சிவமயம் சிறுகதை, ஜெயமோகன் - ஒரு பார்வை

                                           

'சிவமயம்' எழுத்தாளர் ஜெயமோகனின் தொடக்ககாலச் சிறுகதைகளில் ஒன்று, 1992ல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்களுடனான மாதாந்திர இலக்கியக் கூடுகையில் சிறுகதையொன்றை விவாதிக்க முடிவு செய்தோம். அதற்கு நண்பர் ஜெகதீஷ் குமார் இந்தக் கதையைப் பரிந்துரைத்தார். சிறுகதையை வாசித்துவிட்டு அதன் மீதான என் எண்ணங்களைத் தொகுத்துக்கொள்ள இந்தப் பதிவை எழுதுகிறேன்.

சுகவனேஸ்வரர் என்றழைக்கப்படும் சிவனின் ஒரு வடிவம் குடிகொண்டிருக்கும் கோவிலொன்றில் நிகழும் கதையை ஒற்றி ஆசிரியர் சிறுகதையை அமைத்திருக்கிறார். இந்தக் கோவில் சேலத்தில் இருப்பதாகவும், கோவிலை ஒட்டிய தொன்மக் கதையொன்றையும் இணையத் தகவல்கள் அறிவிக்கின்றன. 

கதையில் சுகவனேஸ்வரர் குடிகொண்டிருக்கும் லிங்க வடிவச் சிவன் உள்ள கோவில் அதிகக் கவனிப்பற்று இருக்கிறது. சிவனுக்கான பூஜைகள் செய்யும் சம்பு குருக்கள், அங்கு வந்து தங்கி கோவிலைப் பிரசித்தி பெறவைத்த  'சிவா' என்ற பெயரைத் தவிர எதையும் உச்சரிக்காத கிளிச்சாமி, கருணாகரன் எனும் வாட்ச்மேன் ஆகிய கதைமாந்தரைத் தவிர 'சரசா' எனும் தாசிப் பெண்ணின் பெயரும் வருகிறது.

கிளிச்சாமியிடம் 'சரசா' என்ற பெயரையும் அவளுடைய அழகையும் விளக்கும் சம்பு குருக்கள், கிளிச்சாமியிடமிருந்து 'சிவா' என்ற வார்த்தையை மட்டுமே எதிர்வினையாகப் பெறுகிறார். பின் எரிச்சலுற்று விலகிவிடுகிறார். அவருடைய நோக்கம் கிளிச்சாமியின் சிவனை நோக்கிய அர்பணிப்பைக் கேள்வி கேட்பது. சம்பு குருக்கள் அன்றாடம் இறவனுக்கான பணிகளில் இருந்தாலும், இறையின் இருப்பின் மேல் ஒரு சம்சயத்துடன் இருக்கிறார். இறைவனின் இருப்பு உண்மையோ என்றெண்ணி சம்பிரதாயங்களில் ஈடுபடுகிறார். 

இந்தக் கதையில் கிளிச்சாமியின் அருகில் வாழும் கிளிகள் அவருடைய உள்ளத்தின் ஒரு பிம்பத்தையே தாமும் பிரதிபலிக்கின்றன. அவர் மனதில் காம எண்ணங்கள் இல்லாமல் 'சிவா' என்ற பெயரை மட்டுமே உச்சரிக்கையில் அவையும் அந்தப் பெயரை மட்டுமே திரும்பச் சொல்கின்றன. சம்பு குருக்கள் வாயிலாக 'சரசா' என்ற பெயர் அவருடைய மனதில் ஏறிவிடுகிறது. அவருடைய துறவு, அர்பணிப்பு கேள்விக்குள்ளாகிறது. மனதில் கலங்கம் நிறைந்தவுடன் அருகாமைக் கிளிகளும் ஒவ்வொன்றாக 'சரசா' என்றா பெயரையே உச்சரிக்கத் தொடங்குகின்றன. கிளிச்சாமி கிளிகளைக் கொன்று குவிக்கிறார். அவர் கொல்லவேண்டியது மனதில் ஏறிவிட்ட காமம் எனும் இச்சையை.

சராசரி மனிதனின் இயல்பில் இருக்கும் சம்பு குருக்கள் கதையின் முடிவில் இறைவனை அற்பணிப்போடு வழிபடத் தொடங்குகிறார். ஆனால் கிளிச்சாமியோ 'சரசா' என்ற பெண்ணைத் தேடி அலைந்து ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். கதையில் இந்த முரண் அழகாகப் பதிவாகியுள்ளது. காமம் எனும் இச்சை எத்தனை வலிமையானது என்பதை உணர்த்தும் ஒரு கதையாகவே இதை வாசிக்கிறேன்.

ஜெயமோகன் இந்தச் சிறுகதையை துள்ளலான ஒரு நடையில் எழுதியிருக்கிறார். ஒருவகையில் புதுமைப்பித்தனின் தாக்கம் தெரிகிறது, தொடக்காலச் சிறுகதை என்பதால் இருக்கலாம். நண்பர்களின் எண்ணங்களைக் கேட்டால் கதையில் நான் தவறவிட்ட பார்வைகள் தெரியவரும்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை