மதார் கவிதைகள், வனம் இதழ் - ஒரு கடிதம்
'வனம்' இணைய இதழில் வெளியான கவிஞர் மதாரின் ஐந்து கவிதைகளை வாசித்துவிட்டு
அவருக்கு எழுதிய கடிதம்.
கடிதம் எழுதப்பட்ட நாள்: ஏப்ரல் 4, 2022
அன்புள்ள மதார்,
ஐந்து கவிதைகளையும் வாசித்தேன். கவிதைகள் என்னுள் இறங்க சற்று நேரமாகியது - கவிதை எழுதுதலும் சரி, வாசிப்பும் சரி அதற்கே உரிய ஒரு
மனநிலையை நம்மிடம் கோருகிறது, அன்றாடங்கள் நம் கற்பனைகளை மட்டுப்படுத்திவிடுகின்றன
– இதிலிருந்து வெளிவருவதற்காகவே கவிதைகளின் திசையை நோக்கி அமர்ந்துகொள்கிறேன்.
தொடர்ந்து கவிதை வாசிப்பிலும், அது சார்பான உரையாடல்களிலும்
இருக்கவே விரும்புகிறேன் – கடந்த முறை உங்களுடன் கவிதைகள் குறித்து
உரையாடியது இன்னும் பசுமையாய் என்னுள் உள்ளது, உங்கள் நேரத்தை
சற்று வலுக்கட்டாயமாகவே எடுத்துக்கொண்டுவிட்டேன் என்ற குற்றஉணர்வுடனே இதைச் சொல்கிறேன்.
இந்தக் கவிதைகளை நான் மிகவும் புறவயமாகவே புரிந்துகொண்டிருக்கிறேன்
என்றே தோன்றுகிறது, புறவயத் தர்க்கத்தால் என்றும்
சொல்லலாம். என்னில் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விட்டதன்
ஏமாற்றமும் உண்டு, ஆனால் எதிர்பாராத ஒரு தருணத்தில், ஒரு உரையாடலில் இவை சட்டென விரிந்துகொள்ளலாம், அதற்கான
சாத்தியங்கள் இந்தக் கவிதைகளில் இருப்பதாகவே உணர்கிறேன். கவிதை
வாசிப்பு எனும் இனிய விளையாட்டில் இந்த அம்சங்களும் உண்டுதானே!!
மின்னலின் பகல் –
மின்னல் வெட்டில் ஒரு பகல் சடுதியில் தோன்றி
மறைந்துவிடுகிறது, சட்டெனத் தோன்றி மறைந்துவிடும்
ஒரு கடந்தகால நிகழ்வுபோல. நான் இங்கு குறிப்பிடுவது நம்முடைய
நினைவுகளின் ஆழ்ந்த வண்டலில் புதைந்துகிடந்த ஒரு காட்சி, ஒரு
நிகழ்வு, மனிதர்கள், வாசனை இவை எல்லாவற்றையும்.
இன்னும் குறிப்பாக நாம் பல வருடங்களாக எண்ணிப்பார்த்திராத சில அனுபவங்களைச்
சொல்கிறேன், அது நிகழும்போது நாம் பல வகையான மன அதிர்வுகளை அடைகிறோம்,
மகிழ்ச்சி, சோகம், பெருமூச்சு
என எல்லாமுமாய் - இது
ஏன் இந்த நொடியில் தோன்றுகிறது என்பது ஒரு புதிராக நம்மில் விரிந்துவிடுகிறது.
மனநல நிபுணர்கள் இதற்கான காரணங்களை விரிவாகப் பேசியிருக்கலாம்,
ஆனால் கவிதை எனும் ஒரு கலை வடிவம் வாழ்வின், வாழ்தலின்
எல்லா அம்சங்களையும் தொட்டுவிடும் தன்மைகொண்டிருப்பதையே இது சுட்டுகிறது.
நம் ஒட்டு மொத்த வாழ்வும் பிரபஞ்சமெனும் பிரம்மாண்டத்தில்
ஒரு சிறு துளிதான், மின்னல் வெட்டில் தோன்றி மறையும்
பகல் போல, இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்ற ஆழமான கேள்வி
எழுகிறது. இது இலக்கியத்தில் சாதாரணமாக முன்வைக்கப்படும் கருத்துதான்,
ஆனால் எண்ணினால் திகைப்பே எஞ்சுகிறது. இந்தக் கவிதை
ஒரு ஹைக்கூத்தன்மையுடன் இருப்பதாகவும் எண்ணுகிறேன்.
இரண்டாவது கவிதை –
தியானத்தில் அரிதாக நிகழும் ஒரு நிலை, ஆழத்தின் ஆழத்துக்குச் சென்று விழித்துக்கொள்வது, இங்கு விழித்தல் என்பதை விழிப்புணர்வு என்றே வாசிக்கிறேன். தட்டுவது உறக்கத்தைக் கலைக்க, ஆனால் அது இன்னும் உறங்கல்
எனும் செயலுக்கு இட்டுச் செல்கிறது, அழகிய முரண் ஒன்றைச் சொல்லிச்
செல்கிறது இந்தக் கவிதை.
ஏக்கங்கள் –
பறவையும், கவிஞனும்
எளிய செயல் ஒன்றால் உயர்ந்த ஒரு நிலையை அடையப் பிரயாசைகொள்ளும் ஒன்றைச் சொல்கிறது இந்தக்
கவிதை. நம் செயல்கள் எல்லாவற்றுக்கும் ஒரு விளைவு உண்டு,
ஒன்றின் தூண்டலில் இன்னொன்று நிகழ்ந்துவிடுகிறது, ஒரு சங்கிலித்தொடர் போல. நம்மைச் சுற்றி நிகழும் இயற்கையைக்
கூர்ந்து கவனித்தால் போதும், உயர்ந்த நிலைகளை அடையலாம் என்றும்
வாசிக்கிறேன், என்றாவது ஒருநாள் நாம் எறியும் கல் நிலைவைத் தொட்டுவிடும்
வாய்ப்பு அமையலாம் அல்லவா?
டிக்கெட் –
நம் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு உந்துபுள்ளி
உள்ளதைச் சொல்கிறதா கவிதை? நாம் எல்லோரும் எதோ ஒன்றால்
முடுக்கப்படுகிறோம், முடுக்கியும் விடுகிறோம், முடிவில்லாத விளையாட்டா இது?
முன்னாள் காதலி –
நீங்கள் எல்லாக் கவிதைகளுக்கும் தலைப்பு வைப்பதில்லை
என்பதைக் கவனித்திருக்கிறேன். இந்தக் கவிதையின் தலைப்பை
எதேச்சையாகத் தவறவிட்டுவிட்டு சில முறை வாசித்தேன், கொஞ்சம் தடுமாறினேன்.
இந்தத் தலைப்பு கண்களில் பட்டதும் ஒரு சிறு துணுக்குறல் ஏற்பட்டது,
முன்னாள் கதலியின் கழுத்தில் ஒளிரும் தாலியைச் சொல்கிறதா கவிதை?
தாலி என்பது மூடிய கதவுகள் போல பாதுகாப்பானது என்று வாசிக்கிறேன்,
முன்னாள் காதலி என்னை நெருங்காதே என்று சொல்வதாகவும்!!
இந்தக் கவிதைகளை வாசித்துவிட்டு எழுதும்போது நான் அடைந்தவற்றைத்தான் எழுதியிருக்கிறேன், அது ஒன்றும் இரகசியமில்லைதான், அதற்காகத்தான் எழுதுகிறேன், எழுத விரும்புகிறேன். எழுதும்போதுதான் இன்னும் ஆழமான வாசிப்பு நிகழ்கிறது என்பதை உணர்கிறேன். என்னுடைய இந்த மாலை கவிதைகளால் நிரம்பி நிறைவான ஒன்றாக மாறிவிட்டது, அதற்காகவும் உங்களுக்கு நன்றிகள்.
அன்புடன்,
பாலாஜி ராஜூ
Comments
Post a Comment