'பிரயாணம்' சிறுகதை, அசோகமித்திரன் - ஒரு வாசிப்பு

                                                    


அசோகமித்திரனின் 'பிரயாணம்' சிறுகதையை சில வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன், கதையை இரண்டு முறை மறுவாசிப்பு செய்தபோது எனக்குள் கதை இன்னும் நன்றாக விரிந்திருந்தது. கதை குறித்து மனதில் ஏற்பட்ட எண்ணங்களை இந்தக் கட்டுரை மூலம் தொகுத்துக்கொள்கிறேன்.

உடல் நலிவுற்ற குருதேவருடன் அவருடைய சீடன் ஒருவன் ஹரிராம்புகூர் எனும் ஊருக்கு ஒரு மாலையில் மலைப்பிரதேசம் ஒன்றின் வழியாகப் பயணிக்கிறான். மலை உச்சியில் அமைந்திருந்த அவர்களுடைய ஆசிரமத்திலிருந்து பள்ளத்தில் இறங்கி வெகுதூரம் பயணித்துதான் அந்த ஊரை அடைய முடியும். குருதேவரின் உடல் மோசமாகிக்கொண்டேயிருக்க பயணம் மட்டுப்படுகிறது, ஒரு இரவை அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கில் ஓரிடத்தில் கழிக்க முடிவு செய்கிறார்கள். அவர்களை ஒரு ஓநாய்க் கூட்டம் சூழ்ந்துகொள்கிறது. இந்தச் சூழலை சீடன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை, விறுவிறுப்பான ஒரு சிறுகதையாக்கியிருக்கிறார் அசோகமித்திரன்.

கதையில் புறச்சூழல் மிக ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது. இரவும், மலைகளும், ஓசைகளற்ற தனிமையும், விரிந்த வானின் நட்சத்திரங்களும் என ஒரு மலைச்சரிவின் குளிர்ந்த இரவை மிகத் தத்ரூபமாக அசோகமித்திரன் விவரித்திருக்கிறார். அந்தச் சீடனின் யோகம் பயின்ற மனம் புறச்சூழலில் இயைந்து அதில் ஒன்றாகவே லயித்துவிடுவதையும், அதைப் பிரக்ஞை கொண்டு அவன் கலைத்துவிட்டு குருதேவரின் பாதுகாப்புக்காக விழித்திருப்பதும் சொல்லப்படுகிறது. 

ஓநாய்கள் கூட்டம் தாக்கத் தொடங்கியதும் அந்தச் சீடனும் ஓநாய்க்கூட்டத்தில் ஒருவனாக உருவெடுக்கிறான், காத்திரமாகச் சண்டை செய்கிறான், ஒரு மிருகம் போல் கூச்சலிடுகிறான். உயிரைத் தற்காத்துக்கொள்ளும் ஒரு சூழலில் மனிதனின் அகம் இயல்பாகக் குவிந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் அந்த ஓநாய்களின் மேல் அவனுக்குப் பரிவு ஏற்படுகிறது, ஒரு சகோதரனுடன் சண்டை செய்வதுபோல் அவன் எண்ணுவதாக அசோகமித்திரன் எழுதுகிறார். உயிர்பிழைத்தல் எனும் ஆதி உணர்வு அந்தச் சீடனுக்கு பெரும் வலிமையை அளிக்கிறது.

யோகம் பயின்று உடலைத் தொய்வின்றி வைத்திருக்கும் குருதேவர் நோயுற்றதும் மூச்சுவிடக்கூட சிரமப்படுகிறார், இயல்பாக ஒவ்வொரு மூச்சுக்கும் இடைவெளி விடும் சூத்திரமறிந்த அவர் வாயில் மூச்சுவிடக்கூட சிரமப்படுகிறார். முதுமை யாரிடமும் கருணை காட்டுவதில்லை, இயற்கையின் முன் எல்லா மனிதர்களும் ஒன்றுதான். கானகம் அதன்போக்கில் குரூரமாக இயங்குகிறது, யோகம் முக்தி போன்ற மனிதனின் உயர் லட்சியங்கள் அங்கு ஒரு பொருட்டே இல்லை. இறக்கும் தருவாயில் வாயில் பாலூற்றப்படவேண்டும் என்றும், ஆறடி குழி தோண்டித் தன்னைப் புதைக்கவேண்டும் எனும் அவருடைய விருப்பங்கள் காட்டின் சூழலில் அபத்தமாகிவிடுகிறது. இந்தக் கதை இயற்கையின் முன் மனிதன் எத்தனை சிறியவன் என்பதை உணர்த்துகிறது.

கதையிலிருந்து நான் பெற்றுக்கொண்டது, யோகம் பயிலும் மனதின் தீர்க்கம் - இத்தனை ஆபத்தான் சூழலிலும் அந்தச் சீடன் காட்டின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறான், ஒரு சிறிய மூச்சொலியைக்கூட  அவன் மனம் கூர்மையாக அறிகிறது, மனலயம் அவனுக்கு வாய்க்கிறது. அசோகமித்திரனின் கதைகளுக்கே உரிய மனித வாழ்வின் அபத்தங்களைச் சொல்லும் இன்னொரு கதையாகவே இதையும் நான் எண்ணுகிறேன். 

கடைசி வரியில் இந்தக் கதை இன்னொரு தளத்துக்கு நகர்ந்து நம்மைத் திகைக்கவைக்கிறது, அவருடைய தலைசிறந்த கதைகளில் ஒன்று என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. 

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை