கவிதைகள் உரை - ஒரு நினைவுக் குறிப்பு
எழுத்தாளர் ஜெயமோகனின் அமெரிக்க வருகையை ஒட்டி Boone, North Carolina நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காவிய முகாமில் கலந்துகொண்டேன். சிறுகதை, நாவல், தத்துவம், இசை, தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதைகள் என்று பல தலைப்புகளில் விவாதங்கள் நடந்தேறின. தமிழ்க் கவிதைகள் விவாதத்தில் ஒரு தலைப்பில் உரையாடும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கவிதைகளைப் பரவலாக வாசிப்பது, நண்பர்களிடம் வாசித்த கவிதைகள் குறித்துப் பேசுவது என்றிருந்தாலும், பலர் கூடும் ஒரு நிகழ்வில் இலக்கிய வடிவங்கள் குறித்து உரையாடி எனக்கு பழக்கமில்லை என்பதால் மிகுந்த தயக்கத்துடன் வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். ஜெயமோகன் போன்ற ஒரு பேராளுமையின் முன் இலக்கிய வடிவங்களில் நுட்பமான ஒன்றாகக் கருதப்படும் கவிதைகள் குறித்துப் பேசுவது என் தயக்கத்தை மேலும் கூட்டியது.
தமிழ்க் கவிதைகளில் உரைக்கான தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் சில
வாரங்களைத் தொலைத்திருந்தேன். கவிதைகள் குறித்த என்னுடைய அறிதல்கள் பரவலாகக் கவிதைகளை வாசிப்பதனூடாகவும், கவிதைகள் குறித்து இலக்கிய ஆளுமைகள் எழுதும் கட்டுரைகள் மூலமும், சில கவிஞர்களிடம் நேரடியாகப் பேச அமைந்த வாய்ப்புகளினூடாகவும், நண்பர்களிடம் வாசித்த கவிதைகள் குறித்து உரைடுவதன் மூலமும் அடைந்தவை. கவிதைகளின் கோட்பாட்டுகள் குறித்தும் அதிகப் பரிச்சயமில்லை என்பதால் தொடக்கத்திலேயே கோட்பாட்டுகளை ஒட்டிப் பேசும் எண்ணங்களையும் தவிர்த்தேன். நிகழ்வுகள் குறித்த ஆவணத்தில் அவரவர்
பேசும் தலைப்புகளும் அதற்கான தகவல்களும் செய்திகளாக வந்துகொண்டே இருந்தன.
'கவிதை வாசிப்பில் தொடர்ச்சியை அடைதல்' என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து விழா அமைப்பாளருக்கு அனுப்பி வைத்தேன், அது மிகவும் பொதுவான தலைப்பாக இருப்பதாகக் கருதி தவிர்க்கப்பட்டது. ஆனால் என்னுடைய புரிதல்களுக்காக நிராகரிக்கப்பட்ட இந்த தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதிவைத்துக்கொண்டேன்.
கவிஞர் மதாரை அழைத்து அவரிடம் யோசனைகள் கேட்டேன், அவர் இதுபோன்ற
கூடுகைகளில் கலந்துகொண்டு உரையாற்றிய அனுபவம் பெற்றவர். நான் வாசிக்கும் கவிதைகளில்
சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவை குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்து என்னைச்
சிந்திக்கச் சொன்னார். கவிதை முகாம்களில் இந்த முறை பரவலாகக் கடைப்பிடிக்கப்படுவதையும் சொன்னார். வாசிக்கும் கவிதைகளில் கவர்ந்தவற்றைக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்ளும் வழக்கமுள்ளவன் என்பதால், எனக்கும் அதுவே சரியான அணுகுமுறையாகத் தோன்றியது. விழா அமைப்பாளருக்கு இந்த முடிவை அனுப்பிவிட்டு கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும்
பணியில் ஈடுபட்டேன்.
நான்கு கவிதைகளை வாசித்து என் எண்ணங்களைப் பகிரலாம் என்று முடிவு
செய்து, இரண்டு மூத்த கவிஞர்களின் கவிதைகள், இரண்டு சமகாலக் கவிஞர்களின் கவிதைகள் என்று
வகுத்துக்கொண்டேன். கவிஞர் அபி (அபி கவிதைகள்), தேவதச்சன் (கடைசி டினோசர்), மதார்
(வெயில் பறந்தது), ஆனந்த்குமார் (டிப் டிப் டிப்) என்று கவிதைத் தொகுப்புகளின் வரிசையை மனதில் எண்ணிக்கொண்டேன்.
அபி கவிதைகள், வெயில் பறந்தது தொகுப்புகளில் சில கவிதைகளுக்கு ஏற்கனவே குறிப்புகளை
எழுதி வைத்திருந்தேன், ஆனந்த்குமாரின் 'டிப் டிப் டிப்' தொகுப்புக்கு ஒரு மதிப்புரை
எழுதும் வேலைகளில் இருந்ததால் அதுவும் இலகுவாகவே முடிந்தது. எஞ்சியிருப்பது தேவதச்சனின்
'கடைசி டினோசர்' தொகுப்பு, 'தலையில்லாத' என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிலை குறித்த கவிதை
என் எண்ணங்களை ஆக்ரமித்திருந்தது, அந்தக் கவிதையையும் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.
அபி, தேவதச்சன் இருவருடைய கவிதைகளும் படிமச் செரிவு மிக்கவை,
ஒரு வாசிப்பில் புரிந்துகொள்ளக்கூடியவை அல்ல. என்னுடைய நோக்கம் இந்தக் கவிதைகளிலிருந்த
படிமங்களை மற்றவர்கள் என்னவாகப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதாகவே இருந்தது.
மதார், ஆனந்த்குமாருடைய கவிதைகள் இந்த இரு கவிதைகளிலிருந்து சொல்முறை, காட்சிகள் என்று
எல்லாக் கோணங்களிலும் மாறுபட்டவை, சற்று நேரடியாக வாசகனிடம் பேசும் தன்மைகொண்டவை. வேறுபட்ட
கவிதைகளை வாசிப்பதன் மூலம், அவற்றிலிருந்து விவாதத்துக்கான தூண்டுதலை அங்கு கிளர்த்துவதே என் நோக்கமாக இருந்தது.
முதலில் குறிப்புகளை பெரிய பத்திகளாக எழுதிவைத்திருந்தேன், அந்தக்
கவிதைகள் குறித்து தொடர் சிந்தனைகளில் இருந்தேன். அன்றாட நிகழ்வுகளில் பல தருணங்களில்
கவிதைகள் குறித்த புதிய திறப்புகள் வந்துகொண்டே இருந்தன, குறிப்பாக விடிகாலைப் பொழுதில்
மனதில் ஏற்படும் எண்ணங்கள் தெளிவாக அமைந்தன. மனதுக்குள் பலமுறை உரைகளைப் பேசி ஒத்திகை
பார்த்துக்கொண்டே இருந்தேன். நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன் பெரிய பத்திகளாக
இருந்தவற்றை சிறு சிறு குறிப்புகளாக மாற்றிக்கொண்டு, கணிப்பொறியில் இருந்த ஆவணத்தை
மின்னஞ்சலில் அனுப்பி வாசிக்கத் தோதாக வைத்துக்கொண்டேன்.
மே மாதம் 14ம் தேதி நிகழவிருந்த கவிதை அமர்வு, முதல் நாளே மாற்றப்பட்டது.
ஒரு வகையில் சிந்தனைகளின் பின்புலத்தில் உரை பற்றிய நினைவுகள் என்னை அழுத்திக்கொண்டே இருந்தன, அதிலிருந்து மீள ஒரே வழி உரையைப் பேசி முடித்துவிடுவது மட்டுமே. ஒருவகையில்
முதல் நாளாக நிகழ்வு மாற்றப்பட்டது எனக்கு உதவியது என்றே சொல்லலாம். நேரம் கருதி நான்கு
கவிதைகளை மூன்றாகக் குறைத்துக்கொள்ள அமைப்பாளர்கள் வேண்டினார்கள், ஆனந்த்குமாரின் ஒரு
கவிதையைத் தவிர்த்துவிட்டு மூன்றாக்கினேன்.
தேனீர் இடைவேளைக்குப் பிறகு உரை தொடங்கும் நேரம் வந்திருந்தது. இடைவேளையில் அலைபேசியில் இருந்த குறிப்புகளை ஒருமுறை வாசித்து ஒத்திகை செய்துகொண்டேன்.
உரையின் தொடக்கத்தில் என் குரலில் நடுக்கமிருந்தது எனக்கே தெரிந்தது, அமர்வில் உள்ளவர்களில்
யாரைப் பார்த்து பேசுவது என்பதிலும் தீர்மானமின்மையிருந்தது. பின் ஒரு முப்பது நொடிகள்
இருக்கலாம், அபியின் உலா கவிதையை நான் வாசித்துக்கொண்டிருக்கும்போது என் குரலில் இருந்து
வெளிவரும் ஒலியை ஒற்றி என் சிந்தனைகள் குவிந்தன. என் குரலின் ஒலியைப் பின்பற்றி தயக்கங்களிலிருந்து வெளிவந்தேன். என்னையறியாமல் குறிப்புகள் நினைவுகளிலிருந்து எழுந்து வார்த்தைகளாக மாறி வெளிப்பட்டன, இலகுவானேன்.
ஜெயமோகன் 'உலா' கவிதையைப் மூன்று முறை வாசிக்கச் சொன்னார். மீண்டும்
வாசிக்கையில் கவிதையின் வரிகளும், அவற்றின் காட்சிகளும் தெளிவானதைப் போன்ற எண்ணம் எழுந்தது.
இந்தக் கவிதையை இதற்குமுன் பலமுறை வாசித்தும் கவிதையில் முழுதாக நுழையமுடியாமல் இருந்திருக்கிறேன். ஏதோ ஒரு அமானுஷ்ய கவிதை என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். ஜெயமோகன் 'இதில் என்ன உனக்குப்
புரியாமல் இருக்கிறது' என்று கேட்டார். 'உலா' கவிதையை வாசித்து இரண்டு ஆண்டுகளாகியிருந்தன, மீண்டும்
மறு வாசிப்பு செய்யும்போது கவிதையின் மையம் எனக்குத் திறந்துகொண்டது. இந்த இரண்டு வருடங்களில் பல நூறு கவிதைகளை வாசித்திருந்தேன், கவிதைகளை வாசிக்கத்
தேவையான உள்ளுணர்வு கூடியிருந்தது என்றே எண்ணுகிறேன்.
தேவதச்சனின் 'தலையில்லாத' கவிதை குறித்து ஜெயமோகன் நிறைய விஷயங்களைப்
பகிர்ந்துகொண்டார். அதன் மூலப் பிரதியை வாசித்திருந்ததாகவும், கவிதையின் ஒரு வரியில்
இருந்த 'உலகம்' என்பதை 'உலோகம்' என்றும் சொன்னார், புத்தகத்திலும் இது பிழையாகவே அச்சேறியிருந்தது. இந்தக் கவிதையையும் உரையில் பல முறை வாசித்தேன்,
கவிதையில் 'கண்ணகி' என்று ஒரு தொன்மமும், மீண்டும் மூடிக்கொள்ளும் முட்டை என்ற படிமமும்
விவாதப்பொருளானது. நண்பர் சங்கர் பிரதாப் இந்தக் கவிதையில் இருந்த பரதேசி என்பவனைப்
பற்றியும், சிலையின் மேல் இருந்த பல்ப் என்ற காட்சியையும் எப்படிப் புரிந்துகொள்வது
என்று ஒரு கேள்வியை ஜெயமோகனிடம் வைத்தார்.
ஜெயமோகன் கவிதை வாசிப்பில் மையம் ஒன்றைக் கண்டுகொள்வது அவசியம்
என்றும், இந்தக் கவிதையில் சிலையே மையம் என்றும் சொன்னார். கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பது மட்டுமே கவிதைகளில் இந்தப் பண்புகளை அறிந்துகொள்ள ஒரே வழி என்றும் சொன்னார்.
கவிதை வாசிப்பு ஒரு குறிப்பிட்ட வாசகர்களுக்கானது மட்டுமே என்றும் தன் எண்ணங்களைப்
பகிர்ந்தார்.
மதாரின் ஒரு சிறு கவிதையை வாசித்தேன். மதாரின் கவிதைகள் பின்நவீனத்துவ காலகட்டத்தைச் சார்ந்தவை என்றும், அபி, தேவதச்சன் போன்றவர்களின் கவிதைகள் நவீன காலகட்டக் கவிதைகள்
என்றும் வகைப்படுத்தினார். தத்துவச் செறிவு, ஆழ்ந்த படிமங்கள், உக்கிரம், இருண்மை போன்ற
பண்புகளை பின்நவீனத்துவக் கவிதைகள் தவிர்க்கின்றன என்றும் கூறினார். வாழ்வின் எல்லாக்
கோணங்களையும் இலகுவாக, ஒரு வகை புன்னகையுடன் நோக்கும் இயல்புகள் பின்நவீனத்துவக் கவிதைகளில்
உள்ளன என்றார். எடுத்துக்காட்டாக கவிஞர் இசையின் சில கவிதைகளை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்துச்
சொன்னார்.
நான் தேவதச்சனின் சிலை குறித்த கவிதையில் சிலையை நீக்கிவிட்டு
வாசிக்கலாமா என்ற கேள்வியை முன்வைத்தேன், அது சரியான வாசிப்பல்ல என்பதே ஜெயமோகனின் பதிலாக இருந்தது.
ஒருவகையில் என்னுடைய கவிதை வாசிப்பின் அடிப்படைகளை இந்த பதில் அசைத்துப்போட்டது என்றே
எண்ணுகிறேன். ஒரு கவிதையை வாசிப்பில் தோன்றும் கட்டற்ற கற்பனைகளைக் கொண்டு அணுகலாம் என்றும், எல்லாக் கோணங்களையும் கவிதைகளின் மேல் குவிக்கலாம் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால்
ஜெயமோகனுடைய அந்தப் பதில் என் எண்ணங்களை உடைத்தது.
உரையை முடித்துவிட்டு அவர் அப்படிச் சொன்னதற்கான காரணங்களை எண்ணிக்கொண்டிருந்தேன். என்னுடைய புரிதல் தவறல்ல, கவிதையின் பேசுபொருள் சார்ந்து வாசிப்புக் கோணங்கள் அமையவேண்டும் என்று புரிந்துகொண்டேன். தேவதச்சனின் சிலை குறித்த
கவிதையில் சிலை என்பதே மையப் படிமம், ஒட்டுமொத்தக் கவிதையும் இந்தச் சிலையை நோக்கியே
எழுதப்பட்டிருந்தது. இங்கு சிலையை நீக்கிவிட்டு வாசிப்பது பிழை என்பதைச் சுட்டவே ஜெயமோகனின் அவ்வாறு பதில் சொன்னார் என்பதாக இருந்தது என் புரிதல்.
கவிதைகள் குறித்த இந்த உரை என் வாசிப்பையும், கவிதைகளின் மேல் நான் கொண்டுள்ள பிரேமையையும் மேம்படுத்தியது, மனதில் கவிதைகள் பற்றிய புரிதல் சற்று கூடியிருந்தது. ஜெயமோகன் போன்ற பேராளுமை ஒரு வாசகனில் ஏற்படுத்தும் பாதிப்பு இது, அதனால்தான் அவர் தமிழிலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.
Comments
Post a Comment