செல்க 2022, வருக 2023
இன்னொரு புதிய வருடத்தில் நுழைகிறேன். பிரக்ஞையில் 2023 எனும் எண்ணின் ஆதிக்கம் தொடங்கியிருக்கும் இந்த வேளையில், 2022ம் வருடத்தையும் திரும்பிப்ப் பார்க்க விரும்புகிறேன். 2022 இதுவரை நான் கடந்து வந்த வருடங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வாசிப்பு எனும் அடித்தளத்திலிருந்து எம்பி எழுத்து எனும் படிநிலையை எட்டிய ஆண்டு. இந்தியா சென்று திரும்பியதும் பிப்ரவரி மாதம் வலைத்தளம் துவங்கி ஆண்டிறுதிக்குள் நூறு பதிவுகளுக்குமேல் எழுதியிருக்கிறேன், நிறைவாகவே உணர்கிறேன்.
சிந்தனைகளைக் கோர்த்துக்கொண்டு அதை எழுத்தாக மாற்றுவது ஒரு உன்னத நிலை. ஒவ்வொரு பதிவு எழுதியதும் மனது கொள்ளும் எழுச்சி நான் இதுவரை உணராமலிருந்த ஒரு நிலை, அனுபவம். எழுத்து என் சிந்தனைகளின் அடிப்படைகளில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறது என்றே எண்ணுகிறேன். சுற்றி நிகழும் சம்பவங்களையும் அதை நம் அகம் எதிர்கொள்ளும் விதங்களையும் தவறவிட்டுக்கொண்டிருந்தவன், கூர்ந்து அவதானிக்கத் தொடங்கியிருக்கிறேன். மனது எதிர்கொள்வதை வார்த்தைகளாக உருமாற்றத் தொடங்குவதைத் தொடர்ந்து உணர்கிறேன்.
என்னளவில் குறிப்பிடத்தக்க சாதனைகளாக நான் உணர்வது மூன்று புத்தகங்களுக்கு எழுதிய வாசிப்பனுபவம், நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள், ஆசிரியர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதங்கள், இவற்றுடன் நண்பர்கள் ஜெகதீஷ் குமார், மதன், ஜமீலா ஆகியோருடன் மாதம்தோரும் நிகழ்த்திய இலக்கிய உரையாடல்கள். இன்னொரு நிகழ்வு பூன் காவிய முகாம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்களைச் சந்தித்தது, ஆசிரியர் ஜெயமோகனுடன் மூன்று அரிய நாட்களை செலவிட்டது ஆகியவற்றையும் சொல்லவேண்டும். தமிழ் விக்கி தளத்துக்காக நூற்று எழுபது பதிவுகளை எழுதியதும் நிறைவளிக்கிறது.
நான் எண்ணிய அளவு வாசித்தேனா என்றால் மனம் இல்லை என்றே சொல்கிறது. வாசித்தவற்றில் குறிப்பிடத்தக்க புத்தங்களாக பின் தொடரும் நிழலின் குரல் நாவல், வெண்முரசு வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் நாவல்களையும், புறப்பாடு, சித்தார்த்தா நாவல்களையும் சொல்லலாம். கவிதைத் தொகுப்புகள் பலவற்றை வாசித்திருந்தாலும் கவர்ந்தவை என்று ஆனந்த்குமாரின் டிக் டிக் டிக், போகன் சங்கரின் வெறுங்கால் பாதை, தேவதச்சனின் கடைசி டினோசர் ஆகியவை நினைவுக்கு வருகிறது.
இலக்கியம் தவிர தனிப்பட்ட முறையில் நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். T7 Tournament ஒன்றை வென்றது, இறுதிப்போட்டியில் சிறந்த ஆட்டக்காரனாக அறிவிக்கப்பட்டது ஆகிவற்றைச் சொல்லலாம். பெரும்பாலான நாட்களை மகிழ்ச்சியுடனும், நிறைவுடனுமே செலவிட்டிருக்கிறேன். எடைதூக்கும் பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் சற்றே பின்வாங்கிவிட்டது. நாற்பதுகளைத் தாண்டிய உடலுக்கு இவை மிகவும் அடிப்படைத் தேவைகள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
நான் இதுவரை புத்தாண்டு உறுதிமொழிகள் என்று எதையும் எடுத்துக்கொண்டவனில்லை. ஆனாலும் செய்ய எண்ணுபவை என்று சில்வற்றைச் சொல்லமுடிகிறது. முதலில் வருவது வாசிப்பு - ஆயிரம் மணிநேரம் வாசிப்பு சாத்தியமாகாமல் போகலாம், ஆனால் சென்ற ஆண்டை விட இன்னும் நிறைய வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன், குறிப்பாக ஆங்கிலப் புத்தங்கள். நண்பர்கள் ஜெகதீஷ் குமாரும், மதனும் வழிகாட்டிகளாக இருக்கையிலும் ஆங்கிலத்தில் வாசிக்க ஒருவகை சோம்பல், விருப்பமின்மை. இந்த ஆண்டு இவற்றைக் கடந்து செல்லவே விரும்புகிறேன்.
சென்ற ஆண்டை விட இன்னும் அதிகமாக எழுதவேண்டும் என்பது பட்டியலில் அடுத்து வரும் ஒன்று. சென்ற ஆண்டின் கடைசி சில மாதங்களில் அதிகமாக எழுதாமல் இருந்திருக்கிறேன், இந்த ஆண்டு தொய்வில்லாமல் தொடர்ந்து எழுதவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன். தொடர்ந்து கவிதைகளை எழுத மன அமைப்பை நீட்டித்துக்கொள்ளவும், முடிந்த அளவு சிறுகதைகள் எழுதவும் முயலவேண்டும். வாசித்து முடிக்காமல் விட்டுவிட்ட புத்தகங்களையும், எழுத எண்ணி பாதியில் நின்றுகொண்டிருக்கும் வாசிப்பனுபவங்களையும் முடிக்கவேண்டும். தமிழ் விக்கி தளம் என்னுடைய வாசிப்பு, எழுத்து ஆகிவற்றின் நேரத்தை பெருமளவு எடுத்துக்கொண்டாலும், இயன்ற அளவு அங்கு தொடர்ந்து பங்களிப்பாற்றவேண்டும் என்றே விரும்புகிறேன்.
பாரம்பரிய இசை கேட்கவேண்டும். இசை கேட்கவென தனிப்பட்ட கவனம் செலுத்தவேண்டும். இதுவரை அறிந்துகொள்ளாத பரிச்சயம் இல்லாத இசை அனுபவங்களைப் புதிதாகப் பெறவேண்டும். புற ஓசைகளை மட்டுப்படுத்தும் Bose Headphone வாங்கியிருக்கிறேன், இசைகேட்க விரும்பும் முயற்சிகளுக்கு அதைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும்.
தனிப்பட்ட வாழ்வில் இன்னும் உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும். இந்த முயற்சிகளை சென்ற ஆண்டு நவம்பரிலிருந்தே செய்துகொண்டிருந்தாலும், தொடர்ந்து இந்த வழக்கங்களைப் பேணவேண்டும். உடல் எடைக்குறைப்பு, ஓட்டப்பயிற்சி என தொடர்ந்து ஈடுபடவேண்டிய செயல்கள் நீண்டு கிடக்கின்றன. இவற்றை அதீதப் பற்றாக அணுகாமல், இயல்பான வழக்கங்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். மனைவியிடமும், மகனிடமும், நண்பர்களிடமும் இன்னும் கருணையுடனும், அன்புடனும் நடந்துகொள்ளவேண்டும்.
காலம் யாருக்காகவும் காத்துக்கொண்டிருப்பதில்லை, வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆசிரியர் ஜெயமோகன் தனிப்பட்ட செயல்கள், சாதனைகள் இவற்றுக்கப்பால் மகிழ்வாக வாழ்வதே பிரதானம் என்று சொல்கிறார். அவருடைய கூற்றையே என்னுடையதாக எடுத்துக்கொள்கிறேன், இந்த ஆண்டு எனக்கும் என் சுற்றத்தாருக்கும் மகிழ்வான ஒன்றாக அமைய எல்லாம் வல்ல இறைசக்தியை வேண்டுகிறேன்.
Comments
Post a Comment