'An Untold Story' - கதையினுள் ஒரு கதை
நண்பரும், எழுத்தாளருமான ஜெகதீஷ் குமாரின் ஆங்கிலச் சிறுகதை 'An Untold Story', Spillwords Press இணைய இதழில் வெளியாகியுள்ளது. இந்தச் சிறுகதையின் தமிழ் மொழியாக்கத்தை அவருடைய தளத்தில் வாசித்தேன். இதன் ஆங்கில மூலவடிவத்தை சில மாதங்களுக்கு முன்னரே பகிர்ந்திருந்தார், வாசித்தவுடன் கதை மிகவும் கவர்ந்தது. இன்று தமிழ் வடிவத்தை வாசித்தவுடன் சில எண்ணங்கள் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன. அவற்றைத் தொகுத்துக்கொள்ளும் முயற்சியே இந்தக் கட்டுரை.
யாருமே சொல்லியிராத ஒரு கதையைப் படைத்துவிட முயலும் எழுத்தாளனும்,
யாருமே சொல்லியிராத கதையைத் தேடி அலையும் வாசகனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள்.
இருவரும் இணைந்து கதையைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள், முரண்பாடு ஏற்பட்டு சண்டையிட்டுக்கொள்கிறார்கள்,
கதை கேட்பாரற்றுத் தரையில் கிடக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், 'ஒரு கதையைப் பற்றிய
கதை'.
ஒரு எழுத்தாளனின் மனதில் கதை என்ற ஒன்று எப்படி 'கருக்கொள்கிறது'
என்று எண்ணிப்பார்க்கிறேன். தன் வாழ்வில் என்றோ நடந்து நினைவுகளின் அடியாழங்களில் புதைந்துகிடக்கும்
நிகழ்வுகளோ, சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளும் அனுபவங்களோ, கதையை எழத அமர்ந்துகொண்டு
வலுக்கட்டாயமாகத் தன் மூளையைத் துளாவும் செயலோ அல்லது இவையெல்லாமே கைகோர்த்துக்கொண்டோ
கதைகள் உருவாகலாம். கதைத் தொழில்நுட்பம் எனும் சட்டகத்தில் நிரம்பிக்கொண்டு, மொழித்தேர்ச்சி
எனும் திறனால் உருப்பெற்று, படைப்பூக்கம் எனும் விசையால் கதைகள் எனும் வடிவங்கள் நம்மிடம் வந்து சேர்கின்றன.
கதைகளை அடைவதற்கான முயற்சிகள், தடுமாற்றங்கள் என்பவையெல்லாம்
எழுத்தாளர்களால் வேண்டுமளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கதையை எழுத ஆறு மாதங்கள் எடுத்துக்கொள்ளும்
எழுத்தாளர்கள் கூட உலக இலக்கியங்களில் உண்டு, சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுத்தாளர்
அ. முத்துலிங்கம் கனடா நாட்டின் எழுத்தாளரான 'அலீஸ் மன்றோ' அத்தகையவர் என்று கூறியிருக்கிறார்.
வாழ்நாளெல்லாம் தான் எழுதிய படைப்புகளையெல்லம் 'தல்ஸ்தோய்' நிராகரிக்க விரும்பினார்
என்பது இலக்கிய உலகில் இயங்கும் அனைவரும் அறிந்த ஒன்று. தமிழ் எழுத்துலகின் அசகாய சூரரான
ஜெயமோகன் வெண்முரசு எழுத வாழ்நாளெல்லாம் ஆவணங்களையும், தகவல்களையும் சேர்த்துக்கொண்டிருந்ததாகச்
சொல்கிறார்.
'படைத்தல்' எனும் செயல் வசீகரமானது, 'படைப்பாளி' எனும் சொல் தரும்
போதை அளவில்லாதது. இதற்காக ஒரு எழுத்தாளன் தரும் விலை மிகப் பெரியது. நேரம், உறவுகள்,
உடல்நிலை என எல்லாவற்றையும் பணையம் வைத்தே ஒரு சிறுகதையோ, கவிதையோ, நாவலோ ஒரு எழுத்தாளனால்
படைப்பாக வெளிப்படுகிறது.
இங்கு வாசகனின் நிலை என்ன? இலக்கியம் எனும் பரப்பு மிகப் பெரியது.
தாய்நாட்டில் உள்ள இலக்கியம் தவிர, உலக இலக்கியம் எனும் பெருங்கடலில் தனக்குத் தேவையானவற்றை
ஒரு வாசகன் துளாவிக்கொண்டிருக்கிறான், ஆழ்கடலில் முத்தெடுப்பது போன்ற செயல்தான் இது.
பல நேரங்களில் வாசகனின் கைகளில் இந்த முத்து கிடைத்தும் விடுகிறது. ஒரு வாசகனுக்கும்
தனக்குப் பிடித்த படைப்புகள், எழுத்தாளன் என்று அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு வகை போதைதான்,
நல் விளைவுகளை ஏற்படுத்தும் போதை என்று சொல்லலாம். வாசிப்பு எனும் செயலிலும் பல தியாகங்கள்
உண்டு, ஒரு புத்தகத்தை வாசிக்க நேரம், உறவுகள் என சிலவற்றை அவன் இழக்கிறான். இது தவிர
ஒரு வாசகனை திசைதிருப்ப நவீனத் தொழில்நுட்பம் அளிக்கும் சவால்களும் அதிகம், வாட்ஸ்சப்,
யூடியூப் என ஊசலாட்டங்களை வலுக்கட்டாயமாகத் தவிர்த்தால் ஒழிய வாசிப்பு எனும் செயல் சாத்தியமாவதில்லை.
படைத்தல் என்பது ஒரு இனிய வதை, வாசித்தல் எனும் செயலின் மூலம்
அந்த வதையில் வாசகனும் பங்குகொள்கிறான். இருவரும் சேர்ந்த ஒரு செயலின் மூலமே ஒரு படைப்பு
முழுமைபெறுகிறது.
இந்தப் பிண்ணனியில் வைத்துதான் ஜெகதீஷ் குமாரின் சிறுகதையைப்
புரிந்துகொள்கிறேன். படைத்தல், வாசித்தல் எனும் இரு செயல்களையும், படப்பாளி, வாசகன்
எனும் இரு வர்க்கத்தினரையும் இந்தக் கதை அழகாக நம் கண்முன் நிறுவுகிறது. ஒரு நல்ல படைப்பு
உலகளாவிய தன்மை கொண்டிருக்கும், இந்தச் சிறுகதையின் பேசுபொருள் அத்தகையது என்றே எண்ணுகிறேன்.
பின் நவீனத்துவம் எனும் பதத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது,
ஆனால் இந்தக் கதையை ஒரு பின்நவீனத்துவக் கதை என்றே எண்ணுகிறேன்.
இதை ஒரு குறுங்கதை என்றே ஜெகதீஷ் குமார் வகைப்படுத்துகிறார்,
ஒரு நல்ல சிறுகதையை அளவு தீர்மானிக்காது என்றே நம்புகிறேன். ஒரு குறுகிய வடிவத்தில்
அவர் படைத்தல், வாசித்தல் எனும் செயல்களுக்கிடையிலான முரண்களைச் சொன்னாலும், வாசகனாக கதையின்
பேசுபொருளை விரித்தெடுத்துக்கொள்ள நிறைய இடைவெளிகள் இக்கதையில் உள்ளது என்றே நம்புகிறேன்.
மறுவாசிப்பில் இந்தக்கதையின் கதைசொல்லியும், கதைகேட்பவனும் ஒருவனே
என்று தோன்றியது. ஒரு படைப்பு படைப்பாளியினுள் வாழும் வாசகனைக் கடந்தே வெளிவந்தாகவேண்டும்,
அது தவிர்க்கமுடியாதது. எழுதி நிராகரிக்கப்படும் படைப்புகளின் பிண்ணனியில் ஒரு எழுதாளனுக்குள்
வாழும் வாசகனின் பங்கை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அதன் மறு எல்லையில் ஒரு வாசகனிடமும்
படைப்பாளி என்ற ஒருவன் ஒளிந்துகொண்டிருக்கிறான், அவன் படைப்புகளை தனக்கான வெளியில்
விரித்துக்கொண்டு அதனுள் பயணிக்கிறான். பெரும்பாலான வாசகர்கள் எழுதாத எழுத்தாளர்களே!!
ஆழமான ஒரு விவாதப் பொருளை அழகிய வடிவில், நேர்த்தியான முறையில் புனைவாக நம்முன் ஜெகதீஷ் குமார் நிறுத்துகிறார். விரிவான வாசிப்பனுபவம் அளித்த ஒரு சிறுகதை, ஜெகதீஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆஹா அருமை பாலாஜி
ReplyDeleteதேர்ந்த விமர்சனம்