ஃப்ளமிங்கோ சிறுகதை, காளிப்ரஸாத் - வனம் இதழ்

                                                     

எழுத்தாளர் காளிப்ரஸாத் வனம் இணைய இதழில் ஃப்ளமிங்கோ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். அவருடைய சில சிறுகதைகளை இணைய இதழ்களில் வாசித்திருக்கிறேன். தனக்கே உரிய ஒரு சொல்லல் முறையைக் கொண்டிருக்கிறார். ஒரு எழுத்தாளனின் சில கதைகளை வாசித்திருந்தாலும் வாசகனாக மனம் ஒரு பரிச்சய உணர்வை அடைகிறது, அவனுடைய அடுத்த படைப்புகளை வாசிக்கத் தூண்டுகிறது. இந்தத் தூண்டலே ஃப்ளமிங்கோ சிறுகதையை வாசிக்க வைத்தது.

மெல்லிய பகடி கலந்த நடையில் எளிய சினிமாப் பாடல்களுக்குக் கூட உணர்ச்சிவசப்படும் கதாப்பாதிரம் ஒன்றின் பார்வையில் சிறுகதை விரிகிறது. ஃப்ளமிங்கோ பறவை பொதுவாக ஒரே ஒரு முட்டையை மட்டுமே ஈளும் வழக்கமுடையது. இந்தப் பறவையை காளிப்ரஸாத் ஒரு படிமமாகப் பயன்படுத்தியிருக்கிறார். சிறுகதையில் மிக அழுத்தமான சூழலிலும் நேர்மறையாக இயல்பாக வெளிப்படும் பெண்கள் சிலர் வருகிறார்கள், அவர்களைச் சுற்றி சிறுகதைக்கான களத்தை விரித்திருக்கிறார் எழுத்தாளர்.

பெற்றோர் எய்ட்ஸ் நோயாளிகள் என்று தெரிந்தும் பாபி மகிழ்வானவளாக, ஃப்ளமிங்கோ பறவையின் முட்டை ஒன்றைப் பேணுகிறாள். தன் வீட்டின் வேலைக்காரனை ஒரு சகோதரனைப் போல தாலாட்டி வளர்க்கிறாள் தேன்மொழி. தேன்மொழியின் அன்னை காசநோயில் மறைந்த வேலைக்காரியின் மகனான கதைசொல்லியை பாலூட்டி வளர்க்கிறாள். தேன்மொழியின் மகனுக்காக கதைசொல்லி ஆந்திராவில் பெண்பார்க்கச் செல்கிறான். பெற்றோர் தன்னுடைய ஈட்டுதலை நம்பியிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இயல்பாக "பெரிதாக பதில் எதிர்பார்க்கதீர்கள்" என்று கூறும் ஒரு பெண் வருகிறாள், அவளும் ஃபளமிங்கோப் பறவைகள் சூழவே இருக்கிறாள். 

இலக்கியத்தில் நம் நினைவுகளில் என்றும் அகலாத பல பெண் கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள். இந்தச் சிறுகதையில் இருப்பதுபோல் பெண்களால் இப்படிக் கடினமான சூழல்களைக் கையாள இயலுமா, அல்லது இது மிகைப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. தனிப்பட்ட வாழ்வியல் அனுபவத்தில் பெண்கள் இத்தகையவர்கள் என்றே சொல்லத் துணிவேன். இயற்கையாகவே கடினமான சூழல்களைத் தாங்கும் மன அமைப்பும், முதிர்ச்சியும் அவர்களுக்கு வாய்க்கிறதா என்ற கேள்வி இங்கு நியாயமானது.  

சிறுகதையின் கதாப்பாத்திரம் கடைசியில் இப்படிச் சொல்கிறது,

"அம்மாம். இதோட நாலு கண்ணுல பட்டுடிச்சி".

இங்கு குறிப்பிடப்படும் நான்கு ஃப்ளமிங்கோ பறவைகளும் பெண்களையே குறிக்கின்றன. ஒரு வாசகனாக எனக்கும் ஃப்ளமிங்கோ பறவைகள் கண்களில் தென்பட்டுக்கொண்டேதானிருக்கிறார்கள், அல்லது பல சூழல்களில் ஃப்ளமிங்கோப் பறவைகளாவே தோற்றமளிக்கிறார்கள். நானும் இந்தக் கதைசொல்லியின் கடைசி வார்த்தைகளை ஒரு முறை சொல்லிக்கொள்கிறேன் - எண்கள் மாறுபடலாம் உணர்வுகள் ஒன்றுதான்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை