விஷ்ணுபுரம் விருது விழா 2021 – எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்


விஷ்ணுபுரம் விருது விழா 2021 – எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

சென்ற ஆண்டு இந்தியப் பயணத்தில் கோவையில் நடைபெற்ற 2021ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. விழா குறித்த என் எண்ணங்களை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கடிதமாக எழுதியிருந்தேன். இந்தக் கடிதம் அவருடைய தளத்தில் டிசம்பர் 31, 2021 அன்று 'விஷ்ணுபுரம் விழாபாலாஜி ராஜூ' என்ற தலைப்பில் வெளிவந்தது.

கடிதம் எழுதப்பட்ட நாள் டிசம்பர் 28, 2021.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

விஷ்ணுபுரம் விழாவில் பங்கெடுத்துக்கொண்டு அறைக்குத் திரும்பியதும் இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்கிவிட்டேன். மனதில் இரு நாட்களின் நினைவுகளும் ததும்பிக்கொண்டிருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக தளத்தில் வெளிவரும் கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் கருணையில் தொலைவில் இருந்து விழாவை பிரமித்துக்கொண்டிருந்தவனுக்கு அதில் நேரடியாகப் பங்கெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது நல்லூழ், இது என்னுடைய முதல் இலக்கிய விழா என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

மிகுந்த தயக்கத்துடன் அரங்கத்தில் நுழைந்து அதன் வாயிலில் கவிஞர் லட்சுமி மணிவண்ணன் உரையாடிக்கொண்டிருந்த அரைவட்டக் கூட்டத்தில் ஒட்டிக்கொண்டு அந்த வடிவத்தைக் கலைத்தேன். Schizophrenia மனநிலை, சுந்தர ராமசாமி நினைவுகள் என உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆவணப்பட இயக்குனர் கவிஞர் ஆனந்த் தன் புதிய கவிதைத்தொகுப்பை (டிப் டிப் டிப்) அவரிடம் வழங்கி ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

கப்பல்காரன் ஷாகுல் ஹமீது, எழுத்தாளர் ஜி எஸ் எஸ் வி நவீன் மற்றும் சிறப்பு விருந்தினர்களான எழுத்தாளர்கள் சுஷீல்குமார், . திருச்செந்தாழை என புகைப்படங்களிலிருந்து சற்று விலகிய, அனால் பரிச்சய முகங்கள்.

சில அடிகள் இடைவெளியில் நீங்கள் சிலருடன் உரையாடிக்கொண்டிருந்தீர்கள், உங்களை முதன் முதலில் நேரில் கண்டுகொண்ட அந்தத் தருணம் - திகைப்பு, அதிர்வு என மனதில் கலவையான உணர்வலைகள். இதே தருணத்தைப் பலமுறை என் கற்பனைகளில் நிகழ்த்திப் பார்த்திருக்கிறேன், அந்தத் தருணங்கள் எல்லாம் முழுமையாக என் கட்டுபாட்டில் நிகழ்ந்தவை, அதன் நிரல்கள் நானே வடிவமைத்துக்கொண்டவை. ஆனால் நேரில் உங்களை அணுக மனம் தயங்கிக்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் நீங்களும் நகர்ந்துவிட்டீர்கள், நீங்கள் நகர்ந்துகொண்டேதானிருந்தீர்கள்.

கீழ் தளத்தில் குக்கூ தன்னறம் நூல்வெளி, மேல் தளத்தில் விஷ்ணுபுரம், தமிழினி, யாவரும், டிஸ்கவரி புக் பேலஸ், அழிசி என பதிப்பங்களின் புத்தக விரிப்புகள். இணையத்தில் கிடைக்காத சில அரிய புத்தகங்களும் காணக் கிடைத்தன. கவிஞர் போகன் சங்கருடன் கைகளில் சில புத்தகங்களுடன் வந்துகொண்டிருந்த உங்களை அணுகி என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டேன், ஆசிகள் பெற்றுக்கொண்டேன், இயல்பாக நலம் விசாரித்தீர்கள். மீண்டும் நகர்வு, அரை நிமிடச் சந்திப்பு நிறைவுக்கு வந்தது.

விழாக் கூடத்தின் கடைசி சில இருக்கைகளின் காலியான இடத்தில் என்னை இருத்திக்கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் என் இடது இருக்கையில் எழுத்தாளர் சோ. தர்மன் கம்பீரமான் உடல்மொழியுடன் வந்து அமர்ந்தார், வலது இருக்கையில் ப. திருச்செந்தாழை, பின் வரிசையில் கவிஞர் போகன் சங்கர், முன் இருக்கையில் கவிஞர் மதார், கவிஞர் இசை. சில வரிசைகளுக்கு முன் நீங்கள், எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன், கடலூர் சீனு ஆகியோர். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சு. வேணுகோபால் ஆகியோர் முதல் சில இருக்கைகளில். 'எடையறியா மென் இருக்கைகள்' என சொல்லிக்கொண்டேன்.

அன்றைய நாளுக்கான விழா நிகழ்வுகளின் வரிசைகள் முந்தைய இரவே தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததது. மிக நேர்த்தியாக, நேரப் பிரக்ஞையுடன் நிகழ்வுகள் நடந்தேறின, ராஜகோபாலன் அழகிய தமிழில் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார், மற்ற நெறியாளர்களின் பங்கையும் குறைத்து மதிப்பிடமுடியாது.

கலந்துரையாடலில் வாசகர்களின் கேள்விகள் கதை மாந்தர்கள் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கம், படைப்பாளிகளின் முன்னோடிகள், ஒரு படைப்புக்கான அகத் தூண்டல், கதைக்கான கருப்பொருள், ஒரு படைப்பாளியின் அகத்தில் அவன் வாழும் நிலம் அவனுள் ஏற்படுத்தும் விளைவுகள், கதைகளில் வட்டார வழக்கின் பயன்பாடு, படைப்புகளில் நுண் விவரிப்புகள் மற்றும் அவற்றின் தேவைகள், கவித்துவம் இவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தன. இது தவிர கவிஞர்கள் போகன் சங்கர், சாம்ராஜ், லட்சுமி மணிவண்ணன், எழுத்தாளர்கள் அமிர்தம் சூர்யா, சு வேணுகோபால்,  ஜி எஸ் எஸ் வி நவின், ஆர். காளிப்ரஸாத் ஆகியோரும் ஈடுபாட்டுடன் கேள்விகளை முன் வைத்தனர், இது விழாவின் நிகழ்வுகளுக்கு இயல்பான நகர்வைக் கொடுத்தது. முதல் நாள் விழாவின் கடைசி அமர்வை எழுத்தாளர் சோ. தர்மன் ஆர்ப்பாட்டமாக முடித்து வைத்தார்.

நீங்கள் வாசித்துக்கொண்டோ, தலை குனிந்து சிந்தனையிலோ ஆழ்ந்திருந்தீர்கள், எல்லாவற்றிலும் இருந்து விலகிய ஒரு நிலை. தொலைவில் அமர்ந்திருந்த கவிஞர் விக்ரமாதித்யன் அவ்வப்போது தலையை ஆட்டி ஆமோதித்துக்கொண்டிருந்தார், பெரும்பாலும் மோதிர ஆட்காட்டி விரல்களைப் பிண்ணிக்கொண்டு கண்களை மூடி தன்னில் அமிழ்ந்திருந்தார்.

முதல் நாள் மதிய உணவு (சுவையான) இடைவேளையில் உங்களை மீண்டும் அணுகி 'எழுதும் கலை' புத்தகத்தில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டேன், புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது. என் பெயரை மீண்டும் கேட்டுக்கொண்டு ஒரு சக வாசகரிடன் (வாசகர் சிவா) தளத்தில் வெளிவந்த என் கடிதத்தைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினீர்கள், அவருடைய கடிதத்தைக் குறித்தும் என்னிடம் சொன்னீர்கள். உங்களைச் சுற்றி காந்தம் சூழ் இரும்புத்துகள்களாய் எப்போதும் ஒரு வாசகர் கூட்டம், வெடிச் சிரிப்புகள். யானைக் காதுகளுடன் உங்கள் உரையாடல்களை அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்தேன். உரையாடல் தமிழக வரலாற்றில் விடுபட்ட சாதிகள், . கா. பெருமாள் பற்றிய குறிப்புகள், எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படுவதில் உள்ள அரசியல் என்பதில் இருந்து பகடிக்கு மாறியது. உங்கள் பாட்டி முதன் முதலில் நாகர்கோவிலுக்கு வருகை தந்தது, அவருடைய திருவிளையாடல்கள், பாலியோ டயட்காரர்களுக்கு சோற்றின் மேல் ஏற்படும் அதீதப் பற்று என தாவிக்கொண்டிருந்தது. எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் இதில் வந்து பங்குகொண்டார். ஒவ்வொரு வெடிச் சிரிப்பு உரையாடல்களுக்கும் இடையில் ஏற்படும் சில நொடிகள் மௌனத்தை இயல்பாக அடுத்த உரையாடல்களுக்கு நகர்த்தி உடைத்துக்கொண்டிருந்தீர்கள், மீண்டும் வெடிச் சிரிப்புகள், 'Master at Work' என எண்ணிக்கொண்டேன். இத்தனைக்கிடையிலும் இருபத்தியிரண்டு வயது இளைஞர் ஒருவரை, 'என் வாசகர், திருச்சியில் சட்டம் பயில்கிறார், ஆழமான கேள்விகள் கேட்டார்' என்று அறிமுகப்படுத்தவும் நீங்கள் தவறவில்லை.

உங்களைச் சுற்றி இருந்துகொண்டிருக்கும், உங்கள் உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் கண்களைப் பற்றி தனியாகக் குறிப்பிட வேண்டும். திகைப்பு, ஆர்வம், அருகில் இருந்து உங்களை உயிர்ப்புடன் நோக்கும் வாய்ப்பை நம்பமுடியாமை, சரியான இடத்துக்கு வந்தடைந்திருப்பதன் நிறைவு என எத்தனை உணர்வுகளை அவை பிரதிபலிக்கின்றன. என் கற்பனைத்திறன் வார்த்தைகளால் அந்தக் கண்களை விவரிக்க போதாமையில் தடுமாறுகிறது.

கவிதை வாசகனான எனக்கு கவிஞர்கள் போகன் சங்கர், இசை, மதார் (மதாரை கொடுமுடி சென்று ஏற்கனவே சந்தித்திருந்தேன்அவரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய எழுத்தாளர் ஜி எஸ் எஸ் வி நவீன் அவர்களுக்கு நன்றி) ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அண்ணாச்சியையும் சந்தித்தேன், 'சிறுகோட்டுப் பெரும்பழம்' தொகுப்பில் கையெழுத்துப் போட்டார் ('நான் என் பேனாவில் போட்டால்தான் சரியாக வரும்' என்றார்). அழிசி ஸ்ரீனிவாசனிடமும் உரையாடினேன், பெரும் பணிகளை முன்னெடுத்த ஆத்மா, தன் செயல்களுக்கான தடைகளை சலனமில்லாமல் விவரித்தார், இவற்றைக் கடந்து நெடுந்தூரம் பயணிக்க அவருக்கு நீங்கா மனத்திடம் அமையவேண்டும்.

அடுத்த நாள் நிகழ்வு தெலுங்குக் கவிஞர் சின்னவீரபத்ருடுவின் உரையாடலுடன் துவங்கியது. தெலுங்குக் கவிதைகளின் இசைமை, இசைமை தவிர்த்து உள்ளடக்கம் சார்ந்த கவிதைகளை முன்னிலைப்படுத்தும் போக்குக்கும் இதற்குமான முரணியக்கம், கவிதைகள் தன்னுள் விரிந்துகொள்வதன் அடிப்படைகள், என சரளமான எளிய ஆங்கிலத்தில் விவரித்தார். நெறியாளர் ராஜூ தன்னால் இயன்ற அளவு தமிழில் மொழிமாற்ற முயன்றார். ஒரு குறிப்பிட்ட நீண்ட விளக்கத்தை சபையிடம் தமிழில் விவரிக்க நீங்களும் முன்வந்தீர்கள். கவிஞர்கள் எனும் அரிய இனத்தை மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுச்சரடு இணைக்கிறது எனும் எண்ணத்தை அடைந்தேன்.

இரண்டாம் நிகழ்வின் மையமாக இயக்குநர் வசந்த். இலக்கியத்தை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் ஒருவராக, பணிவின் மொத்த உருவமாக, வாசகர்களின் கேள்விகளுக்கு மிகக் கூர்மையான பதில்களை அளித்துக்கொண்டிருந்தார். திரைப்பட இயக்குநர்கள் சார்ந்த என் இறுக்கமான முன் முடிவுகளைத் தகர்த்துக்கொண்டிருந்தார், இனிய மனிதர் எனும் பிம்பத்தை அடைந்தேன்.

அடுத்ததாக விழா நாயகர் கவிஞர் விக்ரமாதித்யனின் அமர்வு, விழாக்கூடம் அடர்ந்திருந்தது. தன் பயணத்தில் எழுத்தாளர் நகுலனின் பங்கு, பத்து வயதிலேயே தொடங்கிய வாசிப்புப் பயணம், கண்ணதாசனின் தாக்கம், கவிதைகளில் 'பூரணத்துவம்' என விவரித்துக்கொண்டிருந்தார், அமர்வின் இரண்டாம் பாதியில் எண்ணங்களில் தனக்கான ஒருமையை அடைந்துவிட்டிருந்தார். நெறியாளர், எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவரிடம் வாசகர்களின் கேள்விகளை சுருக்கி விவரித்தும், நினைவூட்டியும் உதவினார்.

இரண்டாம் நாளின் கடைசிக் கலந்துரையாடலாக பாரளுமன்ற உறுப்பிநர் ஜெய்ராம் ரமேஷ், தன்னை எழுதத் தூண்டிய தேர்தல் தோல்விகள் தந்த வெற்றிடம், மனைவியின் தமிழ் தொடர்பு, கௌதம புத்தர் மற்றும் அம்பேத்கர் குறித்த தன் பார்வைகள், தன் சூழலியல் ஈடுபாடு என மிக விரிவாக உரையாடினார்.

ஒரு மணிநேர இடைவேளைக்குப் பிறகு விருது வழங்கும் விழா 'வீடும் வீதிகளும்' ஆவணப்படத் திரையிடலுடன் தொடங்கியது. விழாவினரின் கூட்டு மனம் கவிஞர் விக்ரமாதித்யனை நோக்கித் திரும்பியிருந்தது, படம் நல்ல வரவேற்புகளைப் பெற்றது. ஐந்தரை மணிக்குத் துவங்கிய நிகழ்வு எட்டரை மணிக்கு சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்தது. விழா அரங்கு சற்று மூச்சு விட்டுக்கொண்டது, எஞ்சிய நண்பர்கள் உங்களிடமும் அண்ணாச்சியிடமும் உரையாடும், புகைப்படம் எடுத்துக்கொள்ளும், கையெழுத்துப் பெறும் எத்தனங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அண்ணாச்சியின் துணைவியார் பகவதியம்மாள் உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கினார்.

மாலை அமெரிக்க விஷ்ணுபுர வாசக வட்ட நண்பர்களான சங்கர் பிரதாப், சி. ஜோ இருவரையும் சந்தித்திருந்தேன். விழா முடிந்து நண்பர் சி.ஜோ. அங்காமாலி செல்லும் எண்ணங்களுடன் இருந்தார். அவருடன் வெளியில் இரவுணவை முடித்துக்கொண்டு மீண்டும் அரங்கம் நோக்கி நடந்துகொண்டிருந்தேன். தொலைவிலேயே மனித முகங்கள், வெடிச் சிரிப்புகளின் ஒலி என ஆரவார ஓசைகள். உங்களைச் சுற்றி விஷ்ணுபுர வாசகர் வட்ட நண்பர்கள், 'சுடர் நோக்கும் ஒளிக் கண்களுடன்' குழுமியிருந்தார்கள், இயக்குநர் வசந்த் உங்கள் அருகில் அமர்ந்து இதில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார். செல்வேந்திரன் வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தார், சுயமழிந்த ஆணவமற்ற தூய சிரிப்பு. எதோ ஒரு மகாகவியின் கவிதைகள் குறித்து உரையாடல் சென்றது, 'பெட்டியில் நீந்தும் மீனே, என் சட்டியில் நீந்தச் சம்மதமா' எனும் கவிதைக்கு நீங்கள் எதிர்வினையாக கவிஞர் வண்ணதாசனின் 'அஞ்சல் பெட்டியில் இறகு' கவிதையைக் குறிப்பிட்டு, இறகைக் கண்ட அந்த மகாகவி 'இன்று வீட்டில் பிரியாணியா' என்று கவிதையை முடித்ததாகச் சொன்னீர்கள். பெரும் கவிஞர்களின் பல கவிதைளினூடாக, இந்த இரு கவிதைகளும் என் மனதில் சேர்ந்துகொண்டன. கவிஞர் விக்ரமாதித்யன் வந்து உங்களிடம் விடை பெற்றுக்கொண்டார்.

மனது நிறைய நினைவுகளுடனும், இரண்டு பைகள் நிறையப் புத்தகங்களுடனும் சிங்காநல்லூரில் திருச்சி செல்லும் அரசுப் பேருந்தில் ஏற எத்தனித்தேன். நடத்துநரின் பார்வையைப் புரிந்துகொண்டு 'கரூர்' என்றேன், கடைசியாகச் சென்று அமருங்கள் என்றார். காலி இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தேன், சில நிமிடங்களில் இருக்கைகள் நிரம்பத்தொடங்கின. 'எடையறியா மென் இருக்கைகள்' என மீண்டும் சொல்லிவிட்டுக் கண்களை மூடினேன், கரூர் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது.

அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை