கலாப்ரியா கவிதைகள், கவிதைகள் இதழ்

                                             

ஜனவரி மாத கவிதைகள் தளத்தில் கவிஞர் கலாப்ரியாவின் கதைகள் குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் பிரதி இங்கு,

கலாப்ரியாவின் கவியுலகு

கவிஞர் கலாப்ரியா தன்னுடைய கவிதைகளுக்கான கச்சாப் பொருட்களை தன்னைச் சுற்றி வாழும் அன்றாட மனிதர்களின் எளிய வாழ்விலிருந்தே பெற்றுக்கொள்கிறார். புறச்சூழலையும் அதன் இயக்கங்களையும் கூரிய நிலையில் காட்சிப்படுத்தி வாசகனிடம் அளிக்கிறார். அகவயமான உணர்வு வெளிப்பாடுகளால் நிறைந்த, வாசகனிடம் பூடக மொழியில் உரையாடும் பெரும்பாலான நவீனக் கவிதைகளிலிருந்தும், கவிஞர்களிடமிருந்தும் அவருடைய கவிதைகளும், கவியாளுமையும் தனித்து நிலைகொள்கின்றன.

ஒரு குறிப்பிட்ட மண்ணின், மனிதர்களின் இயல்புகளைப் பேசினாலும், கவிதைகள் மட்டுமே தன்னுடைய இயல்புகளால் வாசகனில் தீண்டும் பிரத்யேகமான புள்ளிகள் அவருடைய கவிதைகளில் தொடர்ச்சியாக வெளிப்படுகின்றன.

மனிதர்கள்

இந்தக் கவிதை வாழ்வின் இரண்டு ஆதாரமான உண்மைகளைத் தொடுகிறது. ஒன்று துயரங்களிலிருந்து மீண்டெழுந்து வாழ்வைத் தொடர எத்தனிக்கும் ஒரு பெண்ணின் பிம்பம், அது உலகளாவியது. இரண்டு காலம் துக்கங்களுக்கெல்லாம் கருணையுடன் காத்துக்கொண்டிருப்பதில்லை, தொடர்ந்து வாழ்தல் மட்டுமே எதிலிருந்தும் மீள ஒரே பாதை எனும் உக்கிரமான உண்மை.

"சீக்கிரம் போங்கலே - யாராச்சும் வந்துரப் போறாக - எழவு கேக்கதுக்கு" என்ற வரிகளில் சமூகம் இழப்பை எதிர்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மேல் நிகழ்த்தும் வன்முறையை உணரமுடிகிறது. போட்டோக் கண்ணாடியில் முகம் பார்த்து வெறும் நெற்றியை அழுந்தத் துடைக்கும் அந்தப் பெண்ணின் செயலில் ஒளிந்துள்ளது இந்தக் கவிதையின் சூட்சுமம்.

உயிர்த்தெழுதல் -

பிடிவாதம் பிடிக்கும்

செத்துப்போன

கணவனின் ஜாடையிலான

சின்னவளுக்கு

எவர்சில்வர் தட்டை

எடுத்துக் கொடுத்து

பெரியவனையும்

அவசரப் படுத்துவாள்

 

"சீக்கிரம் போங்கலே

யாராச்சும் வந்துரப் போறாக

எழவு கேக்கதுக்கு – "

 

வீட்டைப்பூட்டித்

தெருவில் இறங்கியவள்

திரும்பி வந்து

நெற்றில் பொட்டு வைத்து

விட்டோமா என்று

போட்டோக் கண்ணாடியில்

பார்த்து

வெறும் நெற்றியை

அழுந்தத்துடைத்து

மறுபடி கிளம்புவாள்

 

டவுண்

டீக்கடைகளுக்கு தானே

பால் எடுத்துக் கொண்டு

பதினேழாம் நாள்.

சினேகிதனின் தாழ்வான வீடு ('உலகெல்லாம் சூரியன்' தொகுப்பு, 1993)

இந்தக் கவிதையில் உள்ள தாழ்வான உத்திரம் இயல்பான ஒரு படிமமாக மாறுகிறது. இளம்பிராயத்தில் உலகில் எல்லாமே பெரிதாகக் காட்சியளித்து ஒரு வியப்பை ஏற்படுத்தி நம்மை உயிர்ப்பாக வைத்திருக்கிறது. நாம் வயதடைகையில் வாழும் சூழல் சுருங்கத் தொடங்குகிறது, உலகியல் சலிக்கிறது. 

தந்தை தூக்கிட்டிகொள்ளும் உத்திரம் அவர் இளமையில் அண்ணாந்து பார்த்து வளர்ந்த ஒன்றுதான். வீட்டின் மனிதர்களுக்கு வெவ்வேறாகப் பரிணமிக்கும் உத்திரம், தந்தைக்கு முற்றிலும் வேறொன்றாக மாறுகிறது. கவிதை நம் உலகில் உள்ள உத்திரத்தையும், அதை நோக்கிய நம் அணுகுமுறையையும் கேள்வி கேட்கிறது. 

கறுப்பேறிப்போன

உத்திரம்,

வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு

கையெட்டும் உயரத்தில்.

 

காலேஜ் படிக்கும் அண்ணன்

அதில் அவ்வப்போது

திருக்குறள்,

பொன்மொழிகள்

சினிமாப் பாட்டின்

நல்வரிகள்என

எழுதியெழுதி அழிப்பான்

எழுதுவான்.

 

படிப்பை நிறுத்திவிட்டு

பழையபேட்டை மில்லில்

வேலை பார்க்கும் அண்ணன்

பாஸிங்ஷோ சிகரெட்டும்

தலைகொடுத்தான் தம்பி

விளம்பரம் ஒட்டிய

வெட்டும்புலி தீப்பெட்டியும்

உத்திரத்தின்

கடைசி இடைவெளியில்

(ஒளித்து) வைத்திருப்பான்.

 

அப்பா வெறுமனே

பத்திரப்படுத்தி வந்த

தாத்தாவின் பல

தல புராணங்கள்

சிவ ஞானபோதம்

கைவல்ய நவநீதம்

 

சைவக்குரவர் சரித்திரங்கள்

பலவற்றை,

வெள்ளையடிக்கச் சொன்ன

எரிச்சலில்பெரிய அண்ணன்

வீசி எறியப் போனான்.

கெஞ்சி வாங்கி

விளக்கு மாடத்தில்

அடைத்ததுபோக

உத்திர இடைவெளிகளில்

ஒன்றில் தவிர

அனைத்திலும்

அடைத்து வைத்திருப்பாள்

அவன் அம்மா.

 

முதல்பிள்ளையை

பெற்றெடுத்துப் போனபின்

வரவே வராத அக்கா

வந்தால்

தொட்டில் கட்ட

தோதுவாய்அதை

விட்டு வைத்திருப்பதாயும்

கூறுவாள்.

 

நின்றால் எட்டிவிடும்

உயரம்

என்று

சம்மணமிட்டு

காலைக் கயிற்றால் பிணைத்து

இதில்

தூக்கு மாட்டித்தான்

செத்துப் போனார்

சினேகிதனின்

அப்பா.

புறச்சூழல்

இந்தக் கவிதையில் இருப்பவை சில காட்சிகள், மனிதன் உட்பட சில உயிர்களின் இயல்பான எதிர்வினைகள். நாம் மனதில் வரித்துக்கொள்ளும் காட்சிகளின் இனிமையும், கவிதை வரிகளின் எளிமையுமே இதை மறக்க இயலாத வாசிப்பனுபவமாக மாற்றுகிறது.

வாசகன் எளிய கவிதை போன்று தோற்றமளிக்கும் கவிதைகளைக் குறைத்துமதிப்பிட வாய்ப்பிருக்கிறது, ஆனால் அங்குதான் ஒரு கவிஞனின் மேதமை ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதைத் தமிழில் பல கவிஞர்களின் கவிதைகளிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். அந்த வரிசையில் 'பாதை' கவிதை இயல்பாகச் சென்று அமர்கிறது.

பாதை ('தீர்த்த யாத்திரை' தொகுப்பு, 1974)

குடிசையோரம் ரயிலோடும்

கொட்டில் காளை

தொடை சிலிர்க்கும்

அம்மணச் சிறுமியோ,

புதிய விசிலூதி

ரயிலைக் கூப்பிடுவாள்.

 

தூசிக்குப் பயந்து

வாயும் கண்ணும்

மூடிக் கிடக்கிற,

களத்து மேட்டுத் தொட்டில்

பிள்ளைகளின் கனவெல்லாம்

வண்ணாத்திப் பூச்சி

 

ஊமைத் தவளையை விழுங்கி

நெளியமாட்டாமல், வரப்போரம்

தவிக்கும் சாரைக்காய்

பள்ளிப் பையன்

கல்லைத் தேடுவான் அவன்

பையும் தூக்குச் சட்டியும்

பாதையோரம் தவமிருக்கும்.

விலங்குகள்

மனிதர்களின் உலகைத் தாண்டி நிலத்தின், அங்கு வாழும் விலங்குகளின் சித்திரங்களையும் அவருடைய கவிதைகளில் பரவலாகக் காண முடிகிறது. நகரில் ஊடாடும் பன்றி, இலக்கில்லாமல் அலையும் நொண்டித் தெரு நாய், தாம்புக் கயிற்றை அவிழ்த்துக்கொண்ட வண்டிக் காளை, பாம்பு, காக்கை, பூனை, ஆடு, புறா, ஈக்கள் என அவருடைய கவிதைகளின் மூலம் நெல்லை மற்றும் தென்மாவட்டங்களையும், அதைச் சுற்றிய நிலப்பகுதிகளின் பண்புகளையும் குறித்த ஒரு துல்லியமான புரிதலை வாசகனால் வளர்த்துக்கொள்ள இயலும்.

நிழலை மட்டுமே தேடி ('தீர்த்த யாத்திரை' தொகுப்பு, 1974)

கழுத்துக்கயிறு சகதியில்

குளித்து வீதியில் கோலமிட

மிக அவசரமான நகரவீதியில்

மாட்டு வண்டியின்

காளையொன்று தப்பித்து

தனித்து ஓடியது வேகமாய்

சில கார்கள் வளைந்து விலகின

மிரட்சி தொத்த,

சில லாரிகள் வளைந்து விலகின

 

காலில் மிதிபடும் கயிறு

கழுத்தை இழுக்க

தாள இடைவெளியுடன்

காளை கொம்பசைக்க

பயந்து போயொரு

சைக்கிள் வாத்திச்சி

கேரியர் நோட்டுகளுடன்

கீழே விழுந்தாள்.

 

இன்னொரு கிழவன் ஏசினான்.

"யாரோ சிறுவன்

தன்னைத் தள்ளியதாய்"

 

சிலர் விரட்ட

சிலர் மிரள

காயடித்த வண்டிக்காளை

எதிர்வந்த பசுவுக்காய்

ஏனோ நின்றது.

'அவளின் பார்வைகள்' ('வெள்ளம்' தொகுப்பு, 1973) –

கவிதை தன்னில் மிகச் சரியான முறையில் காட்சிப்படுத்தும் ஒரு பிம்பம், நம்முடைய உணர்வுகளின் வீச்சிற்கு மிக நெருக்கமாக அமைந்துவிடுகையில் அந்தப் பிம்பமும், வரிகளும் ஏற்படுத்தும் கிளர்ச்சி என்றும் உடனிருப்பது. இந்தக் கவிதையில் காலாப்ரியா அந்த மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார், அவருடைய தொடக்காலக் கவிதைகளில் ஒன்று இது.

காயங்களுடன்,

கதறலுடன் ஓடி

ஒளியுமொரு பன்றியைத்

தேடிக் கொத்தும்

பசியற்ற காக்கைகள்.

கவிதைகள் எடுத்தாளப்பட்டிருப்பது 'கலாப்ரியா கவிதைகள்' தொகுப்பிலிருந்து, சந்தியா பதிப்பகம்.

கலாப்ரியா, தமிழ் விக்கி

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை