இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் - http://www.kavithaigal.in/

                                                    


http://www.kavithaigal.in/ இதழில் இளங்கோ கிருஷ்ணனின் 'வியனுலகு வதியும் பெருமலர்' தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, அவை பற்றிய என் பார்வையை அனுப்பியிருந்தேன். மார்ச் மாத இதழில் இவை வெளிவந்திருந்தன. அதன் பிரதி இங்கு தரப்படுகிறது,

மோசமான கவி - 

கவிஞர்கள் கவிதை படைத்தலையும், அதன் இயல்புகளையும் தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள, அதைக் கவிதைகள் மூலமே அவ்வப்போது கடத்தியும் விடுகிறார்கள். தன் கவிதைகள் மூலம் கடவுளை அடைய உத்தேசிக்கிறான் கவிஞன், இந்தப் பயணத்தில் தன் கவிதைகள் மேல், தாம் உருவாக்கிய கவியுலகின் மேல் அவ்வப்போது அவநம்பிக்கைகளின் ரேகைகள் படர்ந்துவிடுவதையும் காண்கிறான், இந்தக் கவிதையில் வரும் மோசமான கவிஞன் அவனுடைய சுய பிம்பம்தான். இந்த அவநம்பிக்கைகளை தன் அகந்தையின் மூலம் எதிர்கொள்கிறான், ஒருவகையில் இது தன்னையே திரும்பிப் பார்த்துக்கொள்ளும் ஒரு செயல்தான். கர்வமும், பிடிவாதமும், தம் படைப்புச்செயல்களின் மேல் உள்ள உறுதியான நம்பிக்கைகளும்தான் ஒரு கவிஞனைத் தொடர்ந்து செயல்படச் செய்கிறது. நாம் கொண்டாடும் கவிதைகளையும், கவிஞர்களையும் இந்தத் திரும்பிப்பார்த்தல் எனும் செயலின் வினைகளாகத்தான் கருதுகிறேன்.

'ஒன்றைத் தேடும்போது

இன்னொன்று கிடைப்பது போல்

கடவுளைத் தேடிச் செல்லும் வழியில்

ஆக மோசமான கவிஞனைச் சந்தித்தேன்

சொற்களை ஒவ்வொன்றாய்

துள்ளத் துடிக்கச் சிதைத்துக் கொண்டிருந்தான்

உன் மொழியில் ஏன்

இத்தனை வன்முறை

அவை அலறுவது கேட்கவில்லையா என்றேன்

சொல்லுக்கும் பொருளுக்குமான

எதேச்சையற்ற உயிர் தொடர்பை

நறுக்கிப் பார்த்திருக்கிறாயா

ஏதுமின்மை கனக்கும் என்றான்

நரமாமிசம் சாப்பிடுபவர்கள்

அதைச் செய்யட்டும்

கொஞ்சம் சிதைப்பதை நிறுத்து என்றேன்

சொல்லில் இருக்கும்

சொல்லின்மையை விடுவிக்க

வேறென்னதான் செய்யட்டும்

ஒரு சொல் ஒரே சமயம்

எல்லா சொற்களுமாய் நிற்பதைப்

பார்த்திருக்கிறாயா என்றான்

நான் அவ்வளவு மோசமான கவியல்லவே

எனக்கெப்படித் தெரியும் என்று சொல்லிவிட்டு வந்தேன்'.

பலி - 

இந்தக் கவிதையில் ஒரு பன்றி கொல்லப்படுகிறது, மிக நூதனமாய் அதன் இதயத் துடிப்பு உணரப்பட்டு, அதன் மேல் துல்லியமாய் ஒரு கத்தி இறங்குகிறது. இங்கு கொல்லப்படும் பன்றி எதைக் குறிக்கிறது? நம் வாழ்வு தவிர்க்க முடியாத பலவகை சமரசங்களால் ஆனது, நம்முடைய கொள்கைகள், நம்பிக்கைகள், கனவுகள் என உயிர்ப்புடன் நம் மனதில் முயங்கிக் கிடப்பவற்றை அதன் இதயத் துடிப்பை உணர்ந்துகொண்டே வெட்டிச் சாய்க்கிறோம், இங்கு மௌனமாய்ப் பீறிடும் இளஞ்சூட்டு ரத்தம் நம் ஆன்மாவில் தெறிக்கிறது. சலனமற்ற, கூர்மையான வரிகளில் நிதர்சனத்தைச் சொல்லி நம்மைத் திகைக்க வைக்கிறது இந்தக் கவிதை.

'ஒரு பன்றியை

எப்படிக் கொல்வது என்று

அவனுக்குத் தெரிந்திருக்கிறது

இருவர் சேர்ந்து அதன் முன்னங்கால்களையும்

பின்னங் கால்களையும் பிடித்துக்கொள்கிறார்கள்

அது வீல் வீல் எனக் கத்திக்கொண்டே இருக்கிறது

அவன் அதன் தொண்டைக்குக் கீழிருந்து

வருடிக்கொண்டே வருகிறான்

அவன் உள்ளங்கைச் சூட்டின் இதம்

அதனிடம் என்ன சொன்னதோ

பன்றி குரல் தேய்ந்து முனகுகிறது

அவன் உள்ளங்கைகளால்

பன்றியின் மார்பை வருடிக்கொண்டே வந்து

இதயத் துடிப்பை உணர்கிறான்

சில கணங்கள் அதன் மீதே கை வைத்திருக்கிறான்

வலது கையால் லாவகமாய்

கத்தியை எடுத்து

சடக்கென்று அந்த இடத்தில் செருகுகிறான்

கீச்சென்று ஒரு சத்தம்

பிறகு

அமைதி அவ்வளவு அமைதி

மௌனமாய் பீறிடுகிறது

இளஞ்சூடான உப்பு ரத்தம்'.

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்