'ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்', சிறுகதை - வாசிப்பு
எழுத்தாளர் ஆதவனின் படைப்புகளை நான் இதுவரை வாசித்ததில்லை. நண்பர்களுடனான மதாந்திர இலக்கியக் கூடுகைகளில் ஒரு சிறுகதை குறித்த வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். அதற்காக ஆதவனின் 'ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்' என்ற சிறுகதையை நண்பர் மதன் முன்வைத்தார். சிறுகதை குறித்த எண்ணங்களைத் தொகுத்துக்கொள்வதற்காக இந்தப் பதிவு.
வாழ்வின் முதிர் வயதுப் பருவத்தில் இருக்கும் ஒரு மனிதர் தன்னுடைய அன்றாட அனுபவங்களைக் கூர்மையாக விவரித்துச் சொல்வதில் இந்தக் கதை விரிகிறது. நாகராஜன் டெல்லியில் வாழும் ஒரு தமிழர். மனைவியை இழந்து தன்னுடைய மகனின் வீட்டில் மருமகள் பேத்தி ஆகியோருடன் வாழ்கிறார். மனைவியின் இழப்பை முழுதாக உணர்கிறார். மகன் மற்றும் மருமகளின் மேல் மோசமான அபிப்பிராயங்களையே கொண்டிருக்கிறார். அவர் அன்றாடம் தெருவில் இறங்குகையிலும் ஒரு பஞ்சாபி இளைஞன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அவரை அச்சுறுத்தும் வகையில் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான்.
இந்தக் கதையின் நிறைந்த வாசிப்பனுபவம் என்பது கதாப்பாத்திரங்களின் அகப்போக்குகளையும் மன லயங்களையும் விரிவாக அலசுவதில் உள்ளது. தன்னை மோத மோட்டார் சைக்கிளில் வரும் பஞ்சாபி இளைஞன், சலூனில் பழங்களை கத்தியால் வெட்டி உண்ணும் இன்னொரு இளைஞன், சினிமாப் பத்திரிகையை வாசிக்கும் முதிர் இளைஞன், நடுத்தர வயது முடி திருத்துனன், மகன், மருமகள், வீட்டுக்கு விருந்தினராக வரும் மோட்வானி தம்பதிகள், மனைவி கல்யாணி என ஒவ்வொரு பாத்திரங்களின் பிண்ணனிகளையும் நாகராஜன் எனும் அந்தக் கிழவரின் மன ஓட்டங்களாக வார்த்தைகளாக்கி வாசகனிடம் கடத்துகிறார் எழுத்தாளர்.
வாழ்வின் அனைத்து பருவங்களின் மனிதர்களும் இந்தக் கதையில் வருகிறார்கள். குழந்தையிலிருந்து கிழவர் வரை ஒரு நீண்ட கோடாக அது விரிகிறது. வாழ்வின் முதிர் பருவத்திலிருப்பவர்கள், அதிலும் குறிப்பாக தனக்கான அழ்ந்த சுய அபிப்பிராயங்கள் கொண்டிருப்பவர்கள், ஒருவகை அறிவார்ந்தவர்களாக தன்னை எண்ணுபவர்கள் எல்லாவற்றிலிமிருந்து விலகியே இருக்கிறார்கள் அல்லது விலக்கப்படுகிறார்கள். அவர்கள் கடந்தகால ஏக்கம் கொண்டவர்களாக, சமகாலச் சூழலின் மேல் ஒரு வெறுமை உடையவர்களாகவே இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்தக் கதையில் நாகராஜன் எனும் கதாப்பத்திரம் இந்த வரையறைகளுக்குள் பொருந்துகிறது.
கிழவரின் எதிர்வினைகளாக மட்டுமே வெளிப்படும் சாத்தியங்கள்கொண்ட இந்தக் கதை இலக்கியம் எனும் வரையறைக்குள் ஏன் வருகிறது? பாத்திரங்களின் கூர்ந்த அகப்போக்குகளை விவரித்த விதம், நிகழ்வுகளின் மேல் தனக்கான ஒவ்வாமைகளை விவரித்தாலும், விரிந்த எண்ண ஓட்டங்களின்மூலம் வாசகனின் ஊகத்திற்கு விடப்படும் தன்மை ஆகியவற்றைக் கருதலாம்.
நாகராஜன் கடந்த காலத்தில் தன்னுடைய கட்டுப்பாடுகளில் இருந்த செயல்களைக்கூட தனதாக்கிக்கொள்ளாமல் சுயநலமாக இருந்திருக்கிறார். அதற்கான குற்றஉணர்வுகளும் அவரிடம் உள்ளது. தன்னுடைய இருப்பு குடும்பம் எனும் சூழலில் நிராகரிக்கப்படுகிறது என்று தெரிந்ததும் அது அகங்காரமாக மோட்வானி குடும்பத்துடனான ஒரு உரையாடலில் வெளிப்படுகிறது. தனக்கான முடிதிருந்துனனின்மேல் நல்ல எண்ணங்கள் இருந்தும் அவன் இளைஞர்களால் தாக்கப்படுகையில் எதிரிவினையாற்றாமல் வெளியேறிவிடுகிறார்.
சலூன் கடைகள் என்பவை ஒருவகை கடந்தகால ஏக்கங்களுக்கான குறியீடுகள். நிற்காமல் ஒழுகும் ஆற்றின் குறுக்காக காலத்தின் சாட்சியாக நின்றுகொண்டிருக்கும் சிறிய பாறைகளாக அவை எங்கும் காணக்கிடைக்கின்றன. கரூரின் மக்கள் சந்தடி மிகுந்த சந்தையின் நடுவில் நிறமழிந்த 'நியூ சலூன்' என்ற பதாகையுடன்தான் என்னுடைய முடிதிருத்தும் கடை இன்னும் உள்ளது. நாகராஜனுக்கான முடிதிருத்துதல் முடிகையில், அவர் 'அதற்குள் முடிந்துவிட்டதா?' என்று விசனப்படுகிறார். கதையில் அவர் கடந்தகால விழுமியங்களால் பீடிக்கப்பட்டிருப்பதை குறிப்புணர்த்தும் ஒரு பகுதி இது. வாசகனாக என்னை மிகவும் பாதித்த ஒரு பகுதி இது.
நாகராஜனின் மேல் நமக்கு என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன? ஒருவகை வெறுப்பு, பின் அவருடைய தனிமையின் மேல் ஒரு கரிசனம் ஆகிய கலவையான உணர்வுகளே ஏற்படுகின்றன. இந்தக் கதையை முதியவர்களின் மேல் சமுதாயம் வெளிப்படுத்தும் வன்முறையாக மட்டுமே அணுகவேண்டுமா? இல்லை. கதையில் நாகராஜனின் எண்ண ஓட்டங்களினூடாக ஒரு தனிமை இழையோடுகிறது. அது மனதில் ஆழ்ந்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. நாகராஜனின் மேல் நமக்கு ஏற்படும் அனுதாபம், நம்மையே அவராகக் கற்பனை செய்துகொள்வதால் வருகிறது. மனைவியை இழந்துவிட்டு அவர் வாழும் ஒரு வாழ்வு எத்தனை கொடியது எனும் எண்ணம் ஏற்படுகிறது.
முதுமை என்பது நம்மால் தவிர்க்க இயலாதது. அதை ஒரு இனிய பருவமாக மாற்றிக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் எனும் கேள்வியை இந்தக் கதை நம் மனதில் விதைக்கிறது. நாம் நாகராஜனிலிருந்து எப்படி விலகியிருக்கிறோம் அல்லது அவருடைய பாத்திரத்தில் நம்மை எவ்வளவு அடையாளம் கண்டுகொள்கிறோம் என்பதில்தான் இந்தச் சிறுகதையின் மேன்மை உள்ளது.
Comments
Post a Comment