கரூர் டைரீஸ், முன்பதிவு - 1

                                            

கரூர், தமிழகத்தின் மையநிலம். நான் என்னுடைய 29வது வயது வரை கரூர் நகரை நீங்கியதில்லை. கல்லூரிப் படிப்பிற்காக ஐந்து வருடங்கள் திருச்சி நகருக்கு இரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன், பின் கரூரிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்பத் துறையில் வேலை, வெளியுலக அனுபவம் குறைவு, மேலும் ஆர்வமில்லை என்று சொன்னாலும் மிகையல்ல. கரூர் நகர் என்று இங்கு நான் குறிப்பிட்டாலும், என்னுடைய ஊர் கரூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் கிழக்கில் பன்னிரண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் 'காளிபாளையம்' எனும் சிற்றூர்.

30 வயது தொட்டதும் ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தில் வேலை பெற்றுக்கொண்டு கரூர் நகரை நீங்கி சென்னையில் நான்கு வருடங்கள் வசித்தேன். ஒரு குறிப்பிடத்தக்க விஷயம், நான் இதுவரை கரூர் நகரை வரைபடங்களிலோ, வழிகாடிகளிலோ பார்த்த நினைவே இல்லை. இந்தப் பதிவை எழுதுவதற்காக தேடுகையில் இதை உணர்ந்தேன். திசைகள் குறித்த பிரக்ஞை இல்லாமலேயே ஊரில் வாழ்ந்துகொண்டிருந்தவன், கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாட்டை விட்டே அகன்று மேற்குலகில் வாழ்ந்து வருகிறேன் என்பது விசித்திர முரண்.

இந்த வருட கரூர் பயணத்துக்கான விமானப் பதிவுகளைச் செய்துவிட்டேன். கடந்த ஆறு மாதங்களாகவே பயணம் குறித்த எதிர்பார்ப்புகள் மனதில் அவ்வப்போது எழுந்துகொண்டிருந்தன. மனைவியும் மகனும் பிப்ரவரி முதல் வாரத்தில் கிளம்பிவிட்டார்கள். அவர்களை முதலில் வழியனுப்பி ஓரிரு மாதங்கள் கழித்து நான் செல்வது பல வருடங்களாக நான் கடைப்பிடிக்கும் ஒரு முறைமை. மகன் பிறப்புக்கு முன் மனைவி முதலில் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தாள்.

ஒரு வருட இடைவெளிகளில் அமையும் பயணம் என்பதால் எட்டு மாதங்கள் முடிந்தவுடன் மனது வழக்கம்போல கொதிக்கத் துவங்கியது. அவ்வப்போது விமானப் பதிவுகளுக்கான விலைகளை அவதானிப்பது, பயணம் செய்யவிருக்கும் மாதங்களை மனைவியுடன் விவாதிப்பது என மனம் மெல்லத் தன்னைக் குவிக்கத் தொடங்கிவிட்டது. அம்மாவிடமும், நைனாவிடமும் பேசுகையில் தோராயமாக ஊருக்கு வரவிருக்கும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளத்துவங்கியிருந்தேன்.

என்னுடைய அமெரிக்க மேலாளரிடம் வருடம் ஒருமுறை பயணம் என்பதை சென்றமுறையே சொல்லியிருந்தேன். ஆனாலும் வழக்கமான ஒரு தயக்கத்துடன் என் பயணத்திற்கான எண்ணங்களை அவரிடம் வெளிப்படுத்தினேன். இனிய மனிதர்! ஐந்து நிமிடங்களில் ஓப்புதல் அளித்துவிட்டு பயணப் பதிவுகளைச் செய்தவுடன் நாட்களை என்னிடம் பகிர்ந்துகொள் என்று சொல்லிவிட்டு, வேறு அலுவலக விஷயங்களைப் பேசத்தொடங்கிவிட்டார்.

வருடம் ஒருமுறை கரூர் பயணம் என்பதை அமெரிக்கா வந்து வாழத்துவங்கிய ஒன்பது வருடங்களாக தவறாமல் கடைப்பிடித்திருக்கிறேன். 2018ம் ஆண்டு இரண்டுமுறை சென்றிருந்தேன். ஆனால், 2018லிருந்து மூன்று வருடங்கள் பயணம் செய்ய இயலவில்லை. கோவிட் தொற்று, மகனின் பிறப்பு என தவிர்க்க முடியாத காரணங்கள். அந்த மூன்று வருடங்கள் செல்லாமலிருந்ததைச் சமன் செய்ய சென்ற வருடம் நான்கு மாதங்கள் கரூரிலிருக்கும் அரிய வாய்ப்பு அமைந்தது. 

இந்தமுறை வருகையில் ஒரு சிறு மாற்றம். மனைவியும் மகனும் அவர்களுக்கு முன்னரே திட்டமிட்ட தேதிகளில் மாற்றமில்லாமல் அமெரிக்கா திரும்புகிறார்கள். அவர்கள் வரும் அதே விமானத்தில் நான் வர இயலாத நிலை. மனைவி "நாங்கள் முன்னால் செல்கிறோம், நீ தனியாகவே வா" என்று சொல்லிவிட்டாள். நான் ஒருவாரம் கழித்து மே மாதம் மூன்றாவது வாரம் அமெரிக்கா திரும்புகிறேன்.

பயணத்திற்கு இன்னும் பதினொரு நாட்களே உள்ளன. முதலில் பெட்டிகளைக் காலிசெய்து எடுத்துச்செல்லவிருக்கும் பொருட்களை அதில் குவிக்கத் தொடங்கவேண்டும். பயணத்திற்கான ஆவணங்கள் மற்றும் வாங்கவிருக்கும் பொருட்களுக்கான அட்டவணை ஒன்றைத் தயாரிக்கவேண்டும். விமானத்தில் நான் எப்போதும் தேர்ந்தெடுக்கும் வழியை ஒட்டிய இருக்கையை முன்பதியவேண்டும். அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள், வேறுவழியில்லை.

இந்தமுறை ஆறுவாரங்கள் என்பது திட்டம். ஊருக்குச் செல்வது, விமானத்துக்கு சென்னை திரும்புதல் என நான்கு நாட்கள் பயணங்களில் கழிந்துவிடும். மீதமிருக்கும் நாட்கள் கண்டுகொண்டிருக்கையிலேயே நீங்கும் விரைவு இரயிலைப் போல அகன்றுவிடும். அம்மா இப்போதே உப்பிடமங்கலம் ஞாயிறு சந்தையில் தக்காளி விலை குறைவு என ஊறுகாய்க்காக ஆயத்தங்களைச் செய்யத் துவங்கிவிட்டாள். கரூர் சென்று பார்த்தால் கோழிக்குஞ்சுகள் வீட்டில் சப்தமிட்டுக்கொண்டிருக்கும்.

இந்தமுறை எனக்கு மிகவும் பிடித்த கோடைக்காலத்தில் செல்கிறேன். புலியூர் மாரியம்மன் திருவிழா, மாம்பழம், சுட்டெரிக்கும் வெயில், தெருக்களில் காய்ந்துகொண்டிருக்கும் வைக்கோல் என மனதுக்கு நெருக்கமான காட்சிகளும் பிரத்தியேக மணங்களும் மனதில் கணநேரம் தோன்றி மறைந்துகொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை வருடங்கள் தொலைவிலிருந்தே ஊரை ஏங்குபவனாக இருப்பேன் என்று தெரியவில்லை. 

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை