சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் - ஒரு கடிதம்

                                                    


வணக்கம் சதீஷ்,


கவிதைகளை வாசித்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தன. உங்களுடைய கவிதைகளின் மேல் எனக்கு எப்போதுமே தீராத ஈர்ப்பு உண்டு. உயிர்மை வெளியிட்ட உங்களுடைய முதல் தொகுப்பை வாசித்திருக்கிறேன், அதில் ஏனோ நீங்கள் முழுமையாக வெளிப்படவில்லை என்றுதான் தோன்றியது. அப்படித் தோன்றியதற்கு இன்னொரு காரணமும் உண்டு, ஜெயமோகன் தளத்தில் நீங்கள் அதற்கு பின் எழுதிய கவிதைகளை வாசித்திருந்தேன் என்பதுதான். 


கவிதைகளை இருண்மை, மகிழ்ச்சி என்றெல்லாம் வரையறுத்துக்கொண்டு வாசிப்பதில் எனக்கு ஆர்வமில்லை, அது கவிதை அளிக்கும் அனுபவத்தை குறுக்கிக்கொள்ளும் செயல் என்பது என் எண்ணம். கவிதை அதற்கே உரிய ஒரு மாயத்தை வாசகனுக்கு கடத்துகிறதா என்று மட்டுமே என் வாசிப்பில் தேடுகிறேன்.


உங்களுடைய பத்து கவிதைகளும் அதற்கே உரிய மாயத்தை நிகழ்த்துகின்றன. காலையில் எழுந்தவுடன் கவிதைகளை வாசிப்பது, அதற்குள் அலைவது மனிதன் என்ற பிரக்ஞை அளிக்கும் அளவற்ற மகிழ்ச்சிகளில் ஒன்று.


கவிதை வாசித்தவுடன் ஏற்படும் அனுபவத்தை வார்த்தைகளால் எழுதும் போதும் எப்போதுமே அவை நாம் பகிர விரும்பும் உணர்வுகளிலிருந்து தொலைவுகொள்கின்றன, சொல்ல வருவது நீர்த்துப்போய்விடுகிறது. ஆனாலும் பதில் சொல்ல அதைச் செய்யவேண்டியிருக்கிறது.


உங்களுடைய கவிதைகளில் ஏக்கம், தனிமையின் துயர் மற்றும் எக்காளம், அர்த்தம் தேடி அலையும் தீராத விருப்பு, வாழ்வின் மீது எங்காவது ஒரு ஒளி வீசிவிடும் என்று எண்ணும் நம்பிக்கை என எல்லா உணர்வுளையும் காண்கிறேன். பத்து கவிதைகளிலும் ஒரு தொடர்ச்சியை என்னால் உணரமுடிகிறது.


‘அலைக்கழிகின்றன எறும்புகள்’ எனும் படிமம் எனக்கு அளிக்கும் உளஎழுச்சியை விளக்கிவிடமுடியாது.


‘மீதமிருக்கும் நம்பிக்கையே 

நீ இப்போது சொல்லாகாதே’


‘சொல்லத் தவறிய சொல்

மௌனித்திருக்கிறது’


‘ஆழ்ந்துபடிகிற இலைகளின் கனவு’


‘படர்க தாவரமே’


போன்ற வரிகளுக்காகவே நான் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். இதில் சதீஷ்குமார் எனும் கவிஞனின் முத்திரை நன்றாகவே விழுகிறது.


நண்பர்களிடம் கவிதைகளை வாங்கி அனுப்புங்கள் என்றுதான் சொல்வனத்தில் முதலில் கேட்டிருந்தார்கள். இப்போது அவற்றில் நீங்களே சில கவிதைகளை தேர்ந்து அனுப்பவும் என்ற கடினமான ஒரு செயலை அளித்துவிட்டார்கள். ‘இதென்னடா கரூர்காரனுக்கு வந்த சோதன’ - My mind voice. 


பத்து கவிதைகளில் (‘எங்கும் நல்ல செய்திகளே இல்லை’ கவிதை இரண்டுமுறை வந்திருந்தது, அதனால் பத்து) நான் ஐந்தை குழுவினருக்கு அனுப்புகிறேன். ஐந்து கவிதைகளை மட்டுமே நான் அனுப்புவது பத்திரிக்கை பதிப்பிக்க அளித்த அளவு சார்ந்த நிர்ப்பந்தம் காரணமாக மட்டுமே, வேறெந்த காரணமும் இல்லை. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.


கேட்டவுடன் கவிதைகளை அனுப்பியதற்கு மீண்டும் நன்றிகள். வேறேதும் சொல்வதற்கு இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள். தொடர்பில் இருப்போம்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை