Dont' Look Up, திரைப்படம் - ஒரு பார்வை
பூமியை நோக்கி எட்டு கிலேமீட்டர் அகலமுள்ள ஒரு வால் நட்சத்திரம் வந்துகொண்டிருக்கிறது, அதன் தாக்கம் பூமியையே அழிக்கும் செயலாக இருக்கப்போகிறது. இந்த ஒரு வரியைக் கண்டதும் வழக்கமான ஹாலிவுட் சாகசப் படம் என்ற எண்ணம்தானே வருகிறது? இந்தத் திரைப்படத்தில் டிகாப்ரியோ, ஜெனிஃபர் லாரன்ஸ், மெரில் ஸ்ட்ரிப், கேட் பிலான்செட், ஜோனா ஹில் என ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆல்லது பரிந்துரைக்கப்பட்ட தேர்ந்த நட்சத்திரங்கள் இருந்தால்? இதையே ஆடம் மெக்கே இயக்கினால்? அதுதான் Don't Look Up திரைப்படம்.
பூமியை நெருங்கிவிட்ட பிரம்மாண்ட வால் நட்சத்திரத்தை மிக்சிகன் ஸ்டேட் யுனிவெர்சிட்டியின் முனைவர் பட்ட ஆய்வு மாணவி கேட் கண்டுபிடிக்கிறாள். அவளுடைய பேராசிரியர் மிண்டியுடன் இணைந்து இந்தச் செய்தியை கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்துக்குத் தெரிவிக்கிறார்கள். பின் இந்தச் செய்தியை அமெரிக்க அதிபருக்கு அறிவிக்க வெள்ளை மாளிகைக்கு வரவழைக்கப்படுகிறார்கள். இங்கிருந்து திரைப்படம் நம்மை இறுக்கிப் பிடித்துக்கொள்கிறது.
அமெரிக்க அதிபரும் அங்கிருக்கும் அலுவலர்களும் இந்தச் செய்தியை மிக எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள், கேட்டும், மிண்டியும் கேலியும் செய்யப்படுகிறார்கள். வெள்ளை மாளிகையால் நிராகரிக்கப்பட்டு ஊடகங்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவிக்க முனைகிறார்கள். அங்கும் அவர்களுக்கு அவமானமும், நிராகரிப்பும் நிகழ்கிறது. ஒட்டுமொத்தமாக சுரணையற்ற மனிதர்களையே இரு அறிவியலாளர்களும் அரசாங்கத்திலும், ஊடகங்களிலும் எதிர்கொள்கிறார்கள்.
அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் இத்தனை மெத்தனமான அரசாங்கமும், ஊடங்களும் இருக்குமா என்று நாம் வியப்பை அடைகிறோம். இது திரைப்படத்திற்காக மிகையாகத் திரிக்கப்பட்ட உண்மை மட்டுமல்ல என்று சற்று சிந்தித்தால் புரிந்துகொள்ளலாம். ஆடம் மெக்கே இந்தத் திரைப்படத்தை புவி வெப்பமயமாதலுக்கான உருவகமாக உருவாக்கியிருக்கிறார். ஒரு இடதுசாரியின் குரலாகவும் இந்தப் படத்தைக் கருதலாம். முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் புவி வெப்பமயமாதல் எனும் கருத்து எப்படி அசட்டை செய்யப்பட்டது என்பதை ஒட்டுமொத்த உலகமே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது.
இருண்ட நகைச்சுவை என்ற வகைமையில் அடங்கும் இந்தத் திரைப்படம் நம்மை அதே சமயத்தில் அச்சத்துடன் முடிவை எதிர்நோக்கி படபடப்புடன் காத்திருக்கவும் வைக்கிறது. டிகாப்ரியோவும், ஜென்ஃபர் லாரன்ஸும் வெள்ளைமாளிகையில் அதிபரைச் சந்திக்கக் காத்திருக்கையில் அவர்களிடம் அங்கு இலவசமாகக் கிடைக்கும் திண்பண்டங்களை உயர் அதிகாரி ஒருவர் இருபது டாலர்களுக்கு விற்கிறார். எளிய மனிதர்கள் அரசாங்கத்தால் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கான ஒரு குறியீடாகக் இதைக் கருதலாம்.
வால் நட்சத்திரம் பூமியை மோதி மெல்ல அழிவு பரவுகையில், டிகாப்ரியோ தன் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் இரவுணவை உண்டுகொண்டிருக்கிறார். அவர்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு இவ்வளவு சுவையான உணவு எத்தனை எளிதாகக் கிடைக்கிறது என்ற உண்மையைப் பேசுகிறார்கள். தம்முடைய இறுதிக் கணங்களை நெருங்கிவிட்டோம் என்று அறிந்தாலும் அவர்கள் அதை வெளிக்காட்டாமலும், நம்ப முடியாமலும் இயல்பாக இருக்க முயல்கிறார்கள். மெல்ல சுவர் உடைந்து அழிவில் இணைகிறார்கள். திரைப்படத்தின் அதி அற்புதமான ஒரு காட்சி இது.
ஜெயமோகனின் அறிவியல் புனைக்கதையான் 'விசும்பு', அதன் இறுதியில் ஒரு நிகழ்வைச் சொல்கிறது. வலசைப் பறவைகள் ஒரு அறிவியல் சோதனையால் திசைமாறி வேறொரு இடத்தை அடைந்து திகைக்கின்றன. அதே வேளையில் ஒரு கடற்கரையில் இதுவரை கணக்கிடைக்காத மீன் வகைகள் தோன்றுகின்றன. உலகின் நிகழ்வுகள் எப்படி நுண்ணிய இழையால் பிணையப்பட்டுள்ளன என்று உணர்த்தும் சிறுகதை இது.
புவி வெப்பமயமாதல் என்பதன் விளைவுகளை நான் தனிப்பட்ட ரீதியாக உணர்ந்துகொண்டிருக்கிறேன். இது அமெரிக்காவில் நான் கழிக்கும் ஒன்பதாவது குளிர்காலம். இந்தக் குளிர்காலம் வழக்கமான அளவைவிட பத்திலிருந்து இருபது ஃபாரன்ஹீட் அளவிற்கு உயர்ந்த வெப்பநிலையுடன் உள்ளது. பிப்ரவரி மாதம் குளிர்காலத்தின் உச்ச மாதம், கடும் குளிரும் பனிப்பொழிவும் சாதரணமாக நிகழும். ஆனால் சூழல் ஒரு வசந்தகாலத்தின் தொடக்க நாட்களைப் போல காட்சியளிக்கிறது. இதை எழுதும் இன்று வெப்பநிலை அறுபது டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவைத் தொடுகிறது. துருக்கியில் கடும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தெரிகிறது.
இவையெல்லாமே இயற்கை சமநிலை இழந்ததன் விளைவுதான் என்பதை நம்மைச் சுற்றியுள்ள தாவரங்களும், பறவைகளும், விலங்குகளும் உணர்ந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை. மனிதர்களான நாம் உணர்ந்துவிட்டோமா எனும் கேள்வியை இந்தத் திரைப்படம் நம்மிடம் அழுத்தமாக முன்வைக்கிறது.
Comments
Post a Comment