'ஆபரணம்' சிறுகதை - ஒரு வாசிப்பு
https://tamizhini.in/2021/08/29/ஆபரணம்
ஒரு சிறுகதையை கவித்துவமான படைப்பு என்று எப்படிச் சொல்கிறோம்? கதாப்பாத்திரங்களின் மன ஓட்டமோ, ஒரு புறக்காட்சியோ, ஆசிரியர் குரலின் தெறிப்புகளோ அழகிய உவமைகளாலும், இயற்கைக் காட்சி ஒப்பிடலாலும் மேலும் வாசகனின் மனதில் ஆழமாய் விரிந்தால் அப்படி வகைப்படுத்துகிறோம். இந்தக் கவித்துவம் எனும் அம்சம் கதையின் நடைக்கும் கரிசனத்துக்கும் சற்றும் உறுத்தாமலும் வெளிப்படவேண்டும்.
ஒரு வியாபாரப் பிண்ணனி, இரண்டு சகோதரர்கள், ஒரு நூதனமான வியாபாரத் தந்திரம், இரு துருவங்களாக அவர்களுடைய மனைவிகள், ஒரு வறுமை, மகிழ்ச்சி, வெற்றிடம் இவைகளைக்கொண்ட ஒரு சிறுகதையில் எத்தனை உவமைகளை நாம் எதிர்பார்க்கலாம்? பதிநான்கு உவமைகளை தனிக் குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறேன், இதற்கு மேலும் இருக்கலாம். சிலவற்றை இங்கு நினைவுகூர்கிறேன்,
'சிறிய தந்தூபிகளைப் போல பூசணிப்பூக்கள் வெயிலில் பாடிக்கொண்டிருந்தன'
'அழுக்கான பழைய மெழுகுவர்த்தியைப்போல சித்திரை வியர்வைக்குள் நின்றிருந்தாள்'
'காட்டு விலங்கைப்போலிருந்த திரவியத்தின் கால்கள்'
'நன்னீரால் குளிப்பாட்டிய சிறிய தாவரம் போல'
'பாறைப்படவுகளில் பெய்கின்ற மழையைப் போல'
'வாளின் கூர்நுனியால் வெட்டிட முடியாத நுரைக்குமிழி போல'
'முற்றிய விறகொன்றின் மீது தீ படருவதைப் போல'
வியாபாரமும் அதன் நுணுக்கங்களும் மட்டுமே ஊறிய மனதில், சகோதரனையும் தந்திரமாக வீழ்த்தும் உத்தியைக் கையாள்கிறான் திரவியம். காட்டு விலங்கைப் போல உறுதியான அவன் கால்கள் வீங்கி, நோயுறுகிறான். தனக்கு அளிக்கப்பட்ட வியாபாரப் பங்கினை சரியாகக் கையாளத் தெரியாமல் எல்லாவற்றையும் இழக்கிறான் சகோதரன் திலகர். திலகரின் மனைவியும் வெகுளித்தனத்தின் மொத்த உருவமாக இருக்கிறாள், மூன்றாவது சிசுவைப் பெற்றெடுக்கிறாள், ஏழ்மையிலும் மகிழ்வான வாழ்வு அமைகிறது. திரவியத்தின் மனைவியாக மரியம், குழந்தையின்மையின் வெற்றிடத்தை வெறித்தனமான உழைப்பின்னால் பூர்த்திசெய்துகொள்கிறாள், கணக்கராக காளியப்பன்.
திருச்செந்தாழையின் சிறுகதைகளில் வியாபார உலகில் இயங்கும் மனிதர்கள் உயிர்ப்போடு உலவுகிறார்கள், இந்தக் கதையிலும் அதே பிண்ணனி, ஆனால் கதைசொல்லும் திறனால் மகத்தான ஒரு சிறுகதையைப் படைத்திருக்கிறார். மரியத்தின் மனதில் எழும் பொறாமை மிகக் கூர்மையாக கதையில் வெளிப்பட்டுள்ளது, ஒட்டு மொத்தக் கதையும் அவளைச் சுற்றியே பின்னப்படுகிறது. பாலில் ஊறவைக்கப்பட்ட சித்திரையின் அடகு நகைகளை முகர்கிறாள், அதில் பால் கவிச்சியடிக்கிறது, மிக ஆழமான குறியீடாகவே அதை எண்ணுகிறேன். சிறுகதை முழுக்க கதாப்பத்திரங்களின் புறச் சூழலும், அக ஓட்டமும் துல்லியமான சித்திரங்களாக வரையப்பட்டுள்ளது.
வாழ்வு தனக்குக் கொடுக்காத ஒன்றை இன்னொன்றால் ஆவேசமாகச் சரி செய்ய முனைகிறாள் மரியம். மனித அகம் செயல்படும் விதம் மிக அழுத்தமாக அவளின் மூலம் வாசகனுக்குக் கடத்தப்படுகிறது. வியாபார வெற்றி வாழ்வையே பணையம் கேட்கிறது, செல்வம் அடைந்த மரியமும் திரவியமும், திலகர் சித்திரையின் எளிமையின் முன் தோற்கிறார்கள், கடைசி வரை இழக்க முடியாத அகந்தையைச் சுமந்துகொண்டு விலகுகிறார்கள். மரியத்துக்கு திரவியம் குழந்தைபோலத் தெரிகிறான், மரியத்தின் இறுக்கமான பாவனைகளுக்கப்பால் உள்ள சிறுமியை திரவியம் உணர்கிறான். அவர்களும் வியாபார வெற்றி எனும் விசைக்கு தங்களை பலியாக்கிக்கொண்ட எளிய உயிர்கள்தான்.
இந்தச் சிறுகதையின் வெற்றி பாத்திரப் படைப்பிலும், அவர்களுடைய மன ஓட்டங்கள் விவரிக்கப்பட்ட விதத்திலும் உள்ளது என்று எண்ணுகிறேன். இத்தனை கற்பனை வீச்சு வெளிப்பட்ட சிறுகதையை நான் சமீபத்தில் வாசித்ததில்லை. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளே கூட அவர்களின் சில சிறுகதைகளின் வாயிலாகவே நினைவுகூரப்படுகிறார்கள். திருச்செந்தாழையின் படைப்புலகில் இந்தக் கதை இன்னொரு மைல்கல்லாக அமையும் என்று எனக்குத் தோன்றுகிறது.
Comments
Post a Comment