'ஐந்தாவது மருந்து', அறிவியல் புனைக்கதை – ஒரு வாசிப்பு
சிறுகதைக்கான இணையச் சுட்டி - https://www.jeyamohan.in/65/
அறிவியல் புனைக்கதைகளுக்கேயான சில பொதுப்பண்புகளை நாம் அடையாளப்படுத்தலாம்.
எதிர்காலம் ஒன்றில் நிகழும் கதை – அங்கு மனிதகுலம் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சங்களை
எட்டியிருந்தாலும், மனித மனம் அதன் ஆதிப் போக்கிலேயே இயங்குவதால் ஏற்படும் முரண்கள்
சொல்லப்பட்டிருக்கும், செயற்கை நுண்ணறிவு அதன் நிகழ்தகவு சாத்தியங்களை அடைந்து மனிதனை
ஆட்சி செய்துகொண்டிருக்கும், உலகம் அழிந்து மனிதன் வேறு கிரகங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும்
கதைகள் பேசுபொருளாகியிருக்கும், கால எந்திரம் எனும் இயற்பியலை மீறிய மிகைக் கற்பனை கதையாகியிருக்கும், வேற்று கிரகவாசிகளின் ஊடுறுவல் என்று சிலவற்றை எண்ணிக்கொள்ளலாம்.
இப்படிப்பட்ட ஊகிக்கத்தக்க எந்தவித அறிவியல் புனைக்கதைச் சட்டகங்களுக்குள்ளும்
அடங்காமல் எழுதப்பட்ட சிறுகதை 'ஐந்தாவது மருந்து'. ஆனால் ஜெயமோகன் எழுதிய 'விசும்பு'
அறிவியல் புனைகதைகள் தொகுப்பில் இந்தக் கதை இடம்பெற்றிருந்தது என்னை சற்று துணுக்குறச்
செய்தது. அதற்கான காரணங்களை அறிய முயலும் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை.
உயிர் வாழ்தல் என்பது மனிதனின் ஆதார உணர்வு, இயற்கை நோய்களின் வடிவத்தில் மனிதனுக்கு அளிக்கும் தடைகளை வெல்ல மனிதனின் முன்னெடுப்புகளில் மருந்துகளின் பங்கு அளப்பெரியது. நோய்களுக்குத் தீர்வாக ஒரு அதிசய மருந்து எனும் கருத்து, மனிதனின் ஆகப்பெரிய கனவுகளில் ஒன்று. 'ஐந்தாவது மருந்து' சிறுகதை இந்தக் கருதுகோளை இந்தியப் பாரம்பரிய நம்பிக்கைகளின் பிண்ணனியில் பேச முனைகிறது. வழக்கமான அறிவியல் புனைக்கதைகளில் உள்ள இறுக்கமும், அடர்த்தியான தொழில்நுட்ப கலைச்சொற்களும் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்தக் கதை தனிப்பட்ட முறையில் எனக்கு வாசிக்க இலகுவாக இருந்தது.
எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருக்கும் ஒரு கல்லூரி
நண்பனைக் காண அவனுடைய நண்பன் பிரதாப் மேனனும் கதைசொல்லியும் அச்சன்குளம் எனும் கிராமத்துக்குப்
பயணிக்கிறார்கள், அவர்களுக்கிடையிலான ஒரு உரையாடலாக இந்தக் கதை விரிகிறது.
கதையில் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் அடிப்படைகளும்,
நவீன அலோபதி மருத்துவ முறைகளும், இவற்றுக்கிடையே நோயை அணுகும் முறையில் உள்ள முரண்பாடுகளும்
விவாதிக்கப்படுகிறது. நோய்க் கிருமிகள் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு உயிர்வாழும்
தன்மையை நீட்டித்துக்கொள்ளும் இயல்பு பேசப்படுகிறது. தளவாய் ராஜா என்ற அந்த நண்பன்
கதிரியக்கத்தை, சித்த மருத்துவ முறையில் இணைத்து எய்ட்ஸ் நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்ததை
விவரிக்கிறான், இந்த மருந்து இரண்டு எய்ட்ஸ் நோயாளிகளையும் குணப்படுத்துகிறது. மருந்தைக்
கண்டுபிடித்தவன், அதை உலகுக்கு அறிவிக்கப்போவதில்லை என்றும், பயன்பாட்டுக்கு அளிக்கப்போவதில்லை
என்றும் சொல்கிறான், அதற்கான காரணங்களையும் விவரிக்கிறான்.
நோய் என்பது நம் உடல் செயல்படும் முறையில், நாம் வாழும் வாழ்வின்
ஒரு பகுதியா? நவீன மருந்துகள் முற்றிலுமாக நோயைக் குணமாக்குகிறதா? எதிர்விளைவுகள் இல்லாத
மருந்துகள் சாத்தியமா? நோயை விளைவிக்கும் கிருமியை முற்றிலுமாக அழிப்பது இவ்வுலகின்
இயங்கு விதிகளுக்கு எதிரானதாகாதா, சமநிலைகுலைவாகாதா? ஓரு நோயை மருந்துகள் இல்லாமல்,
இயல்பாக ஏற்றுக்கோண்டு வாழ்வது சாத்தியமா? இப்படிப் பல கேள்விகளை இந்தக் கதை என்னில்
எழுப்புகிறது. நோய் குறித்த நம் அணுகுமுறைகளும், அடிப்படைச் சிந்தனைகளும் நவீன மருத்துவ
முறைகளை நோக்கியே பயிற்றுவிக்கப்பட்டிருப்பதை இந்தக் கதை தெளிவாக உணர்த்துகிறது.
கதையின் மையம் மனிதனின் நுகர்வு என்றே நான் கருதுகிறேன். இன்று நாம் வாங்கும் உணவுப் பொருட்களில் 'பொறுப்பான முறையில் வளர்க்கப்பட்ட', 'இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட' என்பது போன்ற பதங்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பொறுப்புணர்வு மருந்துகளின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றுக்கும் பொருந்தும். இந்த உணர்வு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் இருக்கவேண்டிய அவசியத்தை கதை எனக்குச் சொல்கிறது. ஆனால் அதற்கான தத்துவக் கண்ணோட்டமோ, மாற்றுச் சிந்தனைகளோ நம்மிடம் உள்ளதா என்பதே இங்கு கேள்வி.
கோவிட் நோய்த்தொற்று குறித்தும், அதன் தடுப்பூசிகளின் சாதக மற்றும்
பாதக விளைவுகள் குறித்தும் இன்று எழும் விவாதங்களின் எல்லா அடிப்படைகளும் இந்தச் சிறுகதையில்
பேசப்பட்டுள்ளது, ஆனால் கதை எழுதப்பட்ட ஆண்டு 2000. 2000த்தில் எழுதப்பட்ட ஒரு
சிறுகதை தற்கால நோய்ச் சூழலின் எல்லாத் தளங்களையும் தொட்டுச் செல்வது என்னை பிரமிப்பில்
ஆழ்த்துகிறது.
ஏன் இது அறிவியல் புனைக்கதையாகிறது? கதை எழுதப்பட்டு 22 வருடங்களாகியும் இன்றுவரை எய்ட்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதற்கான சாத்தியங்களை இந்தக் கதை பேசுகிறது, கதிரியக்கம் கொண்டு ஒரு மருந்து தயாரிக்கப்படுவதை விவரிக்கிறது. நடைமுறையில் இல்லாத ஒரு கருத்து புனைவாகிறது, அதன் அடிப்படைகள் நம்பத்தகுந்த முறையிலும், கற்பனை வீச்சுடனும் சொல்லப்படுகிறது. இந்தத் தகுதிகளே இதை ஒரு தரமான அறிவியல் புனைக்கதையாக்குகிறது எனும் முடிவுக்கு வருகிறேன்.
Comments
Post a Comment