்றுதான்
வேண்டுகிறாள், அவளிடம் எஞ்சியிருப்பவையும் அவை மட்டும்தான்.
நல்ல அறிவாற்றல் கொண்ட அவளால் கடைக்கு வரும் இந்திய இராணுவ வீரனின்
எளிய கேள்வியைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மொழி வேறுபாடு ஏற்படுத்தும் ஒரு இடைவெளி
அவள் வாழ்வையே முடித்துவிடுகிறது, எத்தகைய முரண்நகை இது. இந்திய அரசால், இராணுவத்தால் இலங்கையில்
வாழும் தமிழர்களின் சூழலை, அவர்களுடைய வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியாத தன்மைக்கான ஒரு
குறியீடாகவும் இதை வாசிக்கலாம்.
போர்ச் சூழலில் வாழும் மனித மனங்களில் இயற்கை, கடவுள், ஆன்மீகம், கலை, இலக்கியம்
போன்ற உச்ச நிலைகளின் மதிப்பீடுகள் என்னவாக இருக்கும்? நாளை விடியலைக் காண முடியாத சாத்தியங்களை உணர்ந்து உறங்கச் செல்லும் மனிதனின்
மனதில் ஏற்படும் எண்ணங்கள் என்ன? எல்லாவற்றையும் விட்டு விலகலான
நிலையை மனம் அடையுமா, மரணம் எனும் அழியாச் சக்தியை எதிர்கொள்ளும்,
ஒப்புக்கொண்டுவிடும், ஏற்றுக்கொள்ளும் நிலையா அது?
இப்படிப் பல கேள்விகளை இந்தச் சிறுகதை மனதில் விதைத்துவிடுகிறது.
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் இந்தக் கதையை உணர்ச்சிகளற்ற நடையில், ஊரில் பெரியவர் ஒருவரிடம் முன் வாழ்ந்திருந்த ஒரு குடும்பத்தின் கதையைக் கேட்கும்
தொனியில் சொல்லிச் செல்கிறார். எழுத்தாளராக அவருடைய மேதமையைக்
காட்டும் அற்புதமான ஒரு சிறுகதை இது, கதைசொல்லி என்ற பதம் மனதில் எழுகிறது.
பி.கு. எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் பிறந்த ஊர் கொக்குவில்.
Comments
Post a Comment