என் கவிதைகள் - இருத்தல் இயம்பு
மனமில்லாமல் எழு
கண்ணாடியில் வீங்கிய முகத்தின்
வெள்ளிக் கம்பிகள் பார்
இன்றைய நாள் இனிய நாள் என்று
தயக்கத்துடன் முனகு
அலைபேசிக் குப்பைகளை
மூளையில் குவி
அலுவலகப் பாதையில்
வாகனத் திரள் கண்டு திகை
சம்பிரதாய முகமன் வீசி
தயக்கமாய்ச் சிரி
கணிப்பொறி முன் அலையும் மனதுக்கு
கடிவாளப் பரிசளி
மேற்குச் சூரியன் முகத்தில் அறைய
சாலையில் மிதந்து வீடு திரும்பு
பரிச்சய முகம் கண்டு
கண்கள் தவிர்
உடலுக்குப் பயிற்சி கொடு
இறுகிய தசை முறுக்கு
பாதையில் நடைபயிலும்
வெள்ளைக்காரி புட்டம் நோக்கு
மகவு கொஞ்சி
உப்பிய கண்ணம் கடி
தேக்கிய விந்து
கண்கள் மூடிப் பீய்ச்சு
துள்ளி அடங்கு
கலசம் ஒலிக்க
தங்கத் திரவம் ஊற்றி
தொண்டை கசக்கக் குடி
சோறு தவிர்
வயிற்றில் ரசாயன ஓசை கேள்
மூச்சுமுட்டப் பேசு
அபத்தம் உணராமல்
வீங்கிய அகந்தை தடவு
காரணமற்று மகிழ்ந்திரு
இரகசியமாய் அழு
தனிமையில் ஏகாந்திரு
நட்சத்திரம் நோக்கு
தாளில் எதையாவது பிதற்று
கலை வடிவ நாமம் சூட்டு
தூக்கத் திசை நடந்து
படுக்கையில் விழு
மிருகக் குறட்டை விடு
காமக் கனவுகளில் திளை
பின்னிரவில் விழி
இருள் துழாவு
.
.
.
குழந்தை போல் உறங்கு.
Comments
Post a Comment