ஆனந்த்குமார் கவிதைகள் - என் கட்டுரை
http://www.kavithaigal.in/ மே மாத இதழில் கவிஞர் ஆனந்த்குமாரின் 'டிப் டிப் டிப்' கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய மதிப்புரை வெளிவந்துள்ளது. அதன் பிரதியை இங்கு பகிர்கிறேன்,
கவிஞர் ஆனந்த்குமாரின் 'டிப் டிப் டிப்' கவிதைத்
தொகுப்பை சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் வாங்கினேன், தன்னறம்
நூல்வெளி வெளியீடு, எண்ணிக்கையில் 97 கவிதைகள். முதல்
கவிதையிலேயே மனதை வசீகரித்துவிட்ட தொகுப்பு ('கிச்சிலிக்கான் பூச்சி'), மறுவாசிப்புகளில்
நினைவில் அகலாத பல கவிதைகளையும், வரிகளையும் என்னில் விதைத்திருந்தது. 'விதைத்தல்' என்ற பதத்தை
இங்கு சற்று அழுத்தமாகவே முன் வைக்கிறேன். ஒரு கவிதை நம்மில் ஏற்படுத்தும்
விளைவென்ன? கவிதைகளின் காட்சிகளோ, சில வரிகளோ, படிமங்களோ நம்
அன்றாட நிகழ்வுகளில் ஒரு இனிய வன்முறையாக இடைபுகுந்து நம்மைத் திகைக்கச் செய்பவை, ஒரு புன்முறுவலை
உதடுகளில் வரைந்துவிடுபவை, பல நேரங்களில் ஆழமான சிந்தனைகளில் நம்மை
ஆழ்த்தும் வல்லமை கொண்டவை, ஒரு கவிஞன் நம்மில் விதைக்கும் விதைகளின் நல்
விளைவுகளவை.
ஆனந்த்குமாரின் கவிதைகள் எளிமையான மொழியில் நம்மிடம் உரையாடுபவை. வாசகனாக
கவிதைகளின் மொழிச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல், அதன் மையத்தை நோக்கி எந்தவிதச் சிதறல்களும்
இல்லாமல் மனதைக் குவிக்கமுடிகிறது. பல கவிதைகள் எளிமையான ஒரு சித்திரத்தை நம்முன்
நிறுத்தி,
சில வரிகளில்
கவித்துவ உச்சத்தை அடைந்து,
முழுமையான
வாசிப்பனுபவம் அளிப்பவை.
மலர் கொய்தல்
'ஊதி அணைக்கக்
கூடாதென்றிருந்தாள்
அன்னை
கடவுளர்முன்
ஒரு
குழந்தையைப்போல்
வீற்றிருக்கிறது
தீபம்'
என்று துவங்கும்
கவிதை எரிந்துகொண்டிருக்கும் தீபத்தை அணைக்கவேண்டிய சூழலைச் சொல்லி,
'மலரைக் கொய்வதுபோல்
விரல்களால்
பிடித்தேன்
சுடவில்லை
எரிகிறது
சொல்லென மாறாத
சுடர்.'
என்று கடைசி மூன்று வரிகளில் ஆழமான வேறொரு தளத்துக்கு இடம்பெயர்கிறது. 'எரிகிறது சொல்லென மாறாத சுடர்' என்ற வரிகளை ஒரு நாள் முழுக்கப் பலமுறை
சொல்லிக்கொண்டிருந்தேன்,
மந்திரம்போல்
என் உதடுகள் இந்த வரிகளை முனுமுனுத்துக்கொண்டிருந்தன. மொழி கடந்த ஒரு அக அனுபவம்
மூலம் எரியும் சுடரை உணர்ந்துகொள்ளும் ஒரு மனதின் எழுச்சியாக இந்த வரிகளை
வாசிக்கிறேன். இதேபோல் 'பாதி உயிர்' என்ற கவிதையில் உள்ள 'நோயென மாறாத வலி' எனும் வரிகளும் நம்மைச் சீண்டிக்கொண்டே இருப்பவை.
ஒரு கவிஞன் உருவாக்கும் கவிதைகளில் அவன் வாழும் சூழல் இடம்பெறுவது இயல்பானது.
தமிழில் அருவக் கவியுலகின் பிதாமகர் என்று அறியப்படும் கவிஞர் அபியின்
கவிதைகளில்கூட அவர் வாழும் தெருக்களும், அவருடைய ஊரின் மலையும், பள்ளி மைதானமும் வந்துவிடுகிறது.
ஆனந்த்குமாரின் கவிதைகளில் பால்கனித் தோட்டத்தில் ரோஜாப் பதியன்களுக்கான
இடைவெளிகளைக் கண்டுகொண்டேயிருக்கும் அம்மும்மாவும் ('அம்மும்மாவின் பால்கனித் தோட்டம்'), நெடுஞ்சாலைப் பயணத்தின் வேகத்தடையொன்றில்
நிதானிக்கும் தன் மகனை அர்த்தமாகப் பார்க்கும் அம்மாவும் ('அம்மாவுக்கு வேகம் பிடிக்காது'), அன்றைய நிகழ்வுகளை வளையல்களால்
நிகழ்த்திக்காட்டும் மனைவியும் ('அணி'),
சந்தன
மாரியம்மனுடன் பிணக்குகொண்டு வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு முதுகு காட்டி
நிற்கும் ஆச்சியும் ('பதில்'), அம்மும்மாவின் மாத்திரைகள் பொதிந்த
பிளாஸ்டிக் குமிழ்களை உடைக்கும் குழந்தையும் (டிப் டிப் டிப்) வந்துவிடுகிறார்கள்.
ஆனந்த்குமார் எனும் கவிஞன் ஒரு தந்தையாக, மகனாக, கணவனாக, சினேகம் மிக்க அண்டை வீட்டுக்காரராகப் பல
கவிதைகளில் வெளிப்படுவதைக் காணலாம், அவை நம்முடைய கற்பனைகயைத் தீண்டி பலபடிகள்
எழுந்துவிடும் கவித்துவம் அடர்ந்த கவிதைகளுமாகின்றன.
'இன்றும்
பொழுது சாய்ந்தே
வீடு
திரும்புகிறேன்
…
மாறும்
அந்தியின்
நிறங்களைச்
சொல்லும்
விளையாட்டை
குழந்தையுடன்
ஆடுகிறேன்
இங்கிருந்தபடி'
என்று வீடடையத்
துடிக்கும் ஒரு தந்தையின் வரிகளாகத் தொடங்கும் இந்தக் கவிதை,
'வீடு போய் சேர்கையில்
உறங்கும்
குழந்தை
கொஞ்சம்
வளர்ந்திருப்பான்'
என்று முடிகிறது. நாம் உலகில் காணும் எல்லாமே நுண்ணிய அளவில்
மாறிக்கொண்டிருபவையே. இங்கு தந்தை, குழந்தை எனும் பிம்பங்களைத் தாண்டி
வாசித்தால்,
'மாற்றம்' எனும் ஒற்றைச் சொல் மலைபோல் எழுந்துகொள்வதைக்
காணலாம். 'உறங்கும் குழந்தை வளர்ந்திருப்பான்' எனும் கடைசி வரிகளை ஒரு தந்தையின் ஆற்றாமையாக
மட்டுமே நான் வாசிக்கவில்லை, 'மாற்றம்'
எனும்
பிரபஞ்சத்தின் அழியா விதியின் முன் பணிவாக நின்று அரற்றும் ஒரு மனிதனின்
வரிகளாகவும் வாசிக்கிறேன்.
ஆனந்த்குமாரின் பல கவிதைகளில் நேர்மறைத்தன்மையும், மகிழ்ச்சியும் அடிநாதமாக விரவிக்கிடக்கிறது.
கவிதைகளில் தற்சுட்டுதலும்,
உக்கிரமும்
தவிர்க்க இயலாத பண்புகள்,
ஆனந்த்குமாரின்
பெரும்பாலான கவிதைகள் இந்தப் பண்புகளின் நேரெதிர்த் திசையில் நின்றுகொண்டு
புத்துணர்வான வாசிப்பனுபவங்களை அளிக்கின்றன.
பலாப்பழம்
'வைத்துப் பார்த்திருந்து
ஒருநாள்
பனிக்குடம் போல்
உடைந்தது அதன்
மணம்'
…
ஒரு குட்டி
டப்பாவில்
கொஞ்சம் அடைத்து
இப்போது உங்கள்
வீட்டு
அழைப்பு மணியை
அழுத்துவது
நான்தான்.'
இனியது
'இன்று என்
ஒருவனுக்கு மட்டும்
சமைத்த உணவு
அவ்வளவு
சுவையாய் வந்துவிட்டது'
…
ஊரையே அழைக்கிறேன்
"சாப்பிட
வாருங்கள்". '
இங்கு 'பலாப்பழ மணம்' எனும் மகிழ்ச்சியை நம்மில் ஏந்தி வருபவராக, சமைத்த ருசியான உணவைப் பகிர்ந்துகொள்ள
அழைப்பவராக ஆனந்த்குமார் எனும் கவிஞர் வெளிப்படுகிறார்.
'டிப் டிப் டிப்' தொகுப்பின் கவிதைகளில் சிறந்தவை என்று
குறைந்தது பத்துக் கவிதைகளையேனும் என்னால் சுட்டமுடியும். கட்டுரையின் அளவு கருதி
இந்த ஒரு கவிதையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்,
சொல். அருள். போதை
'அர்த்தம் முளைக்கிறது
மலையென
சொல் அதன்மீது
ஊர்ந்தேறும்
கம்பளிப்பூச்சி
காலம்
அவிழ்க்கிறது
மாயமூட்டையின்
ஒரேயொரு
முடிச்சை
மிக மெதுவாக
அர்த்தம் நழுவ
சொல் எழுகிறது.
சிறகசைப்பின்
திசைகளெங்கும்
வீசிப்பறக்கிறதது
தாங்கவொண்ணா
வண்ணங்களை'.
சொல், 'அர்த்தம்' என்பதன் கட்டுக்கோப்பான வேலிகளை
உடைத்துக்கொண்டு சிறகடித்துப் பறக்கும் ஒரு அனுபவ வெளியைச் சொல்ல இந்தக் கவிதை
எத்தனிக்கிறது. ஒரு குழந்தையின் உலகில் உள்ள மொழி(யற்ற) சுதந்திரத்தையும், வழமையான பயன்பாடுகள் தாண்டிய கட்டற்ற கற்பனை
விரிவையும் இந்தக் கவிதையின் இன்னொரு பிரதியாக வாசிக்கலாம், ஒரு கவிஞனின் ஆழ்மன ஓட்டங்களில் மொழி அதன்
பாவனைகளை விடுத்து நிர்வாணமாக இயங்கும் தன்மையைச் சொல்வதாகவும். கவிஞர் அபி 'கவிதை புரிதல்' கட்டுரையில் இந்தக் கோணத்தை விரிவாக
எழுதியிருக்கிறார்.
கவிஞர் ஆனந்த்குமாரின் கவியுலகம் மேன்மேலும் விரிவடையவும், 2022ம் வருடத்திற்கான குமரகுருபரன் விருது பெற்றமைக்காகவும் அவரை மனமார வாழ்த்துகிறேன்.
Comments
Post a Comment