கரூர் டைரீஸ், ஒரு நீண்டநாள் உறவு - 6

                                                

நகுல்சாமி அண்ணனை இருபது வருடங்கள் கழித்து சந்தித்தேன். திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் புலியூர் அருகில் துவங்கப்பட்ட புதிய பெட்ரோல் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினேன். நைனா கைகளை காட்டி "உன்ன எப்பவுமே கேப்பாப்ள" என்று சொன்னார். வேறொரு பெண் பெட்ரோல் போட ஆயத்தமாகையில் "விடும்மா, நான் பாத்துக்கறேன்" என்று சொல்லிவிட்டு, "ஒரு நல்லது கெட்டதுனா ஃபோன் பன்றா" என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டார். 

அவர் அப்படி நேரடியாகக் கேட்டதை நான் எதிர்பார்க்கவில்லை, "எப்படிணா இருக்கீங்க?". ஐம்பது வயது கடந்த தோற்றம், தலையில் முடிகள் அகன்று பரவலான வழுக்கை, அங்காங்கே நரைமுடிகள் படர்ந்திருந்தன, கண்களில் நிலையான ஒரு வருத்தம் ஒளிந்துகொண்டிருந்தது, ஒரு முறை என் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டார்.

நான் இதுபோன்ற தருணங்களில் சலனப்பட்டுவிடுவேன், எப்படி சூழலைக் கையாள்வது என்பது புரிவதில்லை. அவரிடம் "நான் அப்புறம் வந்து பாக்கறண்ணா" என்று சொல்லிவிட்டு காரைக் கிளப்பினேன். ஒருவகையில் அந்த இடத்தை விட்டு அகன்றுவிடவே விரும்பினேன். இத்தனை வருடங்களாக நம் நினைவுகளிலிருந்தும், நனவிலி நிகழ்த்தும் கனவுகளிலிருந்தும் மறைந்துபோன ஒருவரைச் சந்தித்த நிகழ்வின் தீவிரத்தை என்னால் கையாள இயலவில்லை.

அவர் என்னை எப்போதும் விசாரிப்பாரா? இத்தனை வருடங்களாக நம் நினைவடுக்களிலிருந்து மறைந்துவிட்ட ஒரு உள்ளம் நம்மை அவ்வப்போது எண்ணிப்பார்க்கிறது என்பது தாங்கவியலாத ஒரு திகைப்பை அளிக்கிறது. ஒரு உயிர் நம்மை எண்ணிக்கொண்டிருப்பதை வருடங்களாக நாம் உணர்வதில்லை என்பது எத்தனை குரூரம். 

பள்ளி நாட்களில் எங்களூர் பிள்ளையார் கோவிலில் அமர்ந்துகொண்டு என்னிடம் சினிமா குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருப்பார். "நைனா கரூர்ல படத்துக்கு கூட்டிட்டு போனாரா?". அப்போது அவருக்கு இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் இருந்திருக்கும். வசீகரமான் ஒரு புன்னகையை எப்போதும் எனக்களிப்பார். நல்ல உயரம், ஒல்லியான தேகம், உடலில் ஆங்காங்கே தேமல் படர்ந்திருக்கும். தன் அம்மாவுடன் வசித்துக்கொண்டிருந்தார், அப்பா இறந்துவிட்டார். என் மனதில் கனிவான ஒரு மனிதனாகவே பதிந்துபோயிருந்தார்.

சிவாஜி கணேசனின் அபிமானி, கமல்ஹாஸனின் வெறியர். நானும் பள்ளியில் ஆறாம் வகுப்பு கடந்து (எட்டாவதாக இருக்கலாம்) சினிமாக்களை விரும்பிப் பார்க்கத்தொடங்கிய நாட்கள். எங்கள் ஊருக்கு அருகிலிருந்த வீரராக்கியம் ஆர்.எஸ். அருணா டென்ட் தியேட்டரில் சண்டைப் படங்களைப் பார்த்த அனுபவத்தை நானும் பகிர்ந்துகொண்டிருப்பேன். அருணா தியேட்டர் பழைய படங்களுடன் கரூரில் வெளியாகிய புதிய திரைப்படங்களையும் பல மாதங்கள் கழித்து ரிலீஸ் செய்துகொண்டிருந்தது.

எனக்கு கமல்ஹாசனின் மீது பற்று ஏற்பட அவர் காரணமானார். 'காக்கிச்சட்டை' திரைப்படத்தை அருணா தியேட்டரில் பார்த்துவிட்டு நானும் கமலைப் போல உடல் பேண வேண்டும் என்று தண்டால் எடுக்கத் தொடங்கினேன். நான் தவறவிட்ட கமல்ஹாசன் படங்களைப் பற்றி, அதன் பிரத்யேக தகவல்களை சுவாரசியமாகப் பகிர்ந்துகொள்வார். 'கலைஞன்' திரைப்படம் அருணா தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது, நான் வீட்டில் கேட்டுப்பார்த்தேன், மறுத்துவிட்டார்கள். நகுல்சாமி அண்ணன் அந்தப் படத்தின் துவக்கக் காட்சியை அதன் பிண்ணனி இசையோடு உச்சரித்துக்காட்டியது இன்னும் நினைவிலிருக்கிறது. இளையராஜா மீதும் பெரும் அபிமானம் கொண்டிருந்தார்.

பள்ளி விடுமுறை நாட்களில் அவரைத் தேடத் தொடங்கினேன். அவர் அப்போது லாரியில் க்ளீனராகப் போய்க்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக பல மாதங்கள் காணாமல் போவார். ஊரில் இருக்கையில் எப்படியாவது அவரைச் சந்தித்துவிடுவேன். ஒரு பள்ளிச் சிறுவனுக்கு தன்னைவிட சற்று மூத்த வயதினருடன் ஏற்படும் இயல்பான ஒரு ஈர்ப்பு எனக்கு இருந்தது. சிறுவனாக நம்மீது போடப்படும் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக அலையும் ஜீவன்கள் என்பதால் இருக்கலாம். அம்மா "வயசுல மூத்த பையனோட உனக்கு என்ன பழக்கம்" என்று கண்டிக்கத் தொடங்கினாள். 

வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் அவரைக் கண்ட நிகழ்வைச் சொன்னேன். அம்மா எப்போதும் நான் ஊரில் தவறவிட்ட நிகழ்வுகளை, காலம் அழித்துவிட்ட சித்திரங்களை மீண்டும் எனக்கு வரைந்துகாட்டும் ஒரு ஜீவன். 

"ஆமா எப்பவுமே உன்ன அந்த அண்ணன் கேக்கும்". 

"கல்யாணமாகலியா?".

"ஆச்சு, வெள்ளாளபட்டிதான் பொண்ணு. பொண்ணு கெடைக்கலண்ணு ஏற்கனவே கல்யாணமாகி விட்டுட்டு வந்தத கட்டி வெச்சாங்க. ஒரு பையன் இருக்கறான். கூட இருக்க மாட்டேன்னு திரும்பிப் போயிருச்சு. கொஞ்ச நாள் கூட்டீட்டு வந்து ராசியாகி இருந்தாங்க, மறுபடியும் பையனக் கூட்டிட்டு இருக்கமாட்டேனு போயிருச்சு".

"ஏன், என்னாச்சு?". 

"என்னாச்சுனு தெரீல. இப்ப அவுங்கம்மாவோட தனியாதான் இருக்கு, பாவம்".

சில கேள்விகளுக்கு எளிமையான பதில்கள் இருப்பதில்லை, வாழ்வும் மனித குணங்களும் அத்தனை எளிதாகக் கணிக்கக் கூடியவையல்ல. 

மே பதினைந்தாம் தேதி மாலைதான் வெள்ளிமலையிலிருந்து ஊருக்குத் திரும்பியிருந்தேன். பதினேழாம் தேதி அமெரிக்கா கிளம்ப சென்னைக்கு ரயில்பிடிக்கவேண்டும், இடையில் வீட்டில் ஒருநாள்தான் இருக்க முடியும். மீண்டும் ஊரை விட்டு கிளம்புவதன் வருத்தமும், ஏக்கமுமாக அலைந்துகொண்டிருந்தேன். 

ஒவ்வொருமுறை அந்த பெட்ரோல் கிடங்கைக் கடக்கையிலும் அவரைப் பார்த்து விரிவாகப் பேசவேண்டும் எனும் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும், ஆனாலும் மனதில் ஒரு தடை இருந்துகொண்டிருந்தது. நகுல்சாமி அண்ணனைப் போன்ற கதாப்பாத்திரங்களை இலக்கியத்தில் நிறைய வாசித்தாலும், நேராக அப்படி ஒருவரை எதிர்கொள்ள மனம் ஒப்புவதில்லை.

திங்கள்கிழமை அக்னி வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த ஒரு மதிய நேரம் அவரைப் பார்த்துப் பேசிவிடவேண்டும் என்று அங்கு சென்றேன். இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு "அண்ணா" என்று கைகாட்டினேன். சில நொடிகள் என்னைப் பார்த்தவர், மீண்டும் அடையாளம் கண்டுகோண்டு "வா வா, உக்காரு" என்று நாற்காலியைக் காட்டினார். அதற்குள் இரண்டு வாகனங்கள் பெட்ரோலுக்காக காத்திருந்தன. அவர்களை அனுப்பிவிட்டு என்னிடம் வந்தார்.

"எங்க இருக்க இப்ப?".

"நான் வெளிநாட்ல இருக்கண்ணா".

"அப்படியா ஊருக்கு அடிக்கடி வருவியா?".

"வருசம் ஒருதடவ வருவேன், அப்பா அம்மாவப் பாத்திட்டு போவேன்".

"என்ன இருந்தாலும் ஊர்ல சொந்த பந்தத்தோட இருக்கறது மாதிரி வராதுடா, எங்க போனாலும் சாயங்காலம் விட்டுக்கு வந்திரோனும், நீ எப்படி இருக்கியோ!". ஏற்கனவே கனன்றுகொண்டிருக்கும் நெருப்பில் காயந்த இலைகளைத் தூவுகிறார்.

"ஆமாணா வேற வழியில்ல. வந்திரலாம்னுதான் பக்கறேன், பாப்போம்", நான் எப்போதும் கேட்பவர்களிடம் சொல்லும் பதில்.

"நீங்க எப்படி இருக்கீங்க?", நான் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள விருபினேன்.

"இருக்கண்டா", ஒற்றை வரியில் இத்தனை சலிப்பைப் புதைத்துவைக்க முடியுமா?

"நாம பாத்து 20 வருசம் இருக்குமாணா?", உரையாடலைச் சற்று இலகுவாக்க விரும்பினேன்.

"மேலயே இருக்கும், பழசெல்லாம் எதுக்குடா!", நான் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை.

அவரை வேலை நடுவில் சந்திக்கிறேன், இடையில் பெட்ரோல் நிரப்ப ஆள் வந்துவிடுவார்களோ என்று ஒரு கவலைவேறு எனக்கு.

"தனியாதான் இருக்கேன், வேல செய்றேன், சம்பாதிக்கறேன், குடிக்கறேன், வேற எந்தக் கவலையும் இல்ல. ஆளுங்களோடயோ, கடையிலயோ போய் குடிக்கறதில்ல, எல்லாம் வீட்லதான், தனியாதான். ஒன்னும் பிரச்சன இல்லடா, இது நம்ம பங்காளி ஊட்டு பங்க்குதான், ஒருநாள் விட்டு ஒருநாள் வேல", அவருடைய வார்த்தைகளின் அடியாழத்தில் பொதிந்திருக்கும் உண்மையைக் கற்பனை செய்து பார்த்துக்கொண்டேன். அவர் அதற்குமேல் அதையும் பகிரமாட்டார் என்பதை உணர்ந்துகொண்டேன்.

நம்முடைய நம்பிக்கைகளை ஆழ்ந்திருக்கும் சலனங்ககளின் மேல் நிரப்பி, பேசும் வார்த்தைகளை அதற்குமேல் ஆழத்தில் ஊடுருவிடாமல் இருக்க பிரயத்தனம் செய்கிறோம். ஒன்று அழுது கரைத்துக்கொள்ளலாம் அல்லது நாமே பிரச்சனைகளுக்குத் தீர்வுதேட முயலலாம். உண்மையை எதிர்கொள்ளும் திடம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, எளிய மனங்கள் வாழ்வின் எண்ணற்ற காரணிகளின் சுழலில் தன்போக்கில் அலைந்துவிட்டு மறைந்துவிடுவதே இயற்கை. 

நானும் அவரும் ஒரே ஓவியத்தின் இரண்டு பிம்பங்களா? அவரைப் போலவே நானும் எளிதாக மறைந்துபோய்விடும் ஒரு எளிய உயிர்தானா? நம் வாழ்வுக்கு ஏதேனும் அர்த்தங்கள் உள்ளனவா? இத்தனை புத்தகங்களும், கவிதைகளும் வார்த்தைகளாக என்னுள் சென்று எதேனும் செய்கின்றனவா? எல்லாமே ஒரு பாவனைதானா? மனிதன் ஏனும் வார்த்தையே எத்தனை பெரிய பாவனை!

அவரிடம் விடைபெறும் முன் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டேன். அலைபேசியில் என்னுடைய எண்ணைப் பதிய அவர் தடுமாறினார், நானே செய்துகொடுத்தேன். 

"நாளைக்கு கெளம்பறேண்ணா", இத்தனை வருட இடைவெளிகளைப் பூர்த்திசெய்துவிட முயல்வது ஒருவகையில் தவறான எதிர்பார்ப்புதான், விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. 

"சரிடா, அதான் ஃபோன் இருக்குல்ல பேசிக்குவோம், போய்ட்டு வா. ஊருக்கு வந்தா வந்து பாரு, நான் இங்கதான் இருப்பேன்". 

அதற்குள் வாகனங்கள் வரிசையாக வரத்தொடங்கின.

"எவ்வளவுக்கு அடிக்கனும், ஆயில் எவ்வளவு?".

நான் இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு கரூர் சென்றேன். மனதில் அவரைச் சந்தித்துப் பேசிவிட்ட நிறைவு, இனி ஒவ்வொருமுறை ஊருக்கு வருகையிலும் சலனமில்லாமல் அவரை எதிர்கொள்ளலாம், காலம் எங்கள் உறவின்மீது குவித்திருந்த ஒட்டடைகளை இயன்ற வரை வழித்து வீசிவிட்டேன். அவருடைய வாழ்வை என்னுடைய கற்பனைகளில் ஊகங்களில் நீட்டிக்கொள்வேன். 

மறுநாள் காலை அவரிடமிருந்து 'காலை வணக்கம்' என்றொரு வாட்ஸப் ஃபார்வெர்டு மெஸெஜ் வந்திருந்தது, இன்று வரை வந்துகொண்டிருக்கிறது.

Comments

  1. https://nanavodaii.blogspot.com/2023/06/httpsbalajirajuwrites.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை