கவிஞர் மதார், சில கவிதைகள் - ஒரு கடிதம்
கவிஞர் மதார் எழுதிய நான்கு கவிதைகள் 'நுட்பம்' இணைய இதழில் வெளிவந்திருந்தன. இந்தக் கவிதைகள் குறித்த என் எண்ணங்களை அவருக்கு கடிதமாக எழுதினேன், அதன் பிரதி இந்தப் பதிவு.
கடிதம் எழுதப்பட்ட நாள் மார்ச் 21, 2022.
அன்புள்ள மதார்,
நான்கு கவிதைகளையும் வாசித்தேன், கவிதைகளை வாசித்தவுடன்
என் மனதில் எழுந்த சொல் 'உவகை'. ஆம், உங்கள் கவிதைகள் எனக்கு சில்லென்ற ஒரு உணர்வைத்
தருகின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்த் குமாருடைய 'டிப் டிப் டிப்' தொகுப்புக்கு எழுதிய
முன்னுரையில் 'கவிஞர்கள் எளிமையை நடிக்க முடியாது, அது இயல்பாக வெளிப்படவேண்டும்' என்று
சுட்டுகிறார். இந்த முன்னுரையை உங்களுடைய இந்த நான்கு கவிதைகளை வாசித்தவுடன் எண்ணிக்கொண்டேன்
- உங்கள் கவிதைகளின் எளிமையும் இயல்பானது என்றே கருதுகிறேன்.
தடையற்ற நேரடியான மொழி உங்கள் கவிதைகளை மறு வாசிப்பு செய்யத்
தோதான ஒன்றாக மாற்றுகிறது. சொல்முறைதான் எளிது, ஆனால் உள்ளடக்கத்தின் செறிவு என்னை
நிறைய சிந்திக்க வைக்கிறது, வாசகனாக என் கற்பனையைத் தூண்டுகிறது.
குறி –
இந்தக் கவிதையில் கல் காலத்தின் நிலைத்த சாட்சியாய் அமர்ந்திருக்கிறது,
அந்தி இந்தக் கல்லைக் கடந்தே ஆக வேண்டும் – நிலைத்திருக்கும் கல்லின் மேல்
காலம் எப்போதும் உருண்டோடிக்கொண்டே இருக்கிறது. இன்னொரு கோணத்தில் காலை எழுந்தவுடன்
அந்தியை எண்ணித் தவிக்கும் மனம் இந்தக் கல்லை எறிவதாக வாசித்தேன், நாம் முக்கியமான
நிகழ்வு ஒன்றை எதிர்பார்க்கிறோம், அதற்கு மாலைவரை காத்திருக்கவேண்டும், ஆனாலும் மனம் உடனே மாலை வந்துவிடாதா என்று ஏங்குகிறது. காலப் பயணம் செய்யும் கல்
(செய்ய முயலும் கல்) என்றொரு சிந்தனையும் மனதில் எழுகிறது. ஒரு கவிதை, பல முனைகள். கவிதையின் தொடக்கமும் முடிவும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன.
வட்டி வரி –
உரையாடலில் சொல்ல மறந்த ஒரு வரி, நம் எல்லோரிடமும் இப்படி ஒரு
வரி எஞ்சி விடுகிறது. ஒரு வகையில் இந்தச் சொல்ல மறந்த வரிகள்தான் உறவுகளை நீடிக்கச்
செய்கிறது, ஒரு தொடர்ச்சியை அளிக்கிறது. பல நேரங்களில் நாம் சொல்ல மறந்த வரிகளின் கணம்
தாங்க இயலாத ஒன்றாக மாறி மனதைப் பரிதவிக்கவும் வைத்துவிடுகிறது. இறந்தவர்களிடம்
நாம் சொல்ல மறந்த வரிகள் என்ற எண்ணம் என்னைத் திகைக்க வைக்கிறது, நாம் என்றுமே அவர்களிடம்
சொல்ல முடியாத வரிகள், நம் நினைவுகளில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் வரிகள். இந்தக் கவிதையில்
உரையாடியவருடன் அடுத்த உரையாடலைத் தொடங்கவேண்டியிருந்தால், இந்தச் சொல்ல மறந்த வரிகள்
என்னவாகும் என்றொரு தவிப்பு இருக்கிறது. இது அவருக்குச் சொந்தமான வரி, நம்மிடம் இருக்கிறது,
அதனால் வட்டியும் சேர்ந்துவிடுகிறது என்றும் வாசித்துப் பார்க்கிறேன். உரையாடலை விரும்பாத
மனம் அடுத்த உரையாடலைத் தொடங்கவேண்டிய சாத்தியத்தை எண்ணி மலைக்கிறதா? இந்தக் கவிதையும்
பல சாத்தியங்களை மனதில் எழுப்பிவிடுகிறது.
மெய்ப்புப் பார்த்தல் –
தம்முடைய கனவுகளின் நிகழ்வுச் சாத்தியங்களை நனவு கொண்டு அளவிடுகிறது
இந்தக் கவிதை. பின் அசாத்தியமாக, நனவை கனவின்
ஆழங்களால் அமைத்துக்கொள்ள எண்ணுகிறது, சாதனையளர்கள் இதைத்தான் செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன். 'கனவின் மூலப் பிரதி' அழகான
வார்த்தைப் பிரயோகம்.
குழந்தை கவிதை –
மீண்டும் உங்கள் கவிதையில் ஒரு குழந்தை, வாசிக்கச் சலிக்காத ஒரு
பேசுபொருள். எழுத்தாளர் ஜெயமோகன் குழந்தைகளை எழுதாத படைப்பாளிகள் அரிது என்கிறார்,
எழுத்தாளர் ஆ. முத்துலிங்கத்திடம் 'ஏன் உங்கள் கதைகளில் குழந்தைகள் வருவதில்லை' என்றும்
கேட்டிருக்கிறார். கடவுளைத் திருடிய குழந்தை, கடவுளைத் தத்தெடுத்துக்கொள்கிறது என்ற
பிம்பத்தை எண்ணி எண்ணி வியக்கிறேன். குழந்தைகளால் கடவுள் திருடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்,
நாமும் ஒரு காலத்தில் கடவுளைத் திருடியவர்கள்தான், நம்முடைய பழைய உடைமைகளின் அடியில்
அவர் மூச்சுமுட்டிக்கொண்டிருக்கலாம்.
நான்கு கவிதைகள், ஆனால் அளவில் பல கவிதைகள் அளிக்கும் நிறைவை அளிக்கின்றன, மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்,
பாலாஜி ராஜூ
Comments
Post a Comment