கரூர் டைரீஸ், கவிஞர் அபி, ஒரு சந்திப்பு - 5

                                                    

கவிஞர் அபியிடம் 2022ம் ஆண்டு கரூர் பயணத்தில் அலைபேசியில் உரையாடினேன். மிக விரிவான உரையாடலாக அது அமைந்தது. இந்த ஆண்டு கரூர் பயணத்தில் அவரை சந்திக்கலாம் எனும் எண்ணம் மனதில் இருந்தது. நான்கு வாரங்கள் விரைவு ரயிலெனக் கடந்துவிட்ட நிலையில், அவரைச் சந்திக்காமல் அமெரிக்கா திரும்புவது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்தேன். 

மே மாதம் 1ம் தேதி மதியம் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு வேலைகளில் மூழ்கினேன். 2.30 மணிக்கு பதில் வந்தது, என்னுடைய எழுத்துக்களை வாசிப்பதாகவும், என்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றும் சொன்னார். கவிஞர் மதாரை அந்த வாரம் வெள்ளிக்கிழமை மதுரையில் சந்திப்பதாக இருந்தேன். சனிக்கிழமை சென்னை செல்லவிருந்தமையால் வியாழன் சந்திக்கலாமா என்று கேட்டேன், சரி என்று சொன்னார். மதார் முடிந்தால் வியாழன் அன்று உடன் வருவதாகச் சொன்னார், ஆனால் கடைசித் தருணத்தில் அவரால் மதுரை வர இயலவில்லை.

அபி என்னுடைய இந்திய தொலைபேசி எண்ணிற்கு அழைத்து எங்கு வரவேண்டும் என்று சொன்னார், தன்னுடைய விலாசத்தைப் பகிர்ந்துகொண்டார். "ஒரே ஒரு கிருஷ்ணாபுரம் காலனிதான், ஆனால் பாரதி நகர் என்று நிறைய இடங்கள் உண்டு. கிருஷ்ணாபுரம் காலனிக்கு வந்துவிட்டு என்னைக் கூப்பிடுங்கள், நான் வழி சொல்கிறேன்". வியாழன் அன்று மதுரையில் அழகர் தேர்திருநாள் என்று நான் அறிந்திருக்கவில்லை.

மூன்று நாட்களும் அவருடைய கவிதைகளைப் படித்துக்கொண்டும், கவிதைகள் குறித்து அவர் எழுதியிருந்த கட்டுரைகளை (கவிதை இயல்) வாசித்து சந்திப்புக்கு என்னை தயார்படுத்திக்கொண்டும் இருந்தேன். வியாழன் காலை 8.30 மணிக்கு வீட்டிலிருந்து காரை எடுத்தேன். சேலம் மதுரை புறவழிச்சாலையை 20 நிமிடங்களுக்குள் அடைந்தேன். அதன் பிறகு இரண்டு மணிநேரங்கள் அகலமான சாலையில் இனிய பயணம். திண்டுக்கல் தாண்டியது இருபுறமும் மலைக்குன்றுகள் சூழ்ந்துகொண்டன.

இடையில் அபி அழைத்திருந்தார். இரண்டு நாட்களாகப் பெய்த மழையில் தெருக்களில் தண்ணீர் தேங்கியிருப்பதாகவும், மிகவும் கவனமாக வரவேண்டும் என்றும் அக்கறையுடன் சொன்னார். நான் தனியாக காரில் வருகிறேன் என்பதில் அவருக்கு ஒரு சிறு ஆச்சரியம். மலைக்குன்றுகள் அபியின் கவிதை வரிகளை நினைவுபடுத்தின, "அருகே என் மலை பிரபஞ்ச சோகம் திளைத்து", "இங்கு நான் இருளைச் சுண்டினால், என் மலை பதில் சமிக்ஞை தரும்". 

அன்று அழகர் ஆற்றிலிறங்குகிறார் என்பதால் நகர் முழுக்க மக்கள் வெள்ளம், வாகன நெரிசல். மதுரையின் பிரதான சாலைகளுக்கு அழகர் வருகை தருவார் என்று தெரிந்தது. அபியின் வீடு வடக்குப் பகுதியில் இருந்தமையால், மதுரை நகருக்குள் முழுதாகச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. 2018ம் ஆண்டு அவருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபோது, ஜெயமோகன் அவரைக் காண வருகையில் விலாசம் தெரியாமல் தவித்த கதையைப் பிறகு சொன்னார்.

கிருஷ்ணாபுரம் காலனியை அடைந்து அவருக்கு அழைத்தேன். பிறகு அங்கிருப்பவர்களிடம் வழிகேட்டு பாரதி நகரின் தெருவில் நுழைந்தேன். சாலைகளில் குழிகள் மட்டுமே இருந்தன, எங்கும் செம்மண் நிறத்தில் காரின் சக்கரங்கள் மூழ்குமளவுக்கு சிறிய தண்ணீர் குளங்கள். அபி வீட்டின் வெளியே காத்துக்கொண்டிருந்தார், அவருடைய மகன் காரை எங்கு நிறுத்தவேண்டும் என்று வழிகாட்டினார்.

அபி தன் மகன் விட்டில் மாடியில் தனியறையில் வசிக்கிறார். விசாலமான மொட்டை மாடி, சுற்றிலும் தென்னை, வேப்பை மற்றும் முருங்கை மரங்கள். மாடியின் ஒரு ஓரத்தில் சிறிய அடக்கமான அறை, ஒரு கட்டில், மேசை, இரு நாற்காலிகள், அலமாரி மற்றும் மேசை நிறைய புத்தகங்கள், அறையை ஒட்டிய கழிவறை. அவருடைய புத்தக அலமாரியில் இருந்த வரிசையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒஃரான் ஃபாமுக்கின் 'பனி' நாவல் இருந்தது. அறையின் கடிகாரம் 11.20க் கடந்துகொண்டிருந்தது.

"கரூர் இத்தனை அருகிலிருக்கும் என்று இப்போதுதான் தெரியும். நீங்கள் சற்று வயதானவர் என்றல்லவா எண்ணினேன், இளையவர் என்று எதிர்பார்க்கவில்லை".

இருவரும் எதிரெதிர் நாற்காலிகளில் அமர்ந்துகொண்டோம். எனக்கு சற்று பதற்றமாக இருந்தது. அவர் "நீங்கள் என்ன சொல்லவேண்டுமோ சொல்லுங்கள், நான் அதைக் கேட்டுக்கொள்வேன்" என்று என்னை இயல்பாக்க முயன்றார். 81 வயது என்று சொல்லமுடியாத அளவு துடிப்பாகவும், நினைவாற்றலுடனும் இருந்தார், பளிச்சென்று சுருக்கங்களற்ற முகம். நான் அவரை வாசிக்கத் துவங்கிய நாட்களையும், தொடர்ச்சியாக அவருடைய கவிதைகளை வாசிப்பதையும் சொல்லி உரையாடலைத் தொடங்கினேன்.

அவருடைய கவிதைத் தொகுப்பின் அனைத்து பக்கங்களிலும் அடிக்கோடிட்டிருப்பதைக் காட்டினேன். "பேனாவிலயா கோடுபோட்டிருக்கீங்க?" என்று வினவினார்.

'விரல்களிலிருந்து இறங்கி வெளியேறி அந்தப் பாதை போய்க்கொண்டிருந்தது' (பிரிதல் - பிரிவுறுதல்) கவிதை வரிகளைச் சொல்லி அவை எத்தனை சிறந்த வரிகள் என்று பகிர்ந்துகொண்டேன். 

"அந்தப் பாதை ஒன்றும் அருவமானதல்ல. இன்னும் போய்க்கொண்டுதானிருக்கிறது, பாருங்கள்" என்று தன் உள்ளங்களைக் காண்பித்தார். 

"நான் இங்கு இல்லாத எதையும் என் கவிதைகளில் சொல்வதில்லை. இருப்பவற்றையே வரிகளாக்கினேன்" என்று தொடர்ந்தார்.

அவருடைய 'மைதானம்' கவிதை என்க்கு மிகவும் பிடித்த ஒன்று. அதிலிருந்து சில வரிகளை நினைவுபடுத்தி சொன்னேன், மிகவும் ஆச்சரியப்பட்டார். அந்தக் கவிதை ஏன் எனக்கு நெருக்கமானது என்பதைப் பகிர்ந்துகொள்ள முயன்றேன். அந்தக் கவிதை என்னுடைய பள்ளி நாட்களையும், வெயில் பாவிய திறந்த மைதானத்தையும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது. ஒருவகையில் பள்ளியின் சுவர்களுக்குள் அடைபட்டு பாடம் படிக்கக் கட்டாயப்படுத்தப்பட்ட மனதில் ஒரு விடுதலைக்கான ஏக்கமாக இந்த மைதானம் என் ஆழ்மனதில் பதிந்துபோன ஒன்றா?

                                                

'லயம்' கவிதையை வாசித்துக் காண்பித்தேன். 'நீருக்குள் கூழாங்கற்கள் உருள்வதுபோல' என்ற வரிகளில், தண்ணீருக்கடியில் ஓசைகள் வேறுவிதமாகக் கேட்கும் என்றும், கூழாங்கற்களின் உரசலை நான் நீருக்கடியில் கேட்டிருப்பதையும் சொன்னேன். அவர் ஆச்சரியமாக "அப்படியா" என்று வினவினார். 'நீர்ப்பரப்பு அப்போது என்மீது ஓடிக்கொண்டிருக்கும்' என்று முடியும் மிகச் சிறந்த கவிதை அது.

இருபது வருடங்களுக்குமுன் தன் மனைவி இறந்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கான ஆம்புலன்ஸ் பயணத்தில் என் மனதில் ஒரு லயம் ஓடிக்கொண்டே இருந்தது என்று சொன்னார். அவருடைய மனைவியின் மிக இளவயது புகைப்படம் ஒன்று மேசையிலிருந்தது. "மிக அழகானவர்" என்று சொன்னேன்.

அவருடைய கட்டுரை ஒன்றில் தனக்கும் தன் கவிதைக்குமான உறவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். 'நானும் இந்தக் கவிதையும்' என்ற அவருடைய கவிதையையும் சுட்டினார். என்னுடைய கவிதைகளுக்கு என்னால் உரிமைகொண்டாட முடியாது என்றார். விஷ்ணுபுரம் சார்பாக எடுக்கப்பட்ட அவருடைய ஆவணப்படத்தை பத்துமுறைக்குமேல் பார்த்திருப்பதைச் சொன்னேன். அதில் அவருடைய குரல் வரும் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது என்றேன். 

"கீழே இந்த வீட்டில்தான் எடுத்தார்கள். சினிமா போலவே எல்லாம் அமைத்திருந்தார்கள்".

'மாலை - மாற்றுருவம்' கவிதையில் 'முன்பொரு சமயம் கேட்ட நள்ளிரவு ஒப்பாரிக்குரல்' என்ற கவிதை வரிகளைத் தேடி வாசித்துக்காண்பித்தேன். அது என் மனதில் பெரிய சலனங்களை ஏற்படுத்தும் ஒரு வரி. எங்களூரில் ஒப்பாரிகள் இன்னும் பாடப்படுவதைக் குறிப்பிட்டேன். அபி போடிநாய்க்கனூரில் தேவர் சமூகத்தில் இந்தப் பழக்கம் இன்னும் தொடர்வதாகச் சொன்னார்.

'மாலை - திரும்புதல்' கவிதையின் முதல் வரிகள் 'புரண்டு படுக்க இடமின்றி ஒற்றையடிப் பாதை சலிக்கிறது'. அந்த ஒற்றையடிப்பதையை தன் சிறுவயதில் கண்டிருப்பதாகவும், அதன் தனிமை தன்னை வெகுவாக பாதித்ததையும் குறிப்பிட்டார். எனக்கு எனோ கண்களில் தண்ணீர் திரண்டது, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்தேன். அந்த ஒற்றையடிப்பாதையின் தனிமையை எண்ணிப்பார்த்துக்கொண்டேன். அபியின் கவிதைகள் என்னில் ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களுக்கான் எடுத்துக்காட்டு இது.

உரையாடல் 'இன்மை' 'சூன்யம்' ஆகியற்றை நோக்கித் திரும்பியது. அவர் இன்மை மட்டுமே எங்கும் இருந்துகொண்டிருப்பது என்றும், பருப்பொருள் என்பதெல்லாம் இன்மையிலிருந்தே தோன்றுவதையும் குறிப்பிட்டார். இன்மை இங்கு நாம் வருவதற்கு முன்பே இருந்த ஒன்று, நமக்குப் பிறகும் இருக்கும் என்றார். இதைச் சொல்கையில் அவருடைய கண்கள் சற்று கலங்கியிருந்தன, நீர் முட்டிக்கொண்டிருந்தது. இந்தக் கருத்து எனக்கு ஒன்றும் புதிதல்ல, ஆனால் ஒரு பெருங்கவிஞனிடமிருந்து நேரடியாகக் கேட்கையில் அது என்னில் இன்னும் ஆழமான தக்கங்களை ஏற்படுத்தியது.

கலீர் கிப்ரானின் (ரூமியா?) 'உன்னுடைய குழந்தை உன்னுடையதல்ல, உன் வழியாக வந்தது' என்ற வரிகளைச் சொன்னார், உடலும் மனமும் சிலிர்த்துக்கொண்டன.

அபி லா.சா.ராவின் எழுத்துக்களில் பெரும் அபிமானம் கொண்டவர். இளமையில் அவரைச் சந்திக்கையில் எப்படி அவருடைய எழுத்துகள் காலம் தாண்டி நின்றுகொண்டிருக்கும் என்று சொன்ன நிகழ்வைக் குறிப்பிட்டார். அதைக் கேட்டு லா.சா.ரா. மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் சொன்னார். நானும் அதையே அவருடைய கவிதைகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டேன். எங்கோ ஒருவன் ஐநூறு வருடங்கள் கழித்து அபியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருப்பான், வரலாறு தன்னை மீண்டும் நிகழ்த்திக்கொள்ளும் என்று எண்ணிக்கொண்டேன்.

கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த ஆரம்ப நாட்கள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். எழுதியவற்றை நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்துகொண்டிருந்ததையும், புதிதாக திருமணமாகி, தன் மனைவி ஏன் உங்கள் கவிதைகளைத் தொகுப்பாக வெளியிடக்கூடாது என்று கேட்டதையும் சொன்னார். 

"அப்துல் ரஹ்மான்லாம் தொகுப்பு போடுகிறாரே, நீங்கள் ஏன் போடக்கூடாது?".

"புதிதாக கல்யாணம் செய்துகொண்ட மனைவியின் வார்த்தைகள் எத்தனை சக்தி வாய்ந்தவை!".

கவிஞர் மீராவும், அப்துல் ரஹ்மானும் அவருடைய கவிதைகளை வாசித்துவிட்டு சிலாகித்ததையும், மீரா 'அன்னம் பதிப்பகம்' என்ற ஒன்றை அவர்களுடைய கவிதைகளை வெளியிடுவதற்கென்றே தொடங்கியதாகவும் சொன்னார் ('மௌனத்தின் நாவுகள்' தொகுப்பு). திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் தன்னை மேற்பார்வை செய்ய அவர்கள் கேட்டுக்கொண்டதைச் சொன்னார். 

ஜெயமோகன் தன்னுடைய முதல் தொகுப்பின் ('அந்தர நடை') கவிதைகளை வாசித்துவிட்டு நிராகரிக்கும் தோரணையுடன் எழுதியதையும் ('சொல்லப்படாதவற்றின் கவி'), பிறகு சுந்தர ராமசாமியின் வீட்டில் அவருடைய 'அந்தி' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கவிதைகளை வாசித்துவிட்டு தன் எண்ணங்களை மாற்றிக்கொண்டு மீண்டும் ஒரு கட்டுரை எழுதியதையும் குறிப்பிட்டார் ('அபியின் அருவக்கவியுலகு'). அபி குறித்து ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரைகளை சமீபத்தில் மீண்டும் வாசித்தேன், அவருடனான உரையாடலுக்கு மிகவும் உதவியது.

உரையாடல் சமகாலக் கவிஞர்களை நோக்கித் திரும்பியது. யாரையெல்லாம் வாசிக்கிறீர்கள் என்று கேட்டேன். ஆனந்த்குமாரின் 'டிப் டிப் டிப்' தொகுப்பை வைத்திருந்தார். அதிலிருந்து சில வரிகளை வாசித்துக்காட்டி சிலாகித்துப் பேசினார். கவிஞர் மதாரின் 'வெயில் பறந்தது' வாசித்திருக்கிறார். என்னிடம் அளிக்கப்படும் தொகுப்புகளை வாசிக்கிறேன் என்றார்.

மேசையிலிருந்த புத்தகங்களைக் காண்பித்து "இதையெல்லாம் எப்போது வாசிப்பேன் என்று தெரியவில்லை, எல்லாம் அரியர்ஸ்ல இருக்கு" என்றார்.

ஜெயகாந்தன் எழுதாமல் இருந்த நிலையைச் சொல்லி "நீங்கள் ஏன் இப்போது எதையும் எழுதுவதில்லை?" என்று கேட்டேன். "அப்போது நிகழ்ந்தது எழுதினேன், இப்போது நின்றுவிட்டது விட்டுவிட்டேன்" என்று பூடகமாக பதில் சொன்னார்.

இரண்டு மணிநேரங்கள் கடந்ததை நான் உணரவில்லை, கடிகாரம் 1.30 தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. மதிய உணவுக்கு அருகில் இருந்த ஒரு சைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன். வீட்டிலிருப்பவர்கள் கிராமத்தில் இறப்பு நிகழ்வுக்குச் சென்றிருந்தார்கள். இடையில் இருமுறை அழைத்து விசாரித்துக்கொண்டார்கள். என்னுடம் பேசிக்கொண்டே மருந்துகளை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார். 

அறையை விட்டு நீங்குகையில் திறந்த மாடியில் எங்கு அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பேன் என்று சொன்னார். என் மனதுக்கு நெருக்கமான கவிஞரை அவருடைய இடத்திலேயே சந்திப்பது மனதில் மிகுந்த எழுச்சியை அளித்தது. ஜெயமோகன் தன்னுடைய அறையை "கவிஞனுக்கே உரிய அறை" என்று சொன்னதை நினைவுகூர்ந்தார். அவருடைய கவிதைத் தொகுப்பில் கையெழுத்து பெற்றுக்கொண்டேன். திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு சிறுநூல் ஒன்றையும், 'அந்தர கவி' என்ற அவருடைய 80 வயதை ஒட்டி விஷ்ணுபுரம் குழுமத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு நூல் ஒன்றையும் பரிசளித்தார்.

காரை அருகிலிருந்த ஒரு சிறு தெருவில் நிறுத்திவிட்டு உணவகத்துக்குள் சென்றோம், காலியிடங்களில்லாமல் நிரம்பியிருந்தது. "கார் வைத்திருப்பதில், குறிப்பாக நகரங்களில் இயக்குவதில் அசௌகர்யங்களே அதிகம்" என்றார். குளிர்பதன அறையில் அமர்ந்து மீண்டும் உரையாடலைத் தொடங்கினோம். எளிய சைவ உணவுகளையே விரும்புவதாகச் சொன்னார். அருகில் உணவருந்திய ஒருவர் எங்களிருவரையும் மிகவும் விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். 

தன்னுடைய மனைவி மிகச் சிறப்பாக பிரியாணி தயார் செய்வார் என்றும், மருமகளும் நன்றாகச் சமைப்பார் என்றும் சொன்னார். அடுத்த முறை வருகையில் நிச்சயம் பிரியாணி விருந்து உண்டு என்று உறுதியளித்தார். "நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்களா?".

அவரை மீண்டும் வீட்டில் விட்டுவிட்டு கிளம்ப ஆயத்தமானேன். இந்த சந்திப்பை குறித்து எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.

"நீங்க வண்டியத் திருப்பும் வரையில் நான் இங்குதான் இருப்பேன்".

காரை தண்ணீர் நிரம்பிய அந்த சிறிய தெருவில் சிரமத்துடன் திருப்பிவிட்டு விடைபெற்றேன். சாலையை நெருங்கும் முன் பல சிறிய தெருக்களைக் கடக்க நேரிட்டது. அவருடைய 'மாலை - சிறுதெருக்கள்' கவிதையின் 'சிறியதெருக்களின் வேளை அது, அடக்கமாய் மகிழ அவைகளுக்குத்தான் தெரியும்' வரிகள் நினைவிலோடின.

நகர்நீங்கி அகலமான சேலம் - கரூர் புறச் சாலையில் பயணித்து ஐந்து மணிக்கு வீடு திரும்பினேன். அவரை அழைத்துச் சொன்னேன், "மிகவும் மகிழ்ச்சி" என்றார். என்னுடைய அபிமானக் கவியை நேரில் சந்தித்துவிட்ட நிறைவு மனம் முழுக்க நிறைந்திருந்தது. மீண்டும் இதுபோன்ற ஒருநாள் என் வாழ்வில் அமையாது என்றும் தோன்றியது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை