மேற்கத்திய இசை: எளிய அறிமுகம் கட்டுரை - சொல்வனம்
நண்பர் விவேக் சுப்ரமணியன் 'மேற்கத்திய இசை: எளிய அறிமுகம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. இசை குறித்து தொடர்ந்து பேசும் எழுதும் கலைஞர்களை வாசித்தாலும் பாரம்பரிய இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றை ஆழ்ந்து கேட்பதற்கு மனக்குவிப்பு அமைந்ததில்லை, அதன் அடிப்படைகளிலும் பரிச்சயமில்லை. இசை என்றாலே சினிமா இசை என்று நம்பிய தலைமுறையைச் சார்ந்தவன்.
நாஞ்சில் நாடனின் எழுத்தை வாசித்துவிட்டு பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசையைக் கேட்க முயன்றேன், அதிகபட்சம் பத்துநிமிடங்கள் கேட்கமுடிகிறது, மூச்சுமுட்டி இளையராஜாவுக்கு வந்து நிற்பேன் - இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' தான் ஆசுவாசம் அளிக்கிறது.
மேற்கத்திய இசையைப் பலமுறை கேட்க முயன்றிருக்கிறேன். மனதை எழுத்துக்கும் இசைக்குமாக அசைத்துக்கொண்டிருப்பதை இன்னும் வழக்கமாக வைத்திருக்கிறேன் என்றாலும், அதிகபட்சம் பத்திலிருந்து முப்பது நிமிடங்கள் பாரம்பரிய மேற்கத்திய இசை கேட்க முடிகிறது, பின் இளையராஜாவிடம் சரணடைதலே நிகழும். விவேக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருப்பவர்களில் பலருடைய இசையைக் கேட்டுப் பொறுமையிழந்து வெளியேறியிருக்கிறேன். இந்தப் பெயர்களில் சிலரைத் தவிர மற்றவை எனக்குப் பரிச்சயம் இல்லை, எல்லாம் கூகுளாண்டவர் கருணை.
ஹாலிவுட் படங்களின் பிண்ணனி இசையை மட்டுமே பல மணிநேரங்கள் கேட்க முடிகிறது (American Beauty, Brokeback Mountain, Interstellar, Revolutionary Road, Into the Wild). அந்தப் படங்களின் பிண்ணனி மனதில் பதிந்திருப்பது தொடர்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதை விட்டால் Eminem - இன்னும் உடற்பயிற்சிகளில் உத்வேகம் அளிக்கிறார், பயணங்களுக்கு Country Music. சாரு அறிமுகப்படுத்திய இசைக்கலைஞர் Wim Mertens 'Struggle for Pleasure' நான் என்றும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் இசை, மனதை உருக்கும் அனுபவம்.
இந்தக் குறுகிய வரையறைகள் தாழ்வுணர்ச்சியையும் அளிக்கிறது, அது அகங்காரமாக மாறி இளையராஜாவை மனம் இன்னும் இறுகிப் பிடித்துக்கொள்கிறது. என்போன்றவர்களின் இந்தப் பண்பைத்தான் சாரு நிவேதிதா கேலி செய்கிறார், அதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. இசையை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளவேண்டும் என்ற பரிதவிப்பு தொடர்கிறது. இந்தக் கட்டுரையில் விவேக் இயன்றவரை தன்னுடைய அறிதல்களிலிருந்து மேகத்திய இசை குறித்த எண்ணங்களை எளிமையாகப் பகிர்ந்திருக்கிறார். கட்டுரையின் கலைச்சொற்களும், பட்டியலும், இசை வாத்தியங்களின் பெயர்களுமேகூட எனக்குப் புதியவை, தேடல் கோருபவை.
இசை ரசனை என்பது முழுக்க உணர்வுகள் சார்ந்தது. வடிவமற்று வெறும் ஒலிகளாகத் தீண்டி நம் உணர்வுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இலக்கியம் போலவே தொடர்ந்து ஈடுபடுதல் மூலமும், பயிற்சியின் மூலமும் இசையிலும் ஆழமான தளங்களுக்குச் செல்ல இயலும் என்பதை இந்தக் கட்டுரை வலியுறுத்துகிறது. எனக்கு நான் சொல்லிக்கொள்வது இன்னும் பொறுமையுடன் இசையை அணுகவேண்டும் என்பதையே. இசைக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல் மனதையும் ஆற்றுப்படுத்தும் எனும் அறிதலை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கிறேன்.
Comments
Post a Comment