வர்ணகலா, சிறுகதை - ஷோபாசக்தி, வல்லினம்

                                                 

எழுத்தாளர் ஷோபாசக்தி தமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர் என்று அறியப்படுகிறார். சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவரும் அவரை தமிழ்ச் சிறுகதைகளில் உச்ச சாத்தியங்களை நிகழ்த்திய கலைஞர் என்றே எண்ணுகிறார்கள். அவருடைய சிறுகதைகள் சிலவற்றை இணையத்தில் வாசித்திருக்கிறேன், நாவல்களையோ மற்ற தொகுப்புகளையோ தொடர்ச்சியாக வாசித்ததில்லை. ஜனவரி மாத வல்லினம் இணைய இதழில் அவருடைய வர்ணகலா என்ற சிறுகதை வெளியாகியுள்ளது.

இலங்கையின் அரசியல் சூழலால் புலம்பெயர்ந்து வாழும் தமிழினம் இன்று இரு பத்துவருடங்களைக் கடந்திருக்கிறார்கள். தாம் அடைந்த அயல் இடங்களில் ஆழமாக வேறூன்றியுமிருக்கிறார்கள். கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, பிரிட்டன் என்று படர்ந்து வாழ்கிறார்கள். தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவனாக, இலங்கைத் தமிழர்கள் குறித்து ஒற்றைப்படையான பிம்பங்களையே இதுவரை அடைந்திருக்கிறேன். அதைப் பொதுவாக ஒருவகை கரிசன நோக்கு என்று கருதலாம், அல்லது அதீதப் புனிதப்படுத்துதல்.

புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலையும், தேடல்களையும், மன அமைப்புகளையும் புரிந்துகொள்ள இலக்கியம் ஒரு நுழைவாயிலாக அமைகிறது. ஷோபாசக்தியின் இந்தக் கதை நம்முடைய போலிக் கரிசனப் பார்வைகளை நேர்த்தியாகத் தகர்த்தெறிகிறது. பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் தொழிலில் வெற்றிபெற்று சமூகத்தில் உயர்ந்த அடுக்கில் இருக்கும் குடும்பத்தினரைச் சுற்றி அமைக்கப்பட்ட சிறுகதை.

வயதடைந்துவிட்ட தன்னுடைய பெண்ணுக்கு பெரிய பொருட்செலவில் சடங்கு செய்ய விழைகிறார் பாலப்பா. ஹெலிகாப்டரில் வந்திறங்குதல், யானை ஒன்றில் வலம், சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களின் இசை, வெளிநாட்டு டிஜே ஒருவனுடைய நெறிப்படுத்தல், ஆடம்பர விருந்து, மதுக்கூடம், வானில் அலைந்து காட்சிகளைப் படம்பிடித்தல் என மிக ஆடம்பரமான விழா. மகள் மிதுனாவுக்கும் இந்தச் சடங்குகள் பிடித்தே இருக்கின்றன. மிதுனாவுக்கு தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியை வர்ணகலா உடனிருந்து விழாவைச் சிறப்பாக அமைந்துக்கொடுக்கிறார்.

பிரான்சின் 'ரென்' கல்லூரியில் அரசறிவியல் படித்துக்கொண்டிருக்கும் மிதுனா, இலங்கையில் நாற்பது வயதொத்த ஒரு பெண்மனி தலை கல்லால் நசுக்கிக் கொலைசெய்யப்பட்டிருக்கும் செய்தியைக் காண்கிறாள். அந்தப் பெண்மனி வெளிநாட்டிலிருந்து ஊருக்கு விடுமுறைக்கு வந்தவர் என்பது உபசெய்தி. அது வர்ணகலா என்றே மிதுனா எண்ணுகிறாள். தலை முற்றிலும் நசுங்கிவிட்ட நிலையில் அடையாளம் காண்பது கடினமாக இருக்கிறது. பின் வீட்டுக்குத் திரும்பி தன்னுடைய வயதைடைதல் சடங்கில் வர்ணகலா இடம்பெற்ற புகைப்படங்களைத் தேடுகிறாள். வர்ணகலா விழாவின் புகைப்படங்களிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டதைக் காண்கிறாள். ஒரே ஒரு புகைப்படத்தில் தன்னருகில் வர்ணகலா இருப்பதைக் காண்கிறாள், ஆனால் அதிலும் அவருடைய தலை முற்றிலும் வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறது.

புலம்பெயர் தமிழர்கள் தம்முடன் பிறந்த நாட்டின் கலாச்சாரங்களையும் பழக்கங்களையும் சடங்குகளையும் மட்டுமா எடுத்துச் செல்கிறார்கள்? சாதியப் பெருமிதமும் அவர்களுடன் விஷமாகத் தொடர்கிறது. வர்ணகலா ஏன் புகைப்படங்களிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதை விவரிக்க ஒரு சம்பவம் சிறுகதையில் வருகிறது, நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. பிறந்த மண்ணில் பொறாமையும் துவேசமும் கூடிக்கிடக்கிறது, வந்தேறிய இடத்திலும் புறக்கணிப்பு தொடர்கிறது. வர்ணகலாக்களை முகமற்றவர்களாகவே வைத்திருக்க சமூகம் விரும்புகிறது.

இந்தச் சிறுகதையை உணர்ச்சிகளற்ற விலகிய பாவனையில் ஷோபாசக்தி சொல்லியிருக்கிறார். தீவிரமான மொழியில் வாசகனிடம் உணர்வெழுச்சியைத் தூண்டும் வகையில் சொல்லியிருக்க பெருவாய்ப்புகளிருந்தும், விலகலான நடையை ஆசிரியர் தேர்ந்தெடுத்திருக்கிறார். சிறுகதையின் முதல் மற்றும் கடைசிப் பத்திக்கான தேவைகளை நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன்.

ஷோபாசக்தி ஏன் மகத்தான சிறுகதையாசிரியராகக் கருதப்படுகிறார் என்பதற்கு மிகச் சரியான சான்றாகவே இந்தக் கதை அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை