கரூர், தமிழகத்தின் மையநிலம். நான் என்னுடைய 29வது வயது வரை கரூர் நகரை நீங்கியதில்லை. கல்லூரிப் படிப்பிற்காக ஐந்து வருடங்கள் திருச்சி நகருக்கு இரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன், பின் கரூரிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்பத் துறையில் வேலை, வெளியுலக அனுபவம் குறைவு, மேலும் ஆர்வமில்லை என்று சொன்னாலும் மிகையல்ல. கரூர் நகர் என்று இங்கு நான் குறிப்பிட்டாலும், என்னுடைய ஊர் கரூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் கிழக்கில் பன்னிரண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் 'காளிபாளையம்' எனும் சிற்றூர். 30 வயது தொட்டதும் ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தில் வேலை பெற்றுக்கொண்டு கரூர் நகரை நீங்கி சென்னையில் நான்கு வருடங்கள் வசித்தேன். ஒரு குறிப்பிடத்தக்க விஷயம், நான் இதுவரை கரூர் நகரை வரைபடங்களிலோ, வழிகாடிகளிலோ பார்த்த நினைவே இல்லை. இந்தப் பதிவை எழுதுவதற்காக தேடுகையில் இதை உணர்ந்தேன்....