அகழ் இதழ், மதார் கவிதைகள்
அகழ் இணைய இதழில் கவிஞர் மதார் எழுதிய ஐந்து கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகளை வாசித்துவிட்டு அவருக்கு எழுதிய குறிப்பு இது.
அன்புள்ள மதார்,
ஒரு இடைவெளிக்குப் பிறகு உங்கள் கவிதைகளை வாசிக்கிறேன், நாம் பேசியும் சில மாதங்களாகிவிட்டன. கடந்த
சில மாதங்களாகவே அதிகம் கவிதைகளை வாசிக்கவில்லை, வேலைப் பளு, மனநிலை என சில காரணங்கள். கவிதை எழுத மட்டுமல்ல, வாசிக்கவும் ஒரு குறிப்பிட்ட மனநிலை
தேவைப்படுகிறதல்லவா? இசை, தேவதேவன்,
ஃபிரான்சிஸ் கிருபா என வாசித்த கவிதைகளும் மனதில் ஒட்டவில்லை.
உங்கள் கவிதைகளைக் கண்டவுடன் மனதில் ஒரு நேர்நிலையான எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்கிறது.
எப்போதும் போல கலவையான உணர்வுநிலைகளைக் கொண்ட கவிதைகள், மிக நல்ல
கோர்வை. எந்தக் கவிதையை வாசித்தாலும் அதில் நான் தவறவிட்டுவிட்ட பார்வைகளைக் குறித்து
ஒரு சிறு சலனம் இருந்துகொண்டே இருக்கிறது. அது உங்களுடைய இந்த ஐந்து கவிதைகளுக்கும்
பொருந்தும். மனமார்ந்த வாழ்த்துகள் மதார்.
கவிதைகளை வாசித்தவுடன் எழுதவேண்டும் என்று தொடங்கிவிட்டேன், இடையில்
பல வேலைகள். நவின் இந்த மாத இதழுக்குக் கட்டுரை கேட்டிருந்தார் என்பதால் அதற்கான வாசிப்பு
எழுத்து என நேரம் கடந்துவிட்டது, உடன் பதில் எழுத முடியவில்லை. நேரமிருந்தால் சொல்லுங்கள்
நாம் பேசலாம்.
போர்வீரன் கண் விழிக்கிறான் –
இந்தக் கவிதையைப் பலமுறை வாசித்துவிட்டேன். கவிதைகளுக்குள் பத்தித்
தொகைகளைச் சரியாகக் கண்டுகொள்வதற்கேகூட ஒரு பயிற்சி தேவைப்படுகிறது. இந்தக் கவிதை மரணம்,
அமைதி, அதிகாரம் என சிலவற்றைக் கூற எத்தனிப்பதாக உணர்கிறேன். வன்முறை நிறைந்த கடந்த
நூற்றாண்டிலிருந்து விழித்துக்கொள்ளும் ஒரு வீரன் எதிர்பார்ப்பது அக்ரோஷமான ஒரு சண்டையை,
ஆனால் படைகள் பிரிந்துசெல்கிறன. கவிதையின் கடைசி வரிகள் எதைக் குறிக்கின்றன? எதிர்காலத்தில்
நிகழும் போர்கள் வெறும் வன்முறை சார்ந்த ஒன்றாக இராது என்பதையா? மனதில் கேள்விகளைக்
கிளர்த்திவிட்டு கவிதை அதன் போக்கில் சென்றுவிடுகிறது. மிக முக்கியமான ஒரு கவிதை என்றே
தோன்றுகிறது.
நானொரு மணல் ஓவியன் –
கவித்துவமும் கற்பனையும் கூடிய ஒரு கவிதை இது. கவிஞர்களுக்கு தந்தை எனும் பிம்பம் எதையோ சொல்லிக்கொண்டே இருக்கிறது. இது தந்தையை இழந்த ஒருவனின், அல்லது தான் எதிர்பார்க்கும் ஒரு தந்தையைத் தானே சமைத்துக்கொள்பவனின், தந்தையின் மேல் சற்று வெறுமைகொண்டிருப்பவனின் கவிதை என எல்லாமுமாகத் தெரிகிறது, என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. வட்டக் கண்களில் தடித்த எறும்புகள் என்பது அற்புதமான எழுச்சிகொண்ட ஒரு பார்வை.
மாயப் பாறை –
ஒரு உறவையும் அதன் உச்சத்தையும் சொல்கிற கவிதை என்று தோன்றுகிறது.
ஒரு புரிதலுக்காக நட்பு என்று எண்ணிக்கொள்கிறேன். ஆதர்சமான ஒரு உறவில் இன்னொருவர் அளிக்க
மற்றொருவர் பெற்றுக்கொள்வது தொடர்ந்து நிகழும். சக உயிருக்காக தன் கடைசிப் புழுவையும்
தரும் அற்பனிப்புகொண்ட சக ஜீவியின் செயலைச் சொல்வதாக வாசிக்கிறேன். அப்படிப்பட்ட உறவுகள்
மாயப் பாறையில்தான் அமர்ந்துகொள்ள முடியும். கவிதையின் தலைப்பு அருமையாக வந்துள்ளது,
ஒரு கவிதைத் தொகுப்புக்கே இந்தப் பெயரை வைக்கலாம்.
4 –
கண்வன் மனைவி உறவுக்குள் ஒரு குழந்தைமையான பாவனை மிக அவசியமானது.
உறவிலுள்ள இருவருமே ஒவ்வொரு தருணத்தில் முதிர்ச்சியையும் குழந்தைமையும் சேர்ந்து பாவித்துக்கொள்கிறார்கள்.
'மனைவிக்குழந்தை' எனும் பதத்தை மிகவும் ரசிக்கிறேன். எனக்கு ஒரு வழக்கமுண்டு, நாற்பது
வயது கடந்தாலும் எனக்குள் ஒரு சிறுவன் ஏங்கிக்கொண்டே இருக்கிறான். சூழலும் தோற்றமும்
என்னை முதிர்ந்தவனாக நடிக்கச் சொல்கிறது. நான் காணும் மற்ற மனிதர்களிடமும் இப்படி ஒரு
குழந்தை இருக்குமல்லவா? அதை எப்படி அவர்கள் கடந்துவிட்டு ஒரு முதிர்ந்த தோரணையைக் கழட்டாமல்
நடிக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே இருப்பேன். அது எழுபது வயது முதியவரைக் காண்கையிலும்
எனக்கு எழுகிறது. நமக்குள் உள்ள குழந்தைமையைப் பேசும் கவிதை என்றும் இதை எண்ணுகிறேன்.
அமர்விடம் –
இந்தக் கவிதை பிரபஞ்சத்தில் நம்முடைய தற்காலிக இருப்பின் நிலையற்ற தன்மையைப் பேசுகிறது, தனக்கான இடம் ஒன்றைக் கற்பனை செய்துகொள்ளும் ஒருவனின் அகந்தையையும் சொல்கிறது. சிறுமியும், கடலும், நங்கூரமிட்ட படகும் வந்த பிறகு கவிதை வேறொன்றாகிறது, தத்துவார்த்தமான ஒரு தளத்துக்கு மிக இயல்பாக நகர்கிறது.
Comments
Post a Comment