கரூர் டைரீஸ், கவிஞர் ஆனந்த்குமார், ஒரு சந்திப்பு - 4

                                        

கவிஞர் ஆனந்த்குமாரை 2021ம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் சந்தித்தேன். ஒரு சிறு அறிமுக உரையாடல் என்ற அளவிலேயே அது அமைந்தது. அவருடைய முதல் தொகுப்பான 'டிப் டிப் டிப்' நூல் அங்கு வெளியிடப்பட்டது. அமெரிக்கா திரும்பி தொகுப்பை வாசித்துவிட்டு அதற்கு kavithaigal.in தளத்தில் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தேன் (கவிதை விதைத்தல்). சென்ற வருடம் விஷ்ணுபுரம் குமரகுருபன் விருது வென்றவர். அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் ஒருமுறை உரையாடினேன்.

புகைப்படக்கலை நிபுணர், குறிப்பாக குழந்தைகளின் புகைப்படங்களில். கோவை வடவள்ளியில் புதிதாக ஒரு புகைப்பட நிலையத்தை தொடங்கியிருக்கிறார். அவருடைய அலுவலகத்தில் இருந்தவரை மதியம் ஒரு 12.30 அளவில் நானும் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனும் சென்று சந்தித்தோம். புதிய அலுவலகத்துக்கே உரிய வெகுளித்தனத்துடனும், தனக்கே உரிய அரிதாரங்களை இன்னும் பூசிக்கொள்ளக் காத்திருக்கும் முனைப்புடனும் நிலையம் இருந்தது.

ஆனந்த்குமார் நிலையத்தைக் கட்டமைப்பதிலும், புதிய நிலையத்தை மக்களிடம் கொண்டுசெல்வதற்கான வழிகளைப் பற்றிய சிந்தனைகளிலும் இருந்தார். புகைப்பட நிலையத்திற்கு வெளியே நேரடி அழைப்புகளை ஏற்று புகைப்படங்களை எடுத்துக்கொடுப்பதில் ஈடுபட்டிருப்பதைச் சொன்னார். அவருடைய மேசையில் ஞானக்கூத்தனின் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் இருந்தது, சற்று புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தில் 'நிசப்தன்' என்ற பெயர் இருந்தது. அது கவிஞர் சதீஸ்குமார் சீனிவாசனின் புனைப்பெயர் என்று தெரிந்துகொண்டேன்.

சதீஸ்குமார் சீனிவாசனுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விருது அவருக்குத்தான் என்ற செய்தியை நவீன் பகிர்ந்துகொண்டார். அவருடைய கவிதைகளை ஆனந்த்குமார் மெய்திருத்தம் செய்வதிலும் ஈடுபட்டிருந்தார். சதீஸ்குமார் சீனிவாசன் இரண்டு ஆண்டுகளில் 800 கவிதைகளை எழுதியிருக்கிறார் என்ற செய்தி மலைக்கவைத்தது. 

"இவ்வளவு எழுதி வெச்சிருக்கான், என்ன பண்றதுன்னே புரியல" என்று புலம்பிக்கொண்டிருந்தார். ஒரு கவிஞனின் கவிதைகளை இன்னொருவர் மெய்திருத்துவதில் உள்ள மெல்லிய சிக்கல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய முதல் தொகுப்பான 'டிப் டிப் டிப்' கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணனால் மெய்ப்பு பார்க்கப்பட்டது. ஒரு முதிர்ந்த கவிஞன் எப்படி அதை இயல்பாகச் செய்கிறார் என்று விளக்கினார். சதீஸ்குமார் கவிதைகளில் எதை நீக்கலாம் வைக்கலாம் என்பதில் தனக்குள்ள குழப்பங்களையும் பகிர்ந்துகொண்டார்.

நான் அவருடைய தொகுப்பின் முதல் கவிதை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கேட்டேன். மதாரின் முதல் தொகுப்பான 'வெயில் பறந்தது' முதல் கவிதையும் நினைவில் இருந்தது. அதெல்லாம் லக்ஷ்மி மணிவண்ணனுடைய தேர்வு என்று சொன்னார். தான் அவரிடம் கவிதைகளை அளித்துவிட்டு விலகிக்கொண்டதாகவும், மனதளவில் அந்த விளக்கம் ஒரு தொகுப்பாக மாற்றுவதற்கு தேவை என்றும் சொன்னார்.

இயல்பாக உரையாடல் கவிதைகளைக் குறித்தும், கவிஞனின் மனநிலைகள் குறித்தும், கவிதைகள் குறித்து எழுதப்படும் குறிப்புகள் மற்றும் கட்டுரைகள் குறித்தும் திரும்பியது. அவர் தொடங்கியது "கவிதைகள் எப்படி உருவாகின்றன என்பது குறித்து எனக்கும் ஒரு தெளிவு இல்லை" என்றுதான். கவிதைகளல்லாத ஒரு இலக்கிய வடிவம் பற்றிய உரையாடல்கள் அல்லது குறிப்புகள் குறிப்பிட்ட சில புள்ளிகளைச் சார்ந்து இருப்பதையும், மாறாக கவிதைகள் ஒவ்வொருவரின் வாசிப்பிலும் வேறு ஒன்றைத் தொட்டுச் செல்வதையும் குறிப்பிட்டார்.

மலையாளக் கவிஞர் பி. ராமன் எழுதிய கவிதைகள் குறித்த கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். "உங்களுக்கு மலையாளம் புரியுமா" என்று கேட்டுக்கொண்டு, அதை மலையாளத்தில் வாசித்துக்காட்டி பொருளை விளக்கினார். பிற கலைகளான ஓவியம், நடனம் ஆகியவை எப்படி உடல் சார்ந்தவையாக இருப்பதையும், படைத்தல் எனும் தளத்தில் வாசகன் கலைகளைப் புரிந்துகொள்வதை கவிதைகளிலும் செய்யலாம் எனும் கருத்துக்கு அருகில் இருந்த கட்டுரை. சிறிய ஆனால் மிகச் சிறந்த ஒரு கட்டுரையாகத் தோன்றியது. கவிதைகள் தளத்தில் வெளிவர வாய்ப்புள்ளது, ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

ஆனந்த்குமார் கவிதைகள் என்பவை கவிஞனால் படைக்கப்படுகையில் அவை எதிர்காலத்தில் இருப்பதையும், வாசிக்கப்படுகையில் வாசகனால் நிகழ்த்தப்படும் காலப்பயணத்தையும் குறிப்பிட்டு பேசினார். அந்தக் கருத்தைப் புரிந்துகொள்வதில் எனக்கு சிரமங்களிருந்தன. இதை ஒரு கட்டுரையாக எழுத முடியுமா என்று ஒரு வேண்டுகோள் விடுத்தேன், முயல்வதாகச் சொன்னார்.

தன்னுடைய கவிதைகள் குறித்தும், தான் எங்கு செல்ல எண்ணுகிறேன் என்பதைக் குறித்தும் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார். தேவதேவனுடைய ஆரம்பகாலக் கவிதைகளையும், தற்போது அவர் எழுதும் கவிதைகளையும் ஒப்பிட்டுப் பேசினார். இடையில் தான் எடிட் செய்துகொண்டிருந்த குழந்தைகளின் புகைப்படங்களைக் காட்டினார். மேசை அடுக்கில் இருந்த ஒரு பலவண்ண இனிப்பு மிட்டாய்கள் நிறைந்த புட்டியை எடுத்து பகிர்ந்துகொண்டார். விசித்திரமான் சுவை, ஆனால் பிடித்திருந்தது. தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதையும், ஒரு கவிஞனாக தொடர்ச்சியாக இருப்பதற்கான தகுதிகளை நோக்கிய பயணத்தில் இருப்பதையும் உணர முடிந்தது.

அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஃப்ரீமாண்ட் நகரில் மூன்று வருடங்கள் இருந்திருக்கிறார். பின் மனைவியுடன் இணைந்து இந்தியா திரும்புவதற்கான முடிவுகளை எடுத்ததை பகிர்ந்துகொண்டார். நான் ஊரில் இருந்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறார். பிறகு சில அன்றாட விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு ஒரு புகைப்படத்துடன் விடைபெற்றோம். மீண்டும் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இனிய ஒரு சந்திப்பு. அடுத்தமுறை அவரைச் சந்திக்கையில் அந்த புகைப்பட நிலையம் தன் முழு அரிதாரத்தையும் பூசிக்கொண்டிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

குறிப்பு: அவர் புகைப்படநிலையம் துவங்கியிருக்கும் செய்தியை ஜெயமோகனின் தளத்தில் வாசித்திருந்தேன். புகைப்பட நிலையம் குறித்த ஒரு கவிதையை சில நாட்களில் எழுதினேன், அதன் இணைப்பு இங்கு,

https://balajirajuwrites.blogspot.com/2023/03/blog-post_11.html

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை