http://kavithaigal.in தளம் - ஒரு கடிதம்
அன்புள்ள ஆசிரியர் குழுவுக்கு,
வணக்கம்.
நான் ஒரு கவிதை வாசகன், அல்லது அப்படித்தான் அறியப்பட விரும்புகிறேன். கவிஞர்களில் தேவதேவன், விக்ரமாதித்யன், ஆத்மாநாம், பசுவய்யா, அபி, ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, கலாப்பிரியா என்றும் கொஞ்சம் அடுத்த தலைமுறைகளான இசை, போகன் சங்கர், இளங்கோ கிருஷ்ணன், மதார், வேணு வேட்ராயன் என்றும் கலந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன், ஆனந்த்குமாரும்
இந்த வரிசையில் இணைந்துகொள்வார். இன்னும் வாசிக்கவேண்டிய வரிசைகளில் பிரமிள் முதலிடத்தில் இருக்கிறார், வரிசை பெரியதுதான். இங்கு 'வாசித்துக்கொண்டிருக்கிறேன்' என்றுதான் சுட்டுகிறேன், கவிதைகளை எப்போதும் வாசித்துக்கொண்டே இருக்கலாம், 'வாசித்துவிட்டேன்' என்று சொல்ல மனம் தயங்குகிறது.
தமிழ்க்
கவிதைகள் இணையத்தில் பரந்துகிடக்கின்றன. ஒரு வாசகன் கவிதை நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கிறான், இடையில் கவிஞர்கள் சிலர் கட்டைவிரல் காட்டி "பயணத்தில் என்னையும் சேர்த்துக்கொள்" என்று கோரிக்கைவிடுக்கிறார்கள், சிலர் வன்முறையாக நம்முடன் இணந்தும் கொள்கிறார்கள். இந்தச்
சூழலில் இவர்களைப் பற்றிய அறிமுகமிருந்தால் வாசகனின் பயணம் மன அலைவுகளிலில்லாமல் இயல்பாக அமையும். தளத்தின் முகப்பில் குறிப்பிட்டதைப் போல 'ஒரு எழுத்தாளரின் அல்லது சக கவிதை வாசகனின் சிபாரிசு தேவையாகிறது'. கவிதைகளுக்கென்றே ஒரு தளம் என்ற செய்தியைக் கண்டதும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. இந்த முயற்சிக்கு முதலில் வணக்கங்களும், வாழ்த்துக்களும், நன்றிகளும்.
எனக்கு
கலைஞர்களின்
கோட்டோவியங்களில்
பெருவிருப்புண்டு. தளத்தின் முகப்பில் கவிஞர் விக்ரமாதித்யனின் முகமும், தேவதேவனின் முகமும் மிக அழகாக வெளிப்பட்டிருந்தது, நல்ல தொடக்கம்.
வெளியான
மூன்று கவிஞர்களின் கவிதைகள் குறித்த என்னுடைய எண்ணங்களைப் பகிர பிரயாசைகொள்கிறேன்.
விக்ரமாதித்யன் கவிதை:
சிவனின் ஆடலையும், திருவிளையாடல்களையும் சொல்லிச் செல்லும் கவிதை, எனக்கு ஆதிசக்திதான், அன்ன பூரணிதான், மீனாட்சிதான் விருப்பம் என்று சொல்லி முடிவடைகிறது. இதைச் சொல்லும் விக்ரமாதித்யன் எனும் கவிஞனின், நாடோடியின், சி(பி)த்தனின் குரலால் இந்த கவிதை தவிர்க்கமுடியாத ஒன்றாகிறது. கொஞ்சம் 'front row audience' மனநிலையில் பார்த்தால் ஆணாதிக்கத்துக்கெதிரான ஒரு கவிதையுமாகிவிடுகிறது.
தேவதேவன்
கவிதை:
'குறுக்கே ஒரு திரை', இது எதைச் சொல்கிறது? கவிஞனின் நேரப் பிரக்ஞை இல்லாமல் இயங்கும் மனமும், லௌதீகமும் கலந்துகொள்வதைப் பிரிக்கும் ஒன்றைச் சுட்டுகிறதா? அல்லது இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என காலப் பயணமாக கவிஞனின் மனதில் விரியும் அன்றாட வாழ்வின் இன்னொரு வடிவத்தைச் சொல்கிறதா? இதை ஏன் அமெரிக்க நண்பர்களுக்கு கவிஞர் ஆர்வத்துடன் பிதற்றுகிறார்? செல்வச் செழிப்போடு வாழ்ந்துகொண்டிருக்கும் கலாச்சாரமற்ற (இந்திய, தமிழக) மடையர்களே, சிறிய அறைகளில் அடங்கிவிடும் எங்கள் வாழ்வின் சாரத்தை நீங்கள் அறிவீர்களா என்று சாடுகிறாரா?
காலம்
குறித்த கவிதை என்றும் தோன்றுவதால் தேவதச்சனின் 'சிறுமி கூவுகிறாள்' கவிதையில் அந்தச் சிறுமியும், குண்டுப் பெண்ணும் நினைவுக்கு வருகிறார்கள். 'இன்னொரு பகலில் போய்க்கொண்டிருக்கும் குண்டுப்பெண்', என்ற வரிகளில் கவிதை இன்னொன்றாக மாறிவிடும் தன்மையை இந்தக் கவிதை நினைவுபடுத்துகிறது. சரி, இந்தப் பசப்புகள், பாவனைகளையெல்லாம் தவிர்த்துவிட்டால், எனக்கு இந்த கவிதை 'கொஞ்சம் புரிந்தது, கொஞ்சம் புரியவில்லை', part and parcel of reading poems,
இல்லையா?
அனில்குமாரின் கவிதைகள்:
அவியங்கோரா
–
கவிதைகள்
வாசிப்பு எனும் செயலின் உச்சங்களை அடைவது இது போன்ற ஒரு கவிதையை வாசிக்கும்போதுதான். என் கைகளில் ஒரு சரடு அளிக்கப்படுகிறது, இந்தச் சரடின் மறுபுள்ளியில் மணி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது, புகைமூடிய அதன் மறு திசை கண்களுக்குப் புலப்படுவதில்லை. அனால் சரடை சற்று ஆட்டிப் பார்த்தால், கண்ணுக்குத் தெரியாத மறுபுறத்திலிருந்து வரும் மணி ஓசைகள் கேட்கிறது.
மீனவனான
தந்தையை இழந்த குழந்தைகள், அந்த பிரிவின் வலி, பசி, விரக்தியின் துயரத்தின் தாக்கத்தில் இருக்கும் தாய், என எல்லாமுமாக இந்த கவிதை. இயல்பும், மாயமும் கலந்து ஊடாடி நம் மனதில் தீர்க்கமாக அமர்ந்துகொள்ளும் கவிதை இது. என்னளவில், இந்த வெளியீட்டில் சிறந்த கவிதை இது. ஆனந்த்குமாரின்
மொழிபெயர்ப்பு
போற்றுதலுக்குரியது.
படகு
–
எனக்கு
இந்தக் கவிதையில், ஆச்சியை விட அந்த படகுதான் பிரதானமாகத் தெரிகிறது. கரையேறியிருந்த அந்த படகு காலம் காலமாக நம்மிடம் எதோ சொல்ல வருகிறது, அந்த ஆச்சி இதில் ஒரு சுட்டிதான், நம் முன்னோர்களின் ஒரு வடிவம். நம்மிடம் வந்தடையும் வரலாறுகளும், தொன்மங்களும் இந்த படகுகள் வழியாகத்தான் சாத்தியமாகிறது. படகுகளின் செய்திகளை நம்மிடம் இந்த ஆச்சிகள் கடத்துகிறார்கள். இந்த கவிதை குறித்த என் எண்ணங்களில் குறைகளுமிருக்கலாம், சிலவற்றை நான் தவறவும் விட்டிருக்கலாம்.
கடைசியாக
ஒன்று, கவிதைகளை சுயமாக விரித்துக்கொள்ளவே விருப்பப்படுகிறேன், முன் முடிவுகள் என் கற்பனைகளுக்கு சற்று கடிவாளம் போட்டுவிடுகின்றன. கவிதைகள் குறித்த ஆசிரியர் குறிப்புகள் ஏன் தேவை என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் கவிதைகளை வாசித்துவிட்டே இந்த குறிப்புகளை வாசிப்பேன், இது முழுக்க என் தனிப்பட்ட ரசனைகளுக்கானது.
நவீன்,
மதார், ஆனந்த்குமார்
மூவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள், தளம் இன்னும் கவிதைகளால் செழிக்கட்டும்.
அன்புடன்,
பாலாஜி ராஜூ
Comments
Post a Comment