நண்பகல் நேரத்து மயக்கம், திரைப்படம் - ஒரு பார்வை

                                         

ஒரு நெடிய பயணத்துக்குப் பின் பகல் நேரத்தில் ஒரு சிற்றுந்தில் ஊர் திரும்புகிறீர்கள். உங்களுக்குப் பரிச்சயமில்லாத ஒரு நிலத்தினூடாக அந்தப் பயணம் அமைகிறது. பயணக் களைப்பு, சற்று கண்ணயர்கிறோம். கணநேர உறக்கமாக இருந்தாலும், விசித்திரக் கனவுகள் தோன்றி நம்மைத் திகைக்கவைக்கின்றன. அல்லது இப்படி எடுத்துக்கொள்வோம் - பயணங்களில் நாம் காணும் நிலப்பகுதியோ, விலங்குகளோ, மனிதர்களோ நம்முடைய அறிதலுக்கும் அனுபவத்துக்குமான எல்லைகளுக்கு அப்பாலுள்ளவை. அந்த அனுபவங்கள் நமக்கு ஒரு வியப்பையும், புதிய அறிதல்களையும் அளிக்கின்றன. அதன் நீட்சியாக நாம் பயணங்களில் கடக்கும் மனிதர்களின் இருப்பிடத்தை, வாழ்வை, எண்ணங்களை கற்பனைகளில் வாழ்ந்துபார்க்கிறோம். 

இலக்கிய வடிவங்களில் ஒரு சிறுகதையாகவோ, நாவலாகவோ அல்லது ஒரு கவிதையாகவோ வடிவமெடுத்திருக்கவேண்டிய ஒரு அனுபவம் அல்லது கருதுகோள் இது. அனால், இதையே ஒரு உயர்ந்த செவ்வியல் படைப்பாக,  'நண்பகல் நேரத்து மயக்கம்' எனும் பெயரில் திரைவடிவம் அளித்திருக்கிறார் 'அங்காமாலி டைரிஸ்' புகழ் லொஜோ ஜோஸ் பெளிச்சேரி. இதில் மம்முட்டி எனும் தேர்ந்த நடிகர் இருக்கிறார் என்பது இன்னொரு இனிய ஆச்சரியம். நெட்ப்ளிஃஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் எனும் இரட்டை மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வேறுபாடு ஒரே திரைப்படத்தில் இரு மொழிகளும் இணையாக வெளிப்படுகின்றன. இதை மலையாளம் அறியாத ஒரு தமிழ்ப் பார்வையாளனால் எந்தவித மொழிக் குழப்பங்களும் இல்லாமல் பார்க்க இயலும். கதையில் ஒரு மலையாளக் குடும்பம் வேளாங்கண்ணி சென்றுவிட்டு கேரளா திரும்புகிறார்கள். பயணத்தில் பழனி அருகில் பாப்பநாய்க்கன்பட்டி எனும் சிற்றூரில் ஜேம்ஸ் (மம்முட்டி) இறங்கிவிடுகிறான். சுந்தரம் எனும் கணவனை இழந்த ஒரு இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து சுந்தரமாகவே நடந்துகொள்கிறான். சரளமாகத் தமிழ் பேசுகிறான், சுந்தரம் செய்யும் அனைத்துச் செயல்களையும் அவன் செய்கிறான். ஊரிலுள்ளவர்கள் திகைத்துவிடுகிறார்கள். ஏனைய பயணிகள் அவனில்லாமல் ஊருக்குத் திரும்ப இயலாத சூழல். 

ஜேம்ஸின் மனைவியும், மகனும் இந்த விசித்திர அனுபவங்களால் செய்வதறியாமல் திகைக்கிறார்கள். இப்படி ஒரு அனுபவத்துக்குள் எளிய கிராமத்து மனிதர்களின் எதிர்வினை திரைப்படத்தின் காட்சிகளில் மிகையாகாமல் வெளிப்பட்டுள்ளது. அத்தனை இயல்பான காட்சிகள், தேர்ந்த நடிப்பு, படம் முழுக்க நகைச்சுவை இழையோடுகிறது.

ஒளிப்பதிவாளர் ஒரு இயக்குநரின் கண்களைப் போன்றவர் (தேனி ஈஸ்வர்). இந்தத் திரைப்படத்தில் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு உச்ச அனுபவத்தை அளிக்கிறது. அத்தனை நுணுக்கமான காட்சிகள். குறுகிய தெருக்களில், வீடுகளில் காட்சிகள் தத்ரூபமாக நம்முன் விரிக்கிறது. பல காட்சிகளை ஒரு ஓவியமாகவே எண்ணித் திகைத்தேன். பச்சை நிறம் கவிந்த சோளக்காடும், பறவைகளின் ஒலியும், மெல்லிய நீல நிறம் முயங்கும் சுண்ணாம்புச் சுவர்களால் ஆன வீடுகளும் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. படம் முழுக்க பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பிண்ணனியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நம்முடைய சிற்றூர்களில், அதிலும் பகல் பொழுதுகளில் ஆழ்ந்த தனிமை நிகழ்வதை நான் உணர்ந்திருக்கிறேன். அந்தத் தனிமையைப் போக்க தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒலி(ளி)த்துக்கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறேன்.

இந்தத் திரைப்படத்தின் காட்சி அனுபவங்களை, பார்வையாளனாக அது எனக்குள் நிகழ்த்தியவற்றை முடிந்தளவு இங்கு கடத்த முயன்றிருக்கிறேன். பல காட்சிகள் குறியீட்டுத்தன்மைகொண்டவையாக இருந்தன. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் ஜேம்ஸின் கனவா? அது உண்மையாகவே நிகழ்கிறதா? நாம் நமக்கான வாழ்வை தேர்ந்தெடுத்துக்கொள்கிறோமா அல்லது சூழல் அளிக்கும் ஒன்றை ஏற்றுக்கொள்கிறோமா? 'எல்லாம் மாயை' என்று சொல்கிறது வேதாந்தம். இங்கு ஜேம்ஸின் அனுபவமும் அதை ஒத்ததா? ஆழமான கேள்விகளை, கற்பனைகளை, தத்துவார்த்த விசாரங்களை இந்தத் திரைப்படம் நம்மில் கிளர்த்துகிறது. சமீபத்தில் 'குதிரைவால்' திரைப்படத்துக்குப் பிறகு நான் கண்ட திரைப்படங்களில் மிகச் சிறந்த ஒரு படைப்பு என்றே இதைக் கருதுகிறேன்.

படத்தில் ஒரு கண்தெரியாத கிழவி பாத்திரம் வருகிறது. அவளுக்கு ஒரு அன்னியன் தன்னுடைய வீட்டில் விசித்திரமாக நுழைவது எவ்வகையிலும் ஒரு பொருட்டாகவே இல்லை, இயல்பாக எடுத்துக்கொள்கிறாள். தன்னுடைய பேரன் என்றே எண்ணுகிறாள். ஒரே நிகழ்வு கண்பார்வையில்லாத அவளுக்கு இயல்பாக இருப்பதும், மற்றவர்களுக்கு திகைப்பாக மாறுவதும் ஒரு ஆழமான முரண்பாடு. திரைப்படத்தின் நுணுக்கங்களுக்கும், குறியீட்டுத்தன்மைக்கும் இதை ஒரு எடுத்துக்காட்டாக முன்வைக்கிறேன்.

படத்தில் உள்ள சிற்றூர் என்னுடைய ஊரையும் மனிதர்களையும் நினைவுபடுத்துகிறது. ஒரு மறக்க இயலாத அனுபவமாக இந்தத் திரைப்படம் மாறியதற்கு இந்தப் பரிச்சயம் இன்னும் உதவுகிறது. நம்முடைய மண்ணிலும், மனிதர்களிலும் எத்தனை கதைகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. அவையெல்லாமே இதுபோன்ற உயர்ந்த படைப்புகளாக, காட்சியனுபவமாக வெளிப்படவேண்டும் என்று பிரயாசைகொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை