நீலத்தழல் சிறுகதை, அரூ இதழ் - ஒரு வாசிப்பு

                                                

நண்பர் ஜெகதீஷ் குமாருடைய 'நீலத்தழல்' என்ற சிறுகதை அரூ இதழில் வெளியாகியுள்ளது ('நீலத்தழல்' அழகிய கவித்துவமான தலைப்பு). அரூ அறிவியல் புனைவுகளை வெளியிடும் ஒரு இதழ். அதில் ஒரு சிறுகதைப்போட்டியில் தேர்வாகி இந்தக் கதை வெளியிடப்பட்டுள்ளது. சிறுகதை குறித்த என்னுடைய பார்வையை ஒட்டியே இந்தப் பதிவு.

'bioluminescence' எனும் கடலில் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வான 'ஒளி உமிழ்வு' மற்றும் அதன் அழகை முன்வைத்து, பிரசாத் எனும் புலம்பெயர் ஆசிரியனின் உளச்சலனங்களைச் சிறுகதை காட்சிப்படுத்துகிறது. கதையினூடாக சில அடிப்படைகளை வாசகனாக விரித்துக்கொள்ள முடிந்தது. தீவொன்றில் வாழும் மக்களின் மனநிலைகள் நிலப்பரப்பில் வாழும் மக்களிலிருந்து விலகியிருக்கும். கடல் என்பது அங்கு புலம்பெயரும் ஒருவனுக்கு அச்சமூட்டக்கூடிய சலிப்பான ஒரு இயற்கைக் காட்சி (பிரசாத்) அல்லது கண்டுகளிக்கக்கூடிய ஒரு சாகசம் (வருண்). பிரசாத் கடலை மையநிலத்திலிருந்து தன்னை விலக்கி வைத்திருக்கும் ஒரு இடையூறாகக் கருதுகிறான்.

ஆனால் அங்கு வாழும் மக்கள் கடல் என்பதை வெறும் இயற்கையின் பிரம்மாண்டமாக மட்டும் கருதாமல் கடவுளுக்கு நிகரான ஒன்றாக அணுக வாய்ப்புள்ளது, கடல் அவர்களுடைய வாழ்வாதாரத்தின் ஒரு பகுதி. கடலுக்கே உரிய சடங்குகள், கதைகள் அவர்களிடம் என்றும் இருக்கும். அந்த மக்களிடமிருந்து கடலைப் பிரிக்கமுடியாது, கடல் அவர்கள் உடல் மற்றும் மனதின் ஒரு பகுதி. ஹமீது எனும் பள்ளிச் சிறுவனின் சுதந்திரமாக அலைய எண்ணும் விளைவை பிரசாதால் புரிந்துகொள்ளமுடிவதில்லை. 

இன்னொரு கோணத்தில் கல்வி என்பது அந்த மக்களுக்கு கடல்சார்ந்த உடலுழைப்புகளிலிருந்து மீட்சி அளிக்கும் ஒரு வழி. அந்த மனநிலைகளினூடாக அங்கு வரும் ஆசிரியர்களுக்கு ஒரு அழுத்தமான சூழல் நிலவுகிறது. பிரசாத் அவர்களுக்கு கணிதச் சூத்திரங்களைப் புரிய வைப்பதில் உள்ள சிக்கல்களை எண்ணிக் கவலைகொள்கிறான். இவற்றோடு மொழிப் பிரச்சனையும் சேர்ந்துகொள்கிறது.

இதை நல்லுணர்வுகளை வாசகனில் கிளர்த்தும் ஒரு சிறுகதை என்று கருதலாம். மிக இலகுவான மொழி, நேர்த்தியான நடை, கடல் நிகழ்வைக் காட்சிப்படுத்திய விதம் என எல்லாக் கோணங்களிலும் ஒரு அழகிய சிறுகதையாகவே இது தோற்றமளிக்கிறது. சிற்றிதழ்களில் வரும் சிறுகதைகள் பலவற்றின் மொழி மிகத் திருகலாக வாசிக்கக் கடினமானதாகவே இருக்கும், ஆனால் இந்தச் சிறுகதை அதற்கு நேரெதிர்.

இந்தச் சிறுகதை அரூ இதழின் அறிவியல் புனைவுப் போட்டிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அறிவியல் புனைவு எனும் அம்சத்துக்குள் வராமல் தனக்கே உரிய அழகுடன் தனித்து நிற்கிறது. அறிவியல் புனைவு என்ற பதத்தை எண்ணாமல் இந்தச் சிறுகதையை வாசித்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.

பிரபஞ்சத்தின் பெருநிகழ்வுகளுக்கு இடையில் மனிதன் தன்னுடைய சிறிய வாழ்வின் சச்சரவுகளைப் பெரிதுபடுத்திக்கொண்டு, அதில் மூழ்கிக்கொண்டிருக்கும் அவலத்தைப் பேசும் கதையாக இதை வாசிக்கலாம். ஒளி உமிழ்வுகளுக்கிடையில் நீந்துகையில் பிரசாத் ஓரு அக விடுதலையை அடைகிறானா? அவனுடைய அலைபேசி ஒலிப்பது அதைத்தான் குறிக்கிறதா? ஒரு வாசகனாக எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது, ஜெகதீஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை