'மரணக்குழி' சிறுகதை - ஒரு கடிதம்

                                                    


கடிதம் எழுதப்பட்ட நாள்: ஆகஸ்ட் 31, 2021

வல்லினம் இணைய இதழில் வெளியான 'மரணக்குழி' சிறுகதை குறித்து எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனுக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள நவீன்,

தொன்மத்தையும், இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய அதிகாரத்தின் கைகளில் சிக்கிய மலேசியாவின் பினாங்கு தீவையும் பின்புலத்தில் நிறுத்தி ஒரு சிறுகதையைத் தந்துள்ளீர்கள்.

உலகில் தம்முடைய இருப்பே கேள்விக்குள்ளாகும்போது மனிதனின் அகம் எதைக்கொண்டு அதை எதிர்கொள்ளும், எதைப் பற்றிக்கொள்ளும் என்பதே இந்தக் கதையின் சாரமாக எனக்கு தோற்றமளிக்கிறது. ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று கூட நம்மை இக்கட்டுகளிலிருந்து மீட்டுவிடக்கூடும். பூசாரி குழியடி சித்தர் கதை மூலமாக உயிர் வாழ்தலின் விழிம்பில் இருக்கும் அவனுக்கு அந்த நம்பிக்கையை அளிக்கிறார். அவன் 'அந்த சித்தர் நெசமாலும் எந்திச்சி போனாரா?' என்று கேட்ட அந்த நொடியிலேயே எப்படியும் இதிலிருந்து மீள முடியும் எனறு நம்புகிறான். இதைக் கதையின் நுட்பமான தருணங்களில் ஒன்று என்று எண்ணுகிறேன்.

பூசாரி குழியை விட்டு வெளிவரும்போது பறவைகள் இன்னும் சப்தமிட்டுக்கொண்டிருப்பதை, இத்தனை அழித்தலுக்குப் பின்னரும் உயிர் வாழ்தல் நிகழ்ந்துகொண்டே இருப்பதன் குறியீடாகவே உணர்ந்தேன்.

நாம் எல்லோருக்குமே வாழ்வின் நிலையாமையும் அதன் தவிர்க்கமுடியாத தன்மையும் நிலைகுலைவை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. தொன்மங்கள், சடங்குகள், கடவுள் வழிபாட்டுப் பிம்பங்கள் அனைத்துமே இந்த நிலையாமையை எதிர்கொள்ளவே தலைமுறைகள் தாண்டி நம்மை வந்து அடைகின்றன என எண்ணுகிறேன். நம் வாழ்வின் அன்றாடங்களில் நம்மை அறியாமல் தொன்மங்கள் நம்முடன் பயணித்துக்கொண்டே உள்ளன என்பதையும் மறுக்க முடியவில்லை. இதன் பிண்ணனியில் வைத்துப் பார்த்தால், உங்கள் கதைகள் இன்னும் அர்த்தம் பெறுகின்றன.

கதையில் ஒரு போரின் விழைவாக அழிக்கப்பட்ட காட்டின் பிண்ணனி காத்திரமாகக் கண்களில் நிற்கிறது.  பறவைகளும், உடும்புகளும், கழுகுகளும், கூகையும், பிணங்கள் தின்னப்படும் ஓசையும், துர்நாற்றமும் எனக் காட்சிகள் கதைக்கு வலு சேர்க்கின்றன. மரணக்குழியும் அதைச் சுற்றிய பதற்றச் சூழலும் முதல் பாகம் முழுக்க என் மனதின் பின் ஒடிக்கொண்டே இருந்தது. இதன் பிண்ணனியில்தான் இரு உயிர்களும் மரணக்குழியில் உயிரைப் பற்றிக்கொண்டு ஒடுங்கியிருக்கின்றன.

அவன் மரணக்குழிக்குள் எதைப் பிடித்துக்கொண்டு வாழ எண்ணியிருந்தானோ, அதன் கைகளையே இறுகப் பற்றிக்கொண்டு செல்லும் பிம்பம் ஒரு ஆழமான முடிவை கதைக்கு அளித்திருந்தது. அவன் பிடித்துக்கொண்டிருப்பது வெறும் கைகளல்ல, அது குழியடி சித்தரின், குழியடி சொடலை மாடனின் கைகள். ஏன், ஒட்டு மொத்த மானுடத்தின் உயிர் வாழ்வதன் ஆதார நம்பிக்கைகளுக்கான கைகள் அவை!! 

இன்னொரு ஆழமான வாசிப்பனுபவம் தந்த சிறுகதை, மனமார்ந்த வாழ்த்துகள் நவீன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை