கவிதை வாசிப்பில் தொடர்ச்சியை அடைதல் - ஒரு கட்டுரை
ஏப்ரல் 10, 2022
மே மாதம் எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்காவுக்கு பயணமாகிறார். அவரைச் சந்திக்க ஒரு கூடுகையை அமெரிக்க விஷ்ணுபுரம் அமைப்பினர் நார்த் கரொலினா மாகாணத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தக் கூடுகையில் நிகழவிருக்கும் கவிதை விவாதத்தின் தொடக்க உரைக்காக இந்தக் கட்டுரையைத் தயாரித்திருந்தேன். ஆனால், உரையில் சில மாற்றங்களை அமைப்பாளர்கள் கேட்டதால், சில கவிதைகளை மட்டும் வாசித்து அது குறித்த என் எண்ணங்களைப் பகிரலாம் என்றிருக்கிறேன். இந்தக் கட்டுரை உரைக்குப் பயன்படாமல் போனாலும், இங்கு பதிவேற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியே.
அனைவருக்கும் வணக்கம்,
இங்கு கூடியிருக்கும் அனைவரும் தேர்ந்த வாசகர்கள்
– பல்வேறு இலக்கிய வடிவங்களில் தேர்ச்சியும்,
முதிர்ந்த அனுபவமும் பெற்றவர்கள், பலர் தொடர்ச்சியாக
எழுதிக்கொண்டிருப்பவர்கள் அல்லது எழுதப்போகிறவர்கள். இதில் பலரும்
கவிதைகளை என்னை விட ஆழமாகவும், விரிவாகவும் வாசிப்பவர்களாகவும்
இருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு குழுவின் முன் கவிதைகள் குறித்து
பேசவேண்டும் என்றவுடன் நிறையத் தயக்கங்கள் இருந்தது. இதில்
'கவிதை வாசிப்பை நீட்டித்துக்கொள்தல்' என்கிற தலைப்பில்
பேசுகிறேன். நம்முடைய வாசிப்பில் கவிதைகளின் தாக்கம் என்றும்
இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு நல்ல படைப்பை கவித்துவமாக எழுதப்பட்டிருக்கிறது
என்று அடையாளப்படுத்துகிறோம், படைப்புகளில் வரும் உவமையை எண்ணி
வியக்கிறோம், இப்படிச் சிலவற்றை சொல்லலாம்.
கவிதைகளுடன் சற்றளவேனும் தொடர்பில்லாத இலக்கிய
வாசகனைக் காண்பது அரிது. ஒரு சௌகரியத்துக்காக கவிதைகளில்
ஈடுபடுபவர்களை இப்படிப் பிரித்துக்கொள்கிறேன். கவிதைகளை அங்கொன்றும்
இங்கொன்றுமாக வாசிப்பவர்கள், ஒரு இளைப்பாறலுக்காக கவிதைகளை அவ்வப்போது
தொட்டுச் செல்பவர்கள், கவிதைகளைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்,
கவிதைகளை எழுதி இரகசியமாக வைத்துக்கொள்பவர்கள். இங்கு இன்னொரு வகையும் இருக்கலாம், கவிதைகளில் பரிச்சயமோ ஆர்வமோ அற்றவர்கள், அவர்களையும்
இதில் சேர்த்துக்கொள்கிறேன். இந்த எல்லோருக்குமே கவிதை வாசிப்பில்
தொடர்ச்சியாக ஈடுபடுதல் என்பது ஒருவகையில் ஈரமான சோப்புக்கட்டிபோல நழுவிக்கொண்டே இருக்கும்
ஒன்று.
இந்தப் பிண்ணனியில் கவிதை வாசிப்பில் தொடர்ச்சியை
அடைய நான் மேற்கொள்ளும் சில வழிமுறைகளை இங்கு பகிரலாம் என்றிருக்கிறேன். இங்கு நான் குறிப்பிடுபவை என்னுடைய சுய அனுபவம் சார்ந்தவை, நான் பின்பற்ற வேண்டும் என்று பிரயாசை கொள்பவை. இவற்றை நீங்கள் மறுக்கலாம், முரண்படலாம், என்னுடைய கருத்துக்கள் எடையற்றவை என்றும் எண்ணலாம்.
கவிதைப் புத்தகங்களை வாங்குவது:
நான் இங்கு சொல்வது உங்களுக்கு சற்று திகைப்பை
அளிக்கலாம், சாதாரணக் கருத்து போல் இருக்கலாம். புத்தகம் வாங்கச் செல்கையில் நம்முடைய மனஓட்டங்களைக் கூர்ந்து கவனித்தால் தெரியும்,
நமக்குப் பரிச்சயமான எழுதாளர்களை, இலக்கிய வடிவங்களை நோக்கித்தான் நம் எண்ணங்கள் அலைந்துகொண்டிருக்கும்.
முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டால் மட்டுமே நாம் நம் வாசிப்பு எல்லைகளை
விட்டு அகலமுடியும். கவிஞர் மதார் விஷ்ணுபுரம் நிகழ்வில் வாங்கிய
கவிதைத் தொகுப்புகளைக் காண்பித்தார், அதில் மொழிபெயர்ப்புக் கவிதைகளும்
இருந்தன, நான் நிறைய யோசித்துவிட்டு வாங்காமல் விட்டுவிட்டேன்,
இப்போது எண்ணும்போது வாங்கியிருக்கவேண்டும் என்பதை உணர்கிறேன்.
கவிதை வாசிப்பில் தொடர்ச்சியை அடைய, மனத்தடைகளை அகற்றிக்கொண்டு கவிதைத் தொகுப்புகளை வாங்குதல் எனும் செயலைக் குறைத்து மதிப்பிடலாகாது. நான் என் புத்தக அடுக்கில் மற்ற
இலக்கிய வடிவங்களுக்கு ஒப்பாக கவிதைகளை வாங்கி வைத்திருக்கிறேன், இருபத்தி ஆறு கவிஞர்கள் என்று கணக்கு சொல்கிறது,
இதில் சில கவிஞர்களுடைய மொத்த தொகுப்புகளும் அடங்கும். இங்கு இந்த எண்ணிக்கையை நான் பறைசாற்றிக்கொள்வது பெருமைக்காக அல்ல, கவிதைப்
புத்தகங்களை வாங்குதல் எனும் செயலை முன்னிருத்த மட்டுமே. நாம் எல்லோருமே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம், நம்முடைய
புத்தகச் சேகரிப்பில் எத்தனை கவிதைத்தொகுப்புகளை வைத்திருக்கிறோம் என்பதாக அது இருக்கட்டும்.
ஒரு கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பது:
கவிதை வாசிப்பில் இருப்பவர்களுக்குத் தெரியும், நமக்குப் பரிச்சயமான கவிஞர் என்று ஒருவர் இருப்பார். இங்கு பரிச்சயமான ஒருவர் என்று நாம் அடையாளப்படுத்துவது, அவருடைய கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பதனால் நம் மனதில் ஏற்படும் ஒரு தாக்கத்தின் விளைவு. ஒரு கவிஞருடைய கவிதைகளைத் தொடர்ந்து
வாசிக்கும்போது அவரை நாம் நெருங்குகிறோம். அந்தக் கவிஞரைப் பற்றி
தெரிந்துகொள்ள முயல்கிறோம், அது அவருடைய தனிப்பட்ட வாழ்வு தொடங்கி,
மற்ற இலக்கிய ஆக்கங்கள், அழகியல் நம்பிக்கைகள்,
அவரைப் பற்றி பிற படைப்பாளிகளின் கருத்து என்று பல அம்சங்களால்
ஆனது . அந்தக் கவிஞருடைய கவிதைளில் உள்ள ஒரு பொதுத்தன்மையைக் கண்டுகொள்வது,
கவிதைகளில் தொடர்ச்சியாக வெளிப்படும் படிமங்களையயோ காட்சிகளையோ அடையாளம் காண்பது, கவிஞருடைய கவிதைகளை ஒட்டு மொத்தமாகத் தொகுத்துக்கொள்வது என்று நம்முடைய
அகம் அந்தக் கவிஞரை நோக்கி இயல்பாகத் திறந்திருக்கும்.
நான் முதலில் தேவதேவனின் கவிதைகளை இப்படித்
தொடர்ச்சியாக வாசித்திருக்கிறேன். இங்கிருந்து மற்ற கவிஞர்களின் படைப்புகளை நோக்கிப் பயணித்தேன்.
தேவதேவனிடமிருந்து கவிஞர் அபியை நோக்கி நர்ந்தேன், என் மனதுக்கு நெருக்கமானவராக அவரையே எண்ணுகிறேன், அவரை
ஒரு வழிபாட்டு மனநிலையில்தான் வைத்திருக்கிறேன்.
நம்முடைய கவிதை வாசிப்பில் இந்தப் பண்பு ஏற்படுத்தும்
தாக்கம் கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பதில் தவிர்க்கமுடியாதது என்றே எண்ணுகிறேன். ஒரு எடுத்துக்காட்டை இங்கு சொல்கிறேன், ஜெயமோகன் ஒரு சமீபத்திய கட்டுரையில் தேவதேவனின் முகம் எத்தனை அழகானது என்று
குறிப்பிட்டிருப்பார். இது தேவதேவனின் கவிதைகளைக் கூர்ந்து வாசிப்பதனூடாக, அந்தப் படைப்பாளியின் ஆளுமையை நோக்கிய ஒரு பித்தினால் மட்டுமே வெளிப்படக்கூடும்
ஒரு மனநிலை.
கவிதைகள் குறித்து வாசித்தல்:
கவிதைகள் குறித்த நம் புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள, கவிதைகள் குறித்து தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருப்பது பயனளிக்கக்கூடியது. இவை கட்டுரைகளாக இருக்கலாம், காணொளிகளாக
இருக்கலாம், கவிதைகளின் அழகியல் குறித்துப் பேசும் தனிப்பட்ட
ரசனைக் குறிப்புகளாக இருக்கலாம், கோட்பாட்டு நுல்களாகக்கூட இருக்கலாம்.
இது கவிதைகளின், கவிதை படைத்தலின் நுணுக்கங்களை
அறிய அவசியமான ஒன்று.
சமீபத்தில் தேவதச்சனின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் (கடைசி டினோசர்), ஒரு
இருபது கவிதைகளை வாசித்தும் அவருடைய கவிதைகளுக்குள் என்னால் ஒன்ற முடையவில்லை,
இல்லை பிடி கிடைக்கவில்லை என்றும் சொல்லலாம். ஜெயமோகனின்
தளத்தில் இருந்த 'அத்துவானவெளியின் கவிதை' என்ற தலைப்பில் வெளிவந்திருந்த தேவதச்சனின் கவிதைகள் குறித்த கட்டுரையை வாசித்தேன்.
அந்தக் கட்டுரையில் ஜெயமோகன் முதன் முதலில் பொட்டல் நிலத்தைக் காண மேற்கொண்ட பயணத்தைச்
சொல்லி, அது அவர்மேல் ஏற்படுத்திய தாக்கத்தையும் விவரித்திருப்பார்.
அங்கு ஒரு விவசாயப் பெண் உடைமுள் வெட்ட அரிவாளுடன் விரிந்த வானின் கீழ்
நிற்கும் தோற்றத்தைக் கண்டு தேவதச்சனின் ஒரு வரியை நினைவுகூர்ந்திருப்பார்.
அந்த காட்சியிலிருந்து, அந்த அனுபவத்திலிருந்து
தேவதச்சனின் கவிதைகளில் வரும் அத்துவானம் எனும் சொல்லையும், அந்தக்
காட்சியின் மூலம் அவரை அணுக்கமாகப் புரிந்துகொண்டதையும் சொல்லியிருப்பார்.
என் கவிதை வாசிப்பின் மேல் ஆழமான வேர்களைப் பதித்துக்கொண்ட கட்டுரை அது. தற்போது 'கடைசி டினோசர்'
தொகுப்பை இந்தக் கோணத்திலிருந்து அணுகமுடியுமா என்று உத்வேகத்துடன் முயன்றுகொண்டிருக்கிறேன்.
இன்னொரு எடுத்துக்காட்டு கவிதைத்தொகுப்புகளில்
கவிஞர்களின் முன்னுரைகள். 'வியனுலகு வதியும் பெருமலர்'
தொகுப்பை வாசித்தேன், அதில் இளங்கோ கிருஷ்ணன் அந்தக்
கவிதைகளை எழுதியதன் பிண்ணனியை விவரித்திருந்தார். இந்தத் தொகுப்பு
அவருடைய 'காயசண்டிகை' தொகுப்பிலிருந்த கவிதைகளிலிருந்து
மாறுபட்டிருந்தது. 'வியனுலகு வதியும் பெருமலர்' தொகுப்பிலிருந்த இருண்மை எனும் அம்சத்தை கவிஞர் மனுஷ்யபுத்திரனின்
'இருளில் நகரும் யானை' தொகுப்போடு என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது.
கவிஞர் அபி 'கவிதை
புரிதல்' எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் கையெழுத்துப் பிரதியை
எனக்கு அனுப்பியிருந்தார். அதில் 'அர்த்தவரம்புக்குட்பட்ட
சொற்களால் சூழலின் தகிப்பைச் சொல்ல முடியாது' என்றும், 'கவிதை மொழியின் ஆதிக்கப் பகுதிக்கு அப்பாற்பட்டது' என்றும் சொல்லி, 'வாழ்க்கை புரியவில்லை என்பதும் கவிதை புரியைவில்லை
என்பதும் ஒன்றுதான்' என்று முடிக்கிறார்.
இது அவருடைய கவிதையுலகை அழகாக சுட்டும் ஒரு கட்டுரை மட்டுமல்ல, நான் கவிதை வாசித்துக்கொண்டிருக்கும் வரை என்னில் அதிர்வுகளை ஏற்படுத்திய வண்ணம் இருக்கும் ஒன்றுமாகும்.
கவிதைகள் அதற்கேயான ஒரு பிரத்யேக மொழியில்
எழுதப்படுபவை, பல நேரங்களில் நம்மால் நெருங்கமுடியாத கவிதைகள்
நமக்கு ஒருவகை ஆற்றாமையைக் கொடுப்பவை. இத்தடைகளைக் கடந்து தொடர்ந்து வாசிக்க, கவிதைகள்
குறித்த அறிதல்கள் உதவுகின்றன.
வாசிக்கும் கவிதைகள் பற்றி குறிப்புகளை எழுதுதல்:
கவிதைகள் பற்றி குறிப்புகளை எழுதுவது கவிதை
வாசிப்பை விரிவுபடுத்துகிறது என்றே எண்ணுகிறேன். கவிதைகள்
குறித்து எழுதுதல் என்பது நம் கற்பனைகளை மேலும் விரித்துக்கொள்ளச் செய்கிறது, கவிதையின் உட்பொருளை, தரிசனத்தை அறிய முழுவீச்சுடன் நம்
மனது இயங்க வேண்டிய கட்டாயத்தை அளிக்கிறது. எழுதும்போது அதற்கான
கூர்மை அமைகிறது, நாம் ஒரு இலக்கைக் கண்களால் நோக்குகிறோம்,
மனதை அதன் மையத்தில் தொடர்ந்து குவிப்பது எளிதானதல்ல, அதையே ஒரு வில்லைக் கைகளில் ஏந்திக்கொள்ளும்போது அந்தக் கூர்மை நம்மில் இன்னும்
கூடிவிடுகிறது, அதற்கு ஒரு அர்த்தம் அமைகிறது. இங்கு கவிதைகள் எனும் இலக்கை, எழுதுதல் எனும் வில்லைக்கொண்டு
கூர்மையாக அணுகலாம்.
ஒரு நாவல் குறித்தோ, சிறுகதை குறித்தோ எழுதுவதை விட கவிதைகள் குறித்து எழுதுவது அளவில்
எளிதுதான், ஒரு அரைப்பக்கத்தில் நாம் கண்டடைந்தவற்றைச் சொல்லிவிடமுடியும்.
முகில்களைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத்
தெரியும், அவற்றை உற்று நோக்கும்போது நமக்கு உருவங்களும்,
ஓவியங்களும் மெல்லத் துலங்கும். கவிதைகளின் தரிசனமும்
அப்படித்தான், தொடர் வாசிப்பில் ஈடுபடும்போது, கவிதைகள் குறித்து எழுதும்போது வரிகளுக்கிடையிலான அதன் மறைகூற்றுகளும், படிமங்களும்,
தரிசனங்களும் நமக்குத் துலங்கும். கவிஞர் அபியின் ஒரு கவிதை, பல நாட்களுக்குப் பிறகு, ஒரு அதிகாலையில் மின்னல் போல் காட்சிதந்து மறைந்தது. அந்தக் கண்டடைதலை எழுதி முடித்த அனுபவம் ஆற்புதமானது.
இந்தக் குறிப்புகளை கவிஞர்களுக்கு அனுப்பவும்
செய்கிறேன், கவிஞர் மதார், கவிஞர் அபி
இருவருக்குமே அவர்கள் கவிதைகள் குறித்த குறிப்புகளைக் கடிதமாக எழுதியிருக்கிறேன்.
நான் மதாரின் 'வெயில் பறந்தது' தொகுப்பை வாசித்துவிட்டு அதிலிருந்த 59 கவிதைகளில் நாற்பது
கவிதைகளுக்கு சிறு குறிப்புகளை எழுதியிருந்தேன், அதில் தேர்ந்தெடுத்த
கவிதைகளையும், நான் அடைந்தவற்றையும்
ஒரு கடிதமாக அவருக்கு எழுதியிருந்தேன், அவரைச் சந்திக்கவும் செய்தேன்.
கவிஞர் அபியின் கவிதைத் தொகுப்பைப் பலமுறை வாசித்திருக்கிறேன்,
அவருடனான உரையாடலுக்கு அது மிகவும் உதவியது. தற்போது கவிஞர்களை அணுகுதல், தொடர்புகொள்ளுதல் என்பதெல்லம் எளிமையாகிவிட்டன,
எல்லோரும் அவர்களுடைய கவிதைகள் வாசிக்கப்படுவதை, விவாதிக்கப்படுவதை விரும்புகிறார்கள், நம்முடைய வாசிப்பை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்றே எண்ணுகிறேன்.
கவிதைகள் குறித்த தொடர் உரையாடல்களில் இருத்தல்:
வாசிக்கும் கவிதைகளை சக வாசகர்களிடம், கவிதைகள் மேல் அபிமானம் கொண்ட நண்பர்களிடம்
விவாதிப்பது, நம்மை, நம் வாசிப்பை மேம்படுத்தும் ஒன்று.
பரஸ்பரம் கவிதைகளைப் பகிர்ந்துகொள்வது, எழுதிய கவிதைகளை விவாதிப்பது எனும் செயல்களின்
மூலம் கவிதைகள் எனும் வடிவத்துடன் தொடர்ச்சியைப் பேணலாம்.
இந்த உரையாடல்களை நாம் கவிஞர்களிடமும் வைத்துக்கொள்ளலாம். கவிஞர் மதாரிடம் கவிதை படைத்தலைப் பற்றியும், அவர் கவிதைகளின் மொழி குறித்தும், கவிதைகளை அவர் பிரசுரத்துக்கு
அனுப்பும் முன் எப்படி மெய்ப்புப் பார்க்கிறார் என்பது குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறேன்.
கவிஞர் அபியிடம் ஒரு மணிநேரம் மேலாக உரையாடியிருக்கிறேன், மிகுந்த உத்வேகத்தோடு என்னிடம் கவிதைகள் குறித்து உரையாடினார். கவிஞர்கள்
எழுதும் கவிதைகள் குறித்து மற்றுமல்ல, கவிதை படைத்தல் குறித்தும் உரையாட விரும்புகிறார்கள்
என்பது என் தனிப்பட்ட அனுபவம்.
கவிதைகளை எழுதிப் பார்த்தல்:
நாம் எல்லோருமே சில எளிய கவிதைகளை எழுதிவிட
முடியும் என்பது என் நம்பிக்கை. கவிதைகளை எழுதும்போது நம்
அகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கூர்ந்து பார்க்கலாம், எழுதும்போது மொழி எப்படி நம்மில் இயங்குகிறது என்பதை அறியலாம், வடிவம் சார்ந்து, சொல்முறை சார்ந்து சில தெளிவுகளை அடையலாம்.
எழுதிய கவிதைகளை வாசித்து, நாம் கடந்து வந்த கவிதைகளுடன்
ஒப்பிடலாம், அதன் குறைகளைக் கண்ணுறலாம், கவிதைகளைத் திருத்தி மீண்டும் எழுதிப் பார்க்கலாம். இது கவிதைகள்
மேல் நம் ஆர்வத்தைக் குன்றாமல் வைத்திருக்க உதவும். கவிஞர்கள் கவிதைகளை எப்படி அமைக்கிறார்கள், எவையெல்லாம்
கவிதைகளில் பேசுபொருளாகின்றன, படிமங்களை முடிவுசெய்துகொண்டு கவிதைகள்
எழுதப்படுகின்றனவா, படிமங்கள் இயல்பாக கவிதை எழுதும் செயலில்
எழுபவையா, என்பது பற்றிய தெளிவு நம்மிடம் அதிகரிக்கும்.
பிறமொழிக் கவிதைகளை வாசித்தல்:
தனிப்பட்ட ரீதியாக நான் ஆங்கிலக் கவிதைகளை
அதிகம் வாசித்ததில்லை, சார்லஸ் புகெவ்ஸ்கியை வாசித்திருக்கிறேன்,
வாசிக்க எளிமையான மொழியில் அமைந்தவை அவருடைய கவிதைகள். கீட்ஸ், வொர்ட்ஸ் வொர்த், வால்ட்
விட்மன், டி.எஸ். எலியட் என்று பல கவிஞர்கள் என்
வாசிப்புப் பட்டியலில் உள்ளனர்.
இது தவிர, மொழிபெயர்ப்புக்
கவிதைகளையும் அதிகம் வாசித்ததில்லை. சில மலையாளக் கவிதைகளின்
மொழிபெயர்ப்புகளை வாசித்திருக்கிறேன். நாமறியாத அந்நிய நிலத்தின்
சூழல்களை, பேசுபொருள்களை, அவர்களுடைய அக்கறைகளைத் தெரிந்து கொள்வது கவிதை வாசிப்புக்கு
மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இலக்கியத்தில் இயங்குவதற்கும் பலமாக அமையும்.
தொடர்ந்து கவிதைகளை வாசிப்போம், விவாதிப்போம்.
நன்றி,
பாலாஜி ராஜூ
Comments
Post a Comment