சொல்வனம் இதழ், மதார் கவிதைகள் - ஒரு வாசிப்பு

                                                

கவிஞர் மதாரின் ஆறு கவிதைகள் 'சொல்வனம்' இதழில் வெளிவந்துள்ளன. அது குறித்த ஒரு சிறிய குறிப்பு,

1. பலூனுக்குள் ஒரு பலூன்

தந்தையாகப்போகும் ஒருவன் முதன்முதலில் தன் குழந்தையின் இதயத் துடிப்பைக் காண்பது என்பது வாழ்வின் சிறந்த அனுபவங்களில் ஒன்று. அந்த அனுபவம் அதீத நாடகத்தன்மை இல்லாமல், உணர்ச்சிகரம் இல்லாமல் மதாருக்கே உரிய முறையில் விலகிய ஆனால் ஒரு வெள்ளந்தியான பார்வையில் வெளிப்படுகிறது. இந்தக் கவிதையில் மதார் என்ற முத்திரை ஒன்று உள்ளது.

2. முழுதாகக் கரைந்த ரப்பர்

கவிதைக்கு வரையறைகளோ, அளவுகோள்களோ கிடையாது. அது சுதந்திரமான ஒரு மொழி வெளிப்பாடு என்பதற்கு மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு இந்தக் கவிதை. ஒரு அன்றாடக் காட்சி சற்று கூர்ந்துநோக்கினால் எத்தனை சாத்தியங்களை நமக்கு அளிக்கும் என்று இந்தக் கவிதை உணர்த்திவிடுகிறது. ஆனால் அது கவிஞர்களுக்கு மட்டுமே வாய்க்கும் ஒரு பார்வை. மரம் என்பது நிலையான ஒன்று என்ற கோணத்தில் தத்துவார்த்தமாகவும் இதை வாசிக்க சாத்தியம் உள்ளது.

3. ஒரு தீபம்

இந்தக் கவிதையில் என்னை பாதித்த ஒன்று நான் இதுவரை எண்ணிப்பார்க்காத ஒரு இடையீடு. தீபத்தின் முன் ஒரு இறகு அசைவதை நான் இதுவரை கற்பனை செய்ததே இல்லை, மனம் மலர்ந்துவிடுகிறது. 

4. ஏமாற்றுப் பேர்வழி

இன்னொரு எடையற்ற அழகிய ஒரு கவிதை. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது, "வாழ்த்துக்கள் மதார்".

5. அழுகை

குழந்தையொன்று அழுதுகொண்டிருக்கையிலேயே சிரிக்க முயல்வதை எண்ணிக்கொள்கிறேன், ஒரு புன்னகை உதடுகளில் வந்துவிடுகிறது.

6. அழகான வெள்ளை இறகு

இந்தக் கவிதை சற்று அருவமான ஒரு தளத்திற்கு செல்கிறது. கண்களில் தூசு என்பதை நம் மனதில் எண்ணங்களில் ஏற்படும் தடைகள் அல்லது நமது பயணத்துக்கான சிக்கல்கள் என்று வாசிக்கலாமா? அதிலிருந்து நம்மை ஒன்று மீட்டுக்கொண்டே இருக்கிறது, கடவுளோ பிரபஞ்சமோ. மரணத்தை ஒரு வெள்ளை இறகாக வாசிப்பது மிகுந்த எழுச்சியைத் தருகிறது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை