கவிஞர் அபி – ஒரு கடிதம்

                                             

கடந்த ஆண்டு அக்டோபர் 2021ல் இருந்து பிப்ரவரி 2022 முதல் வாரம் வரை கரூரில் இருந்தேன். ஜனவரி மாதம் கவிஞர் அபிக்கு கடிதம் ஒன்றை எழுதினேன். அதன் பின் அவருடன் ஒன்றேகால் மணிநேரம் அலைபேசியில் உரையாடும் வாய்ப்பும் அமைந்தது. என் வாழ்வின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகவும் இதைக் கருதுகிறேன். அந்தக் கடிதத்தின் திருத்தப்பட்ட வடிவம் இது.

கடிதம் எழுதப்பட்ட நாள் ஜனவரி 23, 2022.

அன்புள்ள கவிஞர் அபி அவர்களுக்கு,

நலம் விழைகிறேன், என் பெயர் பாலாஜி ராஜூ. நீங்கள் எண்பதாவது அகவையை எட்டியதற்கு சற்று காலம் தாழ்ந்த என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அடிப்படையில் ஒரு கவிதை வாசகன், பரவலாகக் கவிதைகளை வாசிக்கிறேன். என் மனதுக்கு நெருக்கமானவராக உங்களை உணர்கிறேன், இப்படியும் சொல்லலாம், என்னுடைய கவிஞர் நீங்கள்.

உங்களுடைய 'அபி கவிதைகள்' தொகுப்பை நான்கு முறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை மறு வாசிப்பு செய்யும் போதும் உங்கள் கவிதைகளை நோக்கி சில அடிகள் நெருங்குகிறேன், அல்லது அப்படி எண்ணிக்கொள்கிறேன். உங்கள் கவிதைகளை 2018ல் இருந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன், தொகுப்பிலுள்ள பல கவிதைகளை இருபது முறைக்கு மேல் வாசித்திருக்கிறேன். உங்கள் கவிதைகள் என்னைச் சில கவிதைகள் எழுதவும் தூண்டியிருக்கின்றன.

உங்கள் கவிதைகளிலுள்ள பல வரிகளை எபோதும் மனம் அசைபோட்ட வண்ணமிருக்கும்சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்,

'பெயர் தெரியாப் பறவைகளின் அந்திப் படபடப்புகள்'

'சொல் அவிதலும், இரவு அவிழ்தலும் இசைவாகின'

'வெயிலின் திருகல் ஒலி'

'சிறையிருப்பது காலமும் தான்'

'யாருடையதென்றறியாத சோகம் அரைக்கண் பார்வைபோல் கிறங்கித் திரிந்தது'

உங்கள் கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் பரவலாகத் தமிழில் அறியப்படும் பல கவிஞர்களை வாசிக்கலானேன். ஒருவகையில் என்னைக் கவிதைகளின் இனிய சுழலில் தள்ளிவிட்டவர் நீங்கள். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டு 'அபி கவிதைகள்' தொகுப்பிலுள்ள இரண்டு கவிதைகளை வாசித்து, அதில் என் புரிதல்களைக் குறிப்பாக எழுதிக்கொண்டேன். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளுக்கும் ஒரு சிறு குறிப்பெழுதிவிடவேண்டும் என்றும் எண்ணுகிறேன்.

இதுவரை எழுதிய அந்த இரண்டு குறிப்புகளை உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன். தமிழின் தலை சிறந்த கவிஞரான நீங்கள் நூறு அகவையைத் தொடவேண்டும் என்று மனதார எண்ணிக்கொள்கிறேன்.

உலா

'நிழல்' என்பது கவிமனம், சலிப்பான அன்றாட வாழ்வைக் கடந்து இரகசியமாக நிழலின் உந்துதலுடன் கவிஞன் எல்லைகளற்று பயணிக்கிறான். ஆனாலும் லௌதீக வாழ்வுக்குத் திரும்புவது தவிர்க்க முடியாதது, மீண்டும் நிழல் தீண்டும் வரை 'கடைவாயில் மரணம் அதுக்கி மழுப்பிச் சிரித்து' வாழ வேண்டும். தான் கவிஞனாக இல்லாமல் வாழும் தருணங்களைப் பிணம் போல் வாழ்ந்து கழிப்பதாகக் கவிஞன் சுட்டுவதாகவும் வாசிக்கிறேன்.

அந்தர நடை

கவிஞனின் அகத்தில் கவிதை உதிக்கும் தருணம், கவிதைக்கான கரு மனதில் தோன்றி மறைந்து அது அவனுடன் நிகழ்த்தும் மாய விளையாட்டு, கவிதைக்கும் தனக்குமான மெல்லிய கோட்டை உணர்ந்து அதன் மேல் கவிஞன் பயிலும் 'அந்தர நடை', இவற்றுக்கெல்லாம் அப்பால் அந்த அக அனுபவத்தை வாசகனுக்குக் கடத்துவதன் வதை, என இலக்கியத்தின் உச்ச வடிவமான கவிதையின், கவிதை படைத்தலின் சிடுக்குகளைப் பேசும் கவிதை என்று எண்ணுகிறேன்.

சரி, இதையும் கேட்டுவிடுகிறேன், உங்களோடு ஓரு முறை பேசும் வாய்ப்பு கிடைக்குமா?

அன்புடன்,

பாலாஜி ராஜூ  

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை