'துலாத்தான்' சிறுகதை - ஒரு வாசிப்பு

                                                

https://tamizhini.in/2021/07/27/துலாத்தான்

பிரபஞ்சம் சில எளிய மனிதர்களைக் கைவிடுகிறது, அந்த மனிதர்கள் தங்களுடைய இயல்புக்கேற்ப இந்தச் சூழலைக் கையாள முயல்கிறார்கள். கையறு நிலையில் உள்ள அய்யாவு எனும் மனிதனின் கதையை உணர்வுப்பூர்வமான இலக்கியப் படைப்பாக மாற்றியிருக்கிறார் திருச்செந்தாழை. 

வயதுக்கேற்ற மன வளர்ச்சி அடையாத தன் மகள் பரமுவின் திருமண முறிவுகளை, அது தரும் வலிகளை வியாபாரத்தில், அன்றாடப் பணியில் ஈடுபட்டு கடக்க முயல்கிறார். தரகுக் கணக்குகளை மனதில் ஓட்டிக்கொண்டு தொழில் எனும் விளையாட்டில் பங்கெடுக்கிறார். கதையை வாசித்து முடித்ததும் அய்யாவுவின் வலி, என்னுடைய வலியாக மாறி கண்ணீரை வரவழைக்கிறது.

'“பிறந்ததிலிருந்து நாய்ப் பொழப்பு மாமா. பத்தியும் பத்தாம தின்னுட்டே படுக்கும்போது வராத கோபம், உடம்பு அனலை ஆத்தத் தெரியாம அர்த்த ராத்திரில ஒரு பொம்பள நம்பள தவிக்கவிடும் போது பத்திக்கிட்டு வருது. நல்லா இருப்பீக. கூப்ட்டு போய்டுங்க” என்று கேட்கும் பரமுவின் முதல் கணவனின் வலியும் இங்கு ஆழமானதுதான்.

செய்தித்தாள்களில் சுற்றப்பட்டு வரும் தானிய மாதிரிகளில் மிஞ்சும் ரப்பர்களைக்கூட எடுத்து வைத்துக்கொள்ளும், எழுதி எழுதி நுணுகிவிட்ட பென்சிலைக் கூட விடாமல் திட்டக்கணக்கு எழுத வைத்துக்கொள்ளும் மனிதரான தானியேல், வியாபார உலகில் இயங்கும் மனிதருக்கான சரியான எடுத்துக்காட்டு. கதாப்பாத்திரங்களின் குணநலனை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும் திருச்செந்தாழையின் திறன் அபாரமானது.

பரமுவை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வர அறிவுரை சொல்லும் தானியேல், அய்யாவுவின் நிரந்தரத் துயருக்கு எந்தவிதப் பொறுப்பும் அற்றவர். தன்னைச் சுற்றி கருணையற்று குரூரமாக இயங்கும் மனிதர்களினுடே, அய்யாவு பெரும் எடையாக விரவும் துயரத்தைத் தாங்கிக்கொண்டு செயல்படுகிறார். விரிந்த வானின் கீழே சுருங்கிய ஒற்றைப் புள்ளியாக தன்னை உணர்ந்து, விடிந்துகொண்டிருக்கும் வேளையில் வயலில் நின்று அழுகிறார். நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்விக்கு என்றுமே விடைகள் கிடையாது. ஒரு மனிதன் செய்யக்கூடுவதெல்லாம் அன்றாடச் செயல்களில் வீரியமாக ஈடுபட்டு தற்காலிகமாகவேனும் துயரங்களிலிருந்து விடுபடுவதுதான், இந்தக்கதையில் அய்யாவு செய்வதும் இதைத்தான்.

உலகுக்கே விடியல் ஒரு தீர்வாக அமையும்போது, அய்யாவு எனும் மனிதனுக்கு அவனுடைய துயர்களை அப்பட்டமாகக் காட்டிவிடும் ஒன்றாக மாறுகிறது. மிக அடிப்படையான ஒரு கேள்விக்கு இந்தக் கதை மூலம் விடைகள் தேட முனைகிறார் திருச்செந்தாழை, பிரபஞ்சம் எனும் விரிவின் முன் மனிதன் ஒரு சிறு புள்ளி எனும் முடிவுக்கே வருகிறார்.  

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை