உறம்பரையான், சிறுகதை

                                         

அந்திமழை இதழ் சுட்டி                                       

நாங்கள் முத்துசாமி தாத்தாவின் வீட்டு வாசலில் கதை கேட்க ஆயத்தமானோம். நாங்கள் என்றால் நான், சக்திவேல், ராஜா அப்புறம் உறம்பரையான் சுப்பிரமணி. உறம்பரையான் என்றால் அசலூர்காரன் அல்லது விருந்தாளி. எங்கள் ஊருக்கு கிழக்கே இரண்டு மைல்கள் தூரத்தில் இருக்கும் குளத்துப்பாளையத்தை சார்ந்த சுப்பிரமணி, கொட்டமுத்து என்று அழைக்கப்படும் நல்லதம்பி மாமாவுக்கு சொந்தம்.

சுப்பிரமணி அவ்வப்போது நல்லதம்பி மாமா வீட்டில் இருப்பான். ஊருக்கு வருகையில் எங்களோடு, குறிப்பாக என்னோடு சேர்ந்து விளையாடவும் கதை கேட்கவும் இணைந்துகொள்வான்.

முத்துசாமி தாத்தாவுடையது பழைய ஓட்டுவீடு. அதில் இரண்டு அறைகளும் நீண்ட ஒரு கூடமும் உண்டு. வீட்டு வாசலின் தரை எப்போதும் தண்ணீரில் எறுமைச் சாணம் கரைத்து தெளிக்கப்பட்டு உலர்ந்து காணப்படும். அதன் வடக்கு மூலையில் ஒரு கயிற்றுக் கட்டிலும், அதை ஒட்டி இரண்டு உயரம் குறைந்த தென்னை மரங்களும் சில வாழை மரங்களும் ஒரு கொய்யா மற்றும் கருவேப்பிலை மரங்களும் இருந்தன. வீட்டின் பின்புறம் மாட்டுக்கொட்டகையும் அதன் கோரம்புல் வேய்ந்த கூரையின் மேல் தன் கிளைகளைப் பரப்பிய முருங்கை மரமும் நின்றிருந்தது

முத்துசாமி தாத்தா அந்தி சாய்கையில் கயிற்றுக் கட்டிலில் தன்னுடைய வெளுத்த பச்சைத் துண்டை உருமால் போல சுருட்டி அதில் தலைவைத்து சாய்ந்திருந்தார். அவர் சட்டை அணிந்து நான் இதுவரை பார்த்ததில்லை. கைகளில் நரம்போடும் நெடிய உடல், வயிறு இருக்கும் பகுதியில் ஒடுங்கிய குழி. மார்பில் வெள்ளை முடிகள் பரவிக்கிடக்கும். அவ்வப்போது மார்பில் விரல்களை விட்டு வெள்ளை முடிகளைத் துளாவுவார். அப்படிச் செய்கையில் எனக்கும் அவருடைய மார்பில் விரல்களை அலையவிடலாம் என்று ஆசையாக இருக்கும்.

கட்டிலில் இருந்து எழுகையில் மடித்து வைக்கப்பட்ட காகிதம் மேல்நோக்கி விரிவதைப்போல மெல்ல சில அடிகள் நடந்து மேலுடலை நேராக்கிக்கொள்வார். அப்போது மட்டும் அவரிடம் வயோதிகம் தெரியும்.

மாலை ஆறு மணிக்கு ஊரே அமைதியுடன் இருளுக்குள் மூழ்கத் தயாராகிவிட்டது. வீடுகள் மரங்கள் மனிதர்கள் என எல்லா உருவங்களும் நிறங்களும் கருமையில் அமிழ்ந்துவிட்டது. பறவை ஒன்று வினோத ஒலி எழுப்பிக்கொண்டு வானில் குறுக்காக கடந்துசென்றது.

உறங்கச் செல்லும் முன் முத்துசாமி தாத்தாவின் வீட்டில் அண்டை வீட்டார் சிலர் ஆண்களும் பெண்களும் எங்களைப் போன்ற சிறுவர்களுமாக கூடியிருப்பது வழக்கம். தாத்தாவின் வீட்டு வாசல் பெரியது என்பதால் நாங்கள் விளையாட மிகவும் உகந்த இடம்.

தாத்தா சுவாரசியமாக கதைகள் சொல்வார். பேச்சின் போக்கிலிருந்து இயல்பாக விலகி பேய்க்கதை சொல்லத் தொடங்கிவிடுவார். அவை கதைகள் போலத் தெரிந்தாலும் அவருடைய சொந்த அனுபவங்கள் மற்றும் உண்மை நிகழ்வுகள். பலவித தருணங்களில் பேய்களை எதிர்கொண்டதை விளக்குவார்.

தாத்தா அவர் ஆழ்ந்து கதைசொல்கையில் கட்டிலில் நிமிர்ந்து அமர்ந்துவிடுவார்.

ஸ்கீம் தண்ணி மொற நம்முளுது. வீட்ல இருந்து கெளம்பரப்ப ரவ பதினொன்னுக்கு மேல இருக்கும். போவும் போதே கரண்டு கம்பத்துல ஆந்த ஒன்னு அவுக்கு அவுக்குனு கண்ணச் சிமிட்டிகிட்டு ஒக்காந்திருந்துச்சு. டார்ச் லைட்ட எடுத்துகிட்டு வடக்கால தோடத்துக்கு போய் பாத்திய வெட்டி தண்ணிய மாத்தியூட்டுகிட்டு இருக்கறேன். மாமா மாமானு கூப்புடுது”, என்றார்.

வாசலில் குண்டு பல்ப் ஒன்று மங்கிய மஞ்சள் நிற வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது. இருளுக்கு வலிக்காத வெளிச்சம். காற்றும் இதமாக வீசியது.

தாத்தா பேய்க்கதைகள் சொல்லும் போது மற்றவர்களுடைய முகபாவனைகளை நோக்குவேன். சக்திவேலும் ராஜாவும் பயம் கலந்த கண்களை விரித்துஐயோ அப்புறம் என்னாச்சு?’ என்பது போல தாத்தாவிடமிருந்து வரப்போகும் அடுத்த சொற்களை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள்.

சுப்பிரமணி கொய்யா மரத்தினை ஒட்டி என்னருகில் இருந்தான். அவனும்அடுத்து என்ன?’ எனும் பாவனையில்தான் இருந்தான்.

வக்காலுத எங்கருந்து சத்தம் வருதுரான்னு பாத்தா மோட்டார் ரூமுக்கு பக்கத்துல இருந்து வருது. பல்பு வேர உட்டு உட்டு எரியுது, சரியாப் பாக்கமுடீல. யாருங்கர, நம்ம வாய்க்கா தோட்டத்து ஆறுமுவம் மவ”, என்று சொல்லி தாத்தா நிறுத்தினார்.

பவுதியாயி நோம்பி கெடாவெட்டு அன்னக்கி தூக்கு மாட்டிக்கிச்சே சுமதி அதா?”, என்று வினவினாள் என்னுடைய அம்மா. கதைக்குள் அனைவரும் உள்ளே வந்துவிட்டதற்கான சான்று இது.

மாமா மாமா, வவுறு ரொம்ப பசிக்குது, கரிக்கொலம்பூத்தி சோறு போடுங்கரா பாத்துக்க”, தாத்தா தொடர்ந்தார்.

இந்தா புள்ள இங்க வார வேல வெச்சுக்காத. நெருப்பு வெச்சு பொசுக்கியூட்ருவம் பாத்துக்கனு சத்தம் போட்டுகிட்டே மம்புட்டிய தூக்கிகிட்டு மோட்டார் ரூமுகிட்ட போறென். பசி தாங்கமுடீல மாமானு தேம்பித் தேம்பி அலுவுது”, என்றார்.

முத்துசாமி தாத்தாவுக்கு பேய்களின் மேல் பயமே கிடையாது, மிகுந்த தைரியசாலி. நான் பெரியவன் ஆனதும் இதுபோலவே இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

கிட்ட போவப் போவ சத்தங் கொறையுது, எடமே காலியாக் கெடக்குது. சின்னப் பவுதியாயிய வேண்டிக்கிட்டு மடிச்சும் தண்ணி பாச்சப் போயிட்டென்”, என்று சொல்லிக் கதையை முடித்தார்.

தாத்தா தேர்ந்த கதைசொல்லி. கதைகளை மிகச் சரியான இடத்தில் முடித்துக்கொள்வார். பிறகு கேட்பவர்களிடம் கதை பெருகி வளரும்.

நான் சுப்பிரமணியிடம்டேய் மணி, ஒனக்கு பயமா இல்லியாடா?”, என்று கேட்டேன்.

அந்தக்கா பாவம்ல”, என்று வருத்தம் தொனிக்கும் குரலில் சொன்னான். அவன் எப்போதுமே இப்படித்தான், மிகவும் இளகிய சுபாவம்கொண்டவன். அதனாலேயே அவனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நான் வெளியூர் பையனான சுப்பிரமணியுடன் எப்போதும் சேர்ந்திருப்பதில் நண்பர்கள் மத்தியில் சற்று பொறாமை.

ஏன்டா எங்களோட சேந்து வெளாட மாட்டேங்கர, தனியாப் போர?”, என்று கேட்பார்கள். எனக்கு சுப்பிரமணியுடன் விளையாடுவதே பிடிக்கும். அவன் இவர்களைப்போல முரட்டுத்தனமாய் விளையாடி சண்டைபோடமாட்டான், சாந்தமானவன்.

முடித்துக்கொண்ட கதையை தாத்தா இன்னொரு நாள் இரவு ஆரம்பித்தார்.

நம்ம கொடச்சலு மவன் பத்துநாள் காச்சல்ல கெடந்தான் தெரியும்ல?”, என்றார்.

ஆமா, பொழச்சதே பெருசில்ல. ஆளே வத்திப் போயிட்டாப்ள”, என்றார் பக்கத்து விட்டு பாலுச்சாமி அண்ணன்.

தண்ணி பாச்சப் போனவந்தான். வீட்ல வந்து படுத்தவன கடுங்காச்ச புடுச்சுகிச்சு. துப்பிட்டி ரவ்வண்டு துப்பிட்டியப் போட்டு போத்திக்கரானாம் பாத்துக்க”, என்றார் தாத்தா.

என்னடா ஆச்சுன்னு கேட்டென். இல்ல மாமா அப்புடியே தூங்கீட்ருக்கவன் ஒடம்பப் போட்டு அமுக்குது. கொரலு குடுக்கப் பாக்கறேன் தொண்டக்குலில சத்தமே வர மாட்டேங்குது. கட்டுலு கால்மாட்லயே நிக்கிது. ம்ம்ம் ம்ம்ம்னு அனத்தரேன். யாருக்குமே தெரியல. நல்லா வேத்துக்கிச்சு பாத்துக்கங்கறான்”.

தாத்தா சொல்லி முடித்த உடன் எனக்கு பயமெடுத்தது. சுப்பிரமணி எப்போதும் போலவே கதையை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

அன்று அந்த அண்ணனின் உடலை அமுக்கியது தூக்கு மாட்டிக்கொண்ட சுமதி அக்காதான் என்று தாத்தா சொன்னார். வெங்கமேட்டு மசூதியில் மந்தரித்த தாயத்தை கட்டிக்கொண்டதால் அவர் மீண்டிருக்கிறார்.

அன்று கதை கேட்க அம்மா வரவில்லை. என்னுடைய வீடு அதே தெருவில் மூன்று வீடுகள் தாண்டி இருந்தது. தாத்தா வீட்டிற்கும் எங்கள் வீட்டிற்குமான இடைவெளியில் அதிகம் வெளிச்சம் இருக்காது. எனக்கு இருளில் தனியாக வீடு திரும்ப பயம்.

டேய் மணி, என்னய வீட்ல கொண்டாந்து விடுறியா?”, என்று கேட்டேன். அவன் என்னோடு சேர்ந்து வந்ததால் இருளில் பத்திரமாக வீடுவந்து சேர்ந்தேன். அவன் என்னை விட்டுவிட்டு இருளில் மறைந்துவிட்டான்.

ங்கள் ஊரில் சிறுவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு தாண்டுவதற்குள் கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்கப்படும். நீச்சல் என்பது அன்றாட வாழ்விற்கு அவசியமான ஒரு திறன் என்று கருதப்பட்டதால் அது ஒரு விதியாகவே பின்பற்றப்பட்டது. நீந்தத் தெரியாமல் இருப்பது ஒருவகை குறை என்றே பார்க்கப்பட்டது.

பள்ளி முழு ஆண்டு விடுமுறையில் முத்துசாமி தாத்தா எங்கள் அனைவருக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்தார்.

அவர் நீச்சல் கற்றுக்கொடுப்பதற்கு பெயர்போனவர், பல ஆண்டுகள் அனுபவம்கொண்டவர். இன்று ஊரில் பெரியவர்களாக இருக்கும் பலரும் அவரிடம் நீச்சல் கற்றுக்கொண்டவர்கள்தான். தாத்தா எங்கள் ஊரில் மட்டுமல்லாமல் பக்கத்து ஊர்களுக்கும் சென்று சிறுவர் சிறுமியர்களுக்கு நீச்சல் பழக்கிவிடுவார்.

நீச்சல் பழகுவதற்காகவே பெரிய சுரைக்காய்களாகப் பார்த்து அவற்றை செடியிலேயே முற்றவிடுவார்கள். முற்றிய காய்கள் வெயிலில் வீட்டின் கூடாரங்களில் கொடியோடு சேர்ந்து காய்ந்துகொண்டிருக்கும். சுரைக்குடுக்கைகளின் மேல்ஓடு உறுதியாகவும் உடல் எடையற்றும் இருக்கும். நன்றாக காய்ந்த சுரைக்குடுக்கைகளை தண்ணீருக்குள் அமிழ்த்த பெரியவர்களால்கூட முடியாது.

சுரைக்குடுக்கைகள் எங்கள் பள்ளியில் வேதியல் ஆய்வுக்கூடத்தில் இருக்கும் கண்ணாடிக் குடுவைகளின் வடிவத்தை நியாபகப்படுத்தும். ஒரே வித்தியாசம் சுரைக்குடுக்கைகள் பெரிய பானை போன்ற உடலும், காற்றுப் போல இலகுவாகவும் இருப்பவை. சுரைக்குடுக்கைகளில் சனல் கயிற்றை இணைத்து எங்களுடைய இடுப்பில் சுற்றிக் கட்டி கிணற்று நீருக்குள் இறக்கிவிட்டார் தாத்தா.

தண்ணீரில் முதலில் இறங்கும்போது சில்லென்று உடல் சிலிர்த்தது. பின் சீக்கிரமே உடலின் வெப்பம் குளிரை ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு தண்ணீர் மிதமான சூட்டில் இதமாக இருந்தது.

நீச்சல் கற்றுக்கொள்ளும்வரை சுரைக்குடுக்கைகளின் தயவில் நீரில் மூழ்காமல் மிதந்துகொண்டு கைகால்களை அடித்துக்கொண்டே இருக்கலாம். உடல் தளர்கையில் அப்படியே அசைவில்லாமல் மிதக்கலாம். தாத்தா எங்களை இரண்டிரண்டு பேர்களாக பிரித்து கிணற்றில் இறக்கிவிட்டார்.

எனக்கு கொஞ்சம் நீச்சல் கைகூடியதும் சுரைக்குடுக்கையை இடுப்பிலிருந்து அவிழ்த்துவிட்டு அடிவயிற்றுக்கு கைகளை முட்டுக்கொடுத்து நீந்தச் சொன்னார். என்னுடன் மெல்ல தாத்தாவும் நீந்திக்கொண்டு வந்தார்.

நீச்சல் பழக ஊரிலேயே பெரிய கிணற்றை தாத்தா தேர்ந்தெடுத்தார். நெடுஞ்சாலையை ஒட்டிய கிணறு அது. நாங்கள் பழகிய கிணற்றில் நீச்சல் தெரியாமல் சிலர் மூழ்கி இறந்த கதைகளை தாத்தா சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால் தாத்தா எங்களுடன் இருப்பதால் பயமில்லாமல் இருந்தோம்.

நீச்சல் கற்றுக்கொள்ள தண்ணீர் குறித்த பயத்தை முதலில் உதறித்தள்ளவேண்டும். ராஜா தண்ணீரின் மேல்கொண்ட பயத்தால் அழுதுகொண்டே நீச்சல் கற்றுக்கொள்ள வந்தான். ஒருமுறை கிணறு வரை வந்தவன் ஓடிவிட்டான். வயல்வரப்புகளில் ஓடியவனை ஒருவழியாகப் பிடித்து நீச்சல் கற்றுக்கொள்ள அழைத்துவந்தார்கள்.

நீச்சல் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் நான் சுப்பிரமணியை கிணற்றுக்கு அழைத்தேன். மற்ற நண்பர்களை விட சுப்பிரமணியுடன் சேர்ந்து நீச்சல் கற்றுக்கொள்வதையே விரும்பினேன்.

அவனை அழைக்க நல்லதம்பி மாமாவின் வீட்டை ஒட்டிய தெருவுக்கு சென்றேன். பொதுவாக சிறுவர்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து ஊர் சுற்றுவதையும் விளையாடுவதையும் பெரியவர்கள் விரும்புவதில்லை. அதனால் மெல்ல நண்பர்களின் வீட்டு வழியாக வேறு வேலையாக செல்வதைப்போல பாசாங்கு செய்துகொண்டு தெருவிலிருந்து வீட்டை நோக்குவோம்.

நண்பர்களுடன் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்குத் தெரியாமல் சைகையில் அழைப்போம். நாங்கள் கூட்டாளிகளை அழைப்பதை அறிந்தால் பெரியவர்கள் விரட்டுவார்கள்.

அன்று நல்லதம்பி மாமா மட்டும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து எதையோ உலர்த்திக்கொண்டிருந்தார். சில நொடிகள் கழித்து அவருக்கு அருகில் சுப்பிரமணி இருப்பதைக் கண்டுகொண்டேன். அவனிடம் சைகையில் வெளியே வருமாறு அழைத்தேன். அப்புறம் வருவதாக சைகையிலேயே பதில் கூறினான்.

அன்று மாலை இருள் சூழ்கையில் முத்துசாமி தாத்தாவின் வீட்டு வாசலில் சுப்பிரமணியை சந்தித்தேன்.

டேய் மணி, வாடா நீயும் நானும் சேந்து நீச்சல் கத்துக்கலாம். அப்புறம் நாமலே எல்லாக் கெணத்துலயும் போய் குதிக்கலான்டா”, என்று உற்சாகமாக சொன்னேன்.

நான் வரல”, என்று உடனடியாக மறுத்தான். அவன் அப்படிச் சொன்னது விசித்திரமாக இருந்தது.

ஏன்டா, ஒனக்கு கெனருனா பயமா?”, என்று கேட்டேன்.

இல்லடா, நான் வரல”, என்று பொதுவாக சொல்லிவிட்டு நகர்ந்தான். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

ஒருவேளை அவன் அவர்களுடைய ஊரிலேயே நீச்சல் கற்றுக்கொண்டுவிட்டானோ? அப்படியென்றால் எங்களுடன் நீந்தவாவது வரலாம் இல்லையா? அவனிடம் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணி விட்டுவிட்டேன்.

வேறு வழியில்லாமல் ராஜாவுடனும் சக்திவேலுடனும் சேர்ந்து நான் கிணற்றில் நீச்சல் கற்றுக்கொண்டேன். இரண்டு நாட்களில் ஏத்துக்கட்டில் இருந்து கிணற்றின் நீருக்குள் குதிக்கும் அளவு கற்றுக்கொண்டுவிட்டேன். சக்திவேலும் ராஜாவும் இரண்டு வாரங்களாக முத்துசாமி தாத்தாவிடம் திட்டுவாங்கிக்கொண்டு கற்றுக்கொண்டார்கள்.

அவர்கள் திட்டு வாங்குவதை சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டே நான் சுரைக்குடுக்கையின் துணை இல்லாமல் உற்சாகமாக நீந்தினேன்.

நான் நீச்சல் கற்றுக்கொண்ட செய்தியை சுப்பிரமணியிடம் சொல்ல ஆர்வமாக இருந்தேன். உயரத்தில் இருந்து சுரங்கம் பாய்வது, மூச்சைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் போய் வெளியே வருவது என செய்வதற்கு எத்தனை ஆர்வமூட்டும் செயல்கள் இருக்கின்றன? இவனுக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது, கிணற்றுப் பக்கமே வர மறுக்கிறானே என்று எனக்கு ஆதங்கமாய் இருந்தது.

க்டோபர் மாதம் ஒருநாள் எப்போதும் போல முத்துசாமி தாத்தாவின் வீட்டு வாசலில் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தோம். சுப்பிரமணியின் மீது எனக்கிருந்த கோபம் மறைந்துவிட்டது, கிணறு குறித்து அவனிடம் நானும் பேசுவதில்லை.

காலையிலிருந்து லேசாக மழைத்தூரல் விழுந்ததால் தரை குளிர்ந்து கிடந்தது. தாத்தா கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் பக்கத்து ஊரான குளத்துப்பளையத்தில் கிணற்றில் நீந்தச் சென்ற ஒருவருடைய கதையை சொல்லத் தொடங்கினார்.

பட்டப் பகல்ல கெணத்துக்கு போயிருக்கான்.அண்ணா ரொம்பக் குளூருது, என்னைய மேல ஏத்தியூடுனானுமெலீசா ஒரு சத்தம் வந்திருக்கு. சின்னப்பய கொரலாட்டம் கேட்டிருக்கு. போனவென் வெடவெடனு வந்து கெனத்த விட்டு வெளிய ஒடியாந்திருக்கான். வந்தவனுக்கு நல்லா ஜன்னி கண்டுகிச்சு”, என்று சொல்லி நிறுத்தினார்.

கூடி இருந்தவர்கள் அவர் தொடர்ந்து பேசட்டும் என்ற எதிர்பார்ப்புடன் அமைதியாக காத்திருந்தோம்.

கொரலு குடுத்தபய யாருங்கர? நான் நீச்ச கத்துக்குடுத்தவந்தான். நல்லா தவளக்குட்டியாட்டம் நீஞ்சுனானப்பா. இங்க கூட அப்பப்ப வருவானே. நம்ம நல்லதம்பி தங்கச்சி மவென் சுப்பிரமணி. ரெண்டு வருசம் முன்னாடி கெனத்துமேட்ல வெளையாடிக்கிட்டு இருந்தவென் தவறி உலுந்து அடிபட்டு மூழுவீட்டான். உலுந்தவன் மயக்காமாவே கெடந்திருக்கான், யாரும் பாக்கல, பாவம் உசுரு போயிருச்சு”, என்றார்.

தாத்தாவின் வார்த்தைகளை முழுதாகப் புரிந்துகொள்வதற்கு முன்னரே என் உடல் நடுங்கத் தொடங்கியது. அருகில் இருந்த சுப்பிரமணியை நோக்கி மெல்ல தலையைத் திருப்பினேன்.

அவன் தாத்தாவையே சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை